Saturday, December 12, 2009

செம்மை நெல் சாகுபடி - பகுதி II


செம்மை நெல் சாகுபடி - பகுதி I



நாற்றங்கால் தயாரிக்கும் முறை:


1 ஏக்கர் நடவு செய்யத்தேவையான விதை அளவு சுமார் 3 கிலோ ஆகும். 100 ச.அடி நாற்றங்கால் பரப்பு போதுமானது. முதலில் 100 ச.அடிக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்கும்போது மண்ணுடன் சுமார் 5 தட்டு அளவு தொழு எரு மற்றும் 1/4 கிலோ டி.ஏ.பி உரம் சேர்த்துக்கொண்டு மண்ணுடன் நன்கு மண்வெட்டி கொண்டு கலக்க வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட படுக்கையின் மேல் நேர்த்தி செய்யப்பட்ட நெல் விதைகளை அந்த மேட்டுப் பாத்தியில் சீராக விழுமாறு தூவ வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர்பாய்ச்ச வேண்டும். இவ்வாறு சுமர் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பாய்ச்சியபின் மேட்டுப்பாத்தியைச் சுற்றி தண்ணீர் கட்டலாம். சுமார் 15 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு வயலில் நடுவதற்கு ஏற்றது.


நடவு வயல் தயாரித்தல்:


சாதாரணமாக நடவு வயல் தயாரிக்கும் முறையிலேயே இதற்கும் நடவு வயல் தயார் செய்தால் போதுமானது. மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையான அடியுரம் இட்டு வயலை சமன் செய்ய வேண்டும்.


நாற்று நடவு:


15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நாம் ஒரு கூடையிலேயே அள்ளி நடவு வயலுக்கு கொண்டு வர இயலும். மேட்டுப்பத்தியில் வளர்ந்துள்ள நாற்றுகளை அடியோடு பெயர்த்து cake slice போல கொண்டு வரலாம். பின்னர் தயார் செய்த நாற்றுகளை ஒரு குத்துக்கு 1 நாற்று வீதம் நட வேண்டும். வரிசைகளுக்கு இடையிலான இடைவெளியும், நாற்றுகளுக்கான இடைவெளியும் ஒன்றே. 22.5 செ.மீ (9") இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும் (சதுர நடவு). For all practical purposes ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் நடுவது நல்லது. ஏனெனில், ஒரு நாற்று அழுகினாலோ, இறந்தாலோ மற்றோறு நாற்று பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவும். மேலும் கை வசம் சிறிது நாற்று stock வைத்திருப்பது அவசியம். இவை பின்னர் Gap filling க்கு உதவும்.

நீர்ப் பாசனம்:

ஒரு முறை 2" அளவிற்கு நீர் கட்டினால் பின்னர் அது நிலத்தில் குறைந்து மயிரிழை அளவு மண்ணில் வெடிப்பு தென்படும்போது அடுத்த முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு காய்ச்சலும் பாய்ச்சலும் நீர்ப்பாசன முறை என்று பெயர்.

களை மேலாண்மை:

பயிர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதால் களை வளர வாய்ப்புள்ளது. இதற்கு கோனோ வீடர் என்னும் களைக்கருவியை நட்ட 15 நாட்களில் இருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்களுக்கு வயலில் ஓட்ட வேண்டும். இதனால் களைகள் மடிவதோடு, வேர்ப்பகுதிகளில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு பயிர் நன்கு கிளைக்கவும் அதிக தூர்கள் வெடிக்கவும் உதவுகிறது

தழைச்சத்து மேலாண்மை:


மேலுரமாக அளிக்கப்படும் தழைச்சத்து controlled application ஆக இருக்க இலை வண்ண அட்டையை பயன்படுத்தலாம். இது visual observation comparison மூலம் செயல்ப்டுகிறது. இலை வண்ண அட்டையை பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பயிரின் வளர்ந்துவரும் 3வது இலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து அளிக்கலாம். இலை வண்ண அட்டையின் பின் பகுதியிலேயே இதற்கான வழிமுறைகளும் பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

செம்மை நெல் சாகுபடி முறையின் சாதக மற்றும் பாதக அம்சங்கள்:


சாதக அம்சங்கள்:


1. சீரான இடைவெளி இருப்பதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள், காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி போட்டியின்றிக் கிடைக்கிறது. மேலும் ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டுமே நடுவதாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கின்றன.

2. தூர்கள் அதிகம் கட்டுகின்றன. மணியின் எடை மற்றும் தரம் உயர்கிறது.

3. தண்ணீர்த் தேவை 40% குறைகிறது

4. விதை அளவு 90% வரை சேமிக்கப்படுகிறது. எனவே இடுபொருட்களுக்கான செலவு குறைகிறது

5. மிக முக்கியமாக அதிக மகசூல் (கிட்டத்தட்ட 50% வரை) கிடைக்கிறது.

6. பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

பாதக அம்சங்கள்:

1. ஒரு நாற்று நடுவது கூலியாட்களுக்கு பழக்கமில்லாததால் ஆள் செலவு அதிகரிக்கிறது. (சில இடங்களில் நடவுக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்)

2. வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களில் ( Flood prone areas) இம்முறையை பின்பற்றுவது கடினம். ஏனெனில், நாற்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் தண்ணீரை சீராகப் பராமரிக்க இயலாது.

3. விவசாயிகளின் பொதுவான மெத்தனம் மற்றும் resistance to change.

--

நவீன வேளாண் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்
செம்மை நெல் சாகுபடி - பகுதி I

நமது நாட்டில் அரிசி சார்ந்த உணவுப் பழக்கமே தற்போது பிரதானமாக உள்ளது. குறைந்து வரும் நிலப்பரப்பினாலும், அதிகரித்துவரும் மக்கள் தொகையினாலும், மாறியுள்ள life style லாலும் அரிசி உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அரிசி (உணவு தானிய) உற்பத்தியை நாம் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் செம்மை நெல் சாகுபடி. இது இதற்கு முன் தீவிர நெல் சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி என்ற பல பெயர்களைப் பெற்றிருந்தாலும் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களால் அழகாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செம்மை நெல் சாகுபடி (System of Rice Intensification - SRI) என்று அழைக்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் செம்மை நெல் சாகுபடி அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமே. ஆனால், SRIன் கோட்பாடுகளை பெரும்பாலானோர் சரி வர அறியவில்லை. கயிறு பிடித்து நேராக நட்டால் அது ஸ்ரீ என்று நினைக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் அவ்வாறே கூறி தங்கள் இலக்கை முடிக்க நினைக்கிறார்கள்.

அதன் உண்மையான கோட்பாடுகள் என்ன என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும்
2. சதுர நடவு நட வேண்டும் - வரிசைக்கு வரிசை இடைவெளியும், ஒரே வரிசையில் உள்ள செடிகளின் இடைவெளியும் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. கோனோ வீடர் பயன்படுத்தி இடை உழவு செய்ய வேண்டும் - இதன் மூலம் களைகள் மடக்கி உழப்பட்டு மண் வளம் கூடும். மேலும் இடை உழவினால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் அதிகரிக்கப்படும்.
4. காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்
5. இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்

மேற்கூறிய 5 கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டால் தான் அதிக மகசூலை அடைய முடியும்.

இந்த சாகுபடி முறையை எப்படி மேற்கொள்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்:

--

ஒரு விவசாயியின் வெற்றிக்கதை

இது திருவள்ளுர் மாவட்டம் தேர்வாய் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்னும் விவசாயியின் வெற்றிக்கதை:



இவருக்கு மொத்தம் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், கடலை போன்றவையே பிரதான விவசாயம். இவருக்கு உள்ள நிலத்தில் சுமார் 85 செண்ட் நிலப்பரப்பு இவருடைய கணிப்புப்படி ஒன்றுக்கும் உதவாததாக கருதப்பட்டு நீண்ட நாட்களாக தரிசாகவே விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தைச் செம்மை செய்ய இயலும் என்று தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள் மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவரிடம் சில பயிர்களைப் பரிந்துரைத்தனர். அதில் ஒன்று தான் ரோஜா மலர் சாகுபடி. அந்த நிலத்தில் அவரும் ரோஜாவை சாகுபடி செய்து நம்பிக்கையுடன் உழைத்தார்.



விளைவு, தற்போது வருடத்திற்கு நிகர லாபமாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தன் மகளின் திருமணத்திற்காக விற்ற ஒரு நிலத்தையும் அவர் மீண்டும் வாங்கியுள்ளார். இது ஒரு பாராட்டப்பட வேண்டிய success story அல்லவா? இதற்காக இவர் தன் குடும்பத்துடன் விடிகாலை 2 மணி முதல் உழைக்கிறார். விஞ்ஞான முறையில் தெளிந்து உழைத்தால் கை மேல் பலன் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவரை நாம் பாராட்டலாம் அல்லவா?

--

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 7 வேளாண் கடன் தள்ளுபடி:

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 2

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 3

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 4

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 5

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6


இதைப்போன்ற ஒரு கேலிக்கூத்தான கொள்கையை lens வைத்துத் தேடினாலும் கிடைக்காது. பொதுவாகவே தனி மனித ஒழுக்கம் மக்களிடையே குறைந்து வரும் இக்காலத்தில், விவசாயிகளை மென்மேலும் ஒழுக்கம் தவறியவர்களாக மாற்றுவதற்கென்றே இந்த திட்டம் உள்ளது.

கடன் தள்ளுபடி என்பது தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் வரும் காலத்திலோ அல்லது வறட்சி காலத்திலோ செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது தற்போது மக்களின் credit discipline ஐ கெடுக்க வந்த ஒன்று. உண்மையில் சத்தியம் தவறாதவர்களாக இருந்த விவசாயிகளை சீரழித்து குணக்கொலை செய்த ஒன்று.

இந்த தள்ளுபடியில் பலன் அடைபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த பெரிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் என்ற போர்வையில் உள்ள அரசியல்வாதிகளும் தான். கடனை ஒழுங்காகக் கட்டும் விவசாயிகளுக்கு எந்த ஊக்கமும் கிடையாது. Atleast ஒழுங்காகக் கட்டிய விவசாயிகளுக்கு அவர்கள் கட்டிய தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இருப்பதால் ஒழுங்காக செலுத்தும் விவசாயிகள் கட்டாத விவசாயிகளின் பார்வையில் பிழைக்கத்தெரியாதவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் தென்படுகிறார்கள். இதுமட்டுமல்லாது பண நஷ்டமும் அடைகிறார்கள்.

இன்னொரு வேடிக்கை என்ன என்றால், பெரும்பாலும் கஷ்டப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத்தான் இந்தத் திட்டம் தேவை. ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு கடனே கிடைப்பதில்லையே? பிறகு இந்த திட்டத்தால் இவர்களுக்கு என்ன பயன்? அது மட்டுமின்றி நீர்ப்பாசன வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். 10 ஏக்கர் மானாவாரி நிலம் வைத்துள்ள விவசாயியும் 3 ஏக்கர் இறவை வசதி உள்ள விவசாயியையும் ஒன்றாகக் கருத முடியாதல்லவா? கடன் தள்ளுபடித்திட்டதில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?

உதாரணமாக, விதர்பா பகுதியில் மானாவாரியாக (மழையை மட்டும் நம்பி) பயிர் செய்யும் 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு கடன் நிவாரணம் கடன் தள்ளுபடி மூலம் கிடைக்க வில்லை. ஆனால் மேற்கு மஹாராஷ்டிரத்தில் போர் மற்றும் கிணறு வசதி கொண்ட 3 ஏக்கர் திராட்சை பயிரிடும் ஒரு பணக்கார விவசாயிக்கு கடன் தள்ளுபடியில் நிவாரணம் கிடைத்தது. இவ்வகை முரண்பாடுகளை என்ன என்று கூறுவது?

படிக்காத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அலுவலர்களும் நடைமுறையில் உண்டு. வாங்காத கடனுக்கு நோட்டீஸ் பெறும் விவசாயிகளும் உண்டு.

இவ்வகை குளறுபடியால் வேளாண் கடன் தள்ளுபடி உண்மையிலேயே தேவையான பலன் அளிக்கவில்லை. மேலும் விவசாயத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் இதர விஷயங்களுக்குத் தேவையான முதலீடு குறைந்ததன் விளைவு (ஏற்கெனவே குறிஞ்சிப்பாடியார் கூறியது போல) கடன் தள்ளுபடியாக விடிகிறது. உதாரணமாக சென்ற வருடம் (தேர்தல் வருடம்) தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.70,000 கோடியை கட்டமைப்பு வசதிகளுக்காகப் பயன்படுத்தியிருந்தோமேயானல் நமக்கு நிரந்தர வசதி வாய்ப்புகளும் கிட்டியிருக்கும். மேலும் உற்பத்தியும் பெருகியிருக்கும். விவசாயிகளும் அரசாங்கத்திடம் உதவி கேட்டு பிச்சை எடுக்கும் நிலையும் வாராதிருந்திருக்கும்.
என்ன செய்வது? என் போன்றவர்கள் இது போல blog ல் புலம்ப மட்டுமே முடிகிறது. தேவையான அளவு policy makers ஐ sensitize செய்தும் அவர்களின் vested interestனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியவில்லையே?

அடுத்த பதிவில் வேளாண் காப்பீடுத் திட்டம் பற்றி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

--

Friday, December 11, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6

மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை எந்த அளவு புரிந்துகொண்டு உள்ளது என்பது கேள்விக்குறியே!. மத்திய அரசின் அளவுக்கு மாநில அரசுக்கு விவசாயிகளின் பிரச்சனையின் தீவிரம் புரிவதில்லை. பிரச்சனை ஏதாவது ஏற்படுமாயின் மத்திய அரசின் பொறுப்பு என்று தள்ளி விடும் சாமர்த்தியம் மட்டும் மாநில அரசுக்கு நிரம்பவே உண்டு

மாநில அரசின் மெத்தனப்போக்கு குறித்து ஒரு சாம்பிள்:

ஏரி, குளம் போன்றவற்றை தூர் வாருதல் என்பது. குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது தூர் வார வேண்டும். எனக்குத் தெரிந்து கடைசியாக 97ம் ஆண்டு தூர் வாரப்பட்டது என்று நினைக்கிறேன். நமக்கு கிடைக்கும் மழை அளவு தாராளமானது. அதனை நாம் சேமிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார், இஸ்ரேலைப் பார் என்று கூறும் நாம் அவர்கள் எடுக்கும் முயற்சியையும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொரு வருடமும் பல டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. கிடைக்கும்/இருக்கும் தண்ணீரை சேமிக்கத்தெரியாத நாம் அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் தாவாவில் இறங்குகிறோம். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றை தூர் வாரி நீரை சேமித்தாலே போதும். ஒரு ரூபாய் அரிசி மற்றும் கலர் டி.வி போன்றவை தேவையில்லை. அதனை சம்பாதிக்கும் அளவு விவசாயிகள் உயர்ந்து விடுவர்.

அரசாங்கத்தின் கொள்கை என்பதில் மற்றுமொரு குறைபாடு என்பது குறைந்தபட்ச ஆதார விலை. நெல், கோதுமை மற்றும் கரும்புக்கு மட்டுமே இவை நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு இருப்பதால் தான் சிறு தானியங்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடுவது பரப்பளவில் மிகவும் குறைந்துள்ளது. ஒரு வேளை இவற்றிற்கும் ஆதார விலை நிர்ணயித்தால் இவற்றின் உற்பத்தியும் கூடும். மாற்றுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தும் அரசு அவ்ற்றிற்கான support ம் சேர்ந்து அளிக்க வேண்டும். சர்க்கரை என்று எழுதிப் படித்தால் மட்டும் இனிக்காது.

வேளாண் கடன் தள்ளுபடி என்ற கேலிக்கூத்தை அடுத்த பதிவில் காண்போம்

--

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -5 வேளாண் விரிவாக்கம்

வேளாண் துறையின் மெத்தனப்போக்கு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.இது ஒரு சாம்பிள் தான். இதனைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முறை நான் விவசாயிகள் பயிற்சிக்காகத் தேவையான கருத்துகளைத் திரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசு கட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தை அணுகினேன். அங்கிருந்த ஒரு வேளாண் அதிகாரி எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நிறைய கையேடுகள் கொடுத்தார். ஒரு அறை முழுதும் கையேடுகள் இருந்தன. அவற்றிலிருந்து தேவையானவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அறையையே எனக்கு திறந்து கொடுத்தார். நான் அப்போது அவரிடம் " உங்களிடம் இவ்வளவு இருக்கிறதே, இதை நீங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவது இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை இருந்தாலும் எனக்கு பயன் இல்லை. நான் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூட்டங்கள் நடத்த விரும்பினேன். எனக்கு என் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர் வந்தால் தான் ஜீப் அல்லது வண்டி கிடைக்கும். அவரிடம் கேட்டபோது என்னை அலைக்கழித்து தொந்தரவு செய்யதே என்று கூறி விட்டார். மேலும் எங்கள் பட்ஜெட் மிகவும் குறைவு. எனவே நான் வெறுத்து விட்டேன். நாங்கள் வீண் சம்பளம் வாங்குகிறோம். நீங்களாவது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் எண்னத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு உதவி செய்து நான் திருப்தி அடைகிறேன்" என்றார். இதற்கு என்ன சொல்லுவது?

மேலும் ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

தோட்டக்கலைத்த்றையில் ஒரு திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஒரு ஒன்றியம் நகர்ப்புறம் சார்ந்தது. அதற்கும் ஒரே அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பொறுப்பு அதிகாரி தன்னாலான முயற்சியை செய்து விட்டு, தகுந்த விவசாயிகள் கிடைக்காததால் தன் இலக்கை எட்ட மாவட்டத்தின் வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்ய தன் மேலதிகாரியின் அனுமதியும் பெற்றார். இதன் பின் வேறு ஒரு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளை எங்கள் மூலம் கண்டறிந்தார். ஆனால், புதிய ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியோ அதனைத் தடுத்துவிட்டார். தன் எல்லைக்குள் மற்றவர் எப்படி வரலாம் என்பதே அவரின் கேள்வி. அதனால் இந்த அதிகாரி ஒதுங்கிக் கொண்டார். உரிமை கொண்டாடிய அதிகாரியோ இவரை விரட்டியபின் ஆள் தென்படவே இல்லை. இவரது இந்த சேவைக்கு பாரத ரத்னா விருதே அளிக்கலாம்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நல்ல அதிகாரிகள் கூட வேலை செய்ய இயலாமல் கைகள் கட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையை நமது வேளாண் துறை உருவாக்குகிறது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்படுகிறதோ இல்லையோ, இவர்களின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு விவசாயிகள் துன்பம் அடைகின்றனர்.

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் காண்போம்

--