Sunday, July 25, 2010

கில்ராய் பூண்டுத்திருவிழா!


நம்மூரில் கடவுளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுப்பது சர்வ சாதாரணம்.ஆனால் பூண்டுக்காக ஒரு திருவிழா என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அது உண்மைதான். பூண்டுக்கு விழா எடுக்கப்படும் இடம் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய். கில்ராய் பகுதி பூண்டுகளுக்கு பிரசித்தம் பெற்றது.1979ம் ஆண்டு முதல் இந்த திருவிழா தொடங்கபட்டது.ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த திருவிழா நடக்கும்.32 வது பூண்டு திருவிழா இந்த ஜூலை மாதம் 23,24,25 ம் நாள் நடைபெற்றது.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு சம்பத்தமான வித விதமான உணவு வகைகள் சுட சுட தயாரிக்க பட்டு பல ஸ்டால்களில் விற்பார்கள். பூண்டு சிக்கன் பிரை,பூண்டு காளாண்,பூண்டு கலந்த சாஸ் கொண்ட பாஸ்டா, பூண்டு ஐஸ் கிரிம்,பூண்டு கலந்த பிற மாமிச வகைகள் என அனைத்து உணவிலும் பூண்டு மயம் தான்!.



உணவு தயாரிக்கும் முறைகளை அனைவரும் வேடிக்கை பார்க்கும் படி வைத்திருந்தனர். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி, பூண்டு கலந்து, அதில் தீயை பற்ற வைத்து, எரியும் பாத்திரத்தில் உணவை சமைப்பதை பார்க்க பெரும் கூட்டம் கூடி இருந்தது.



அங்கு பூண்டு சம்பந்தமான அனைத்து வகை உணவு பொருட்களும் ஸ்டால்களில் குவித்து வைக்க பட்டிருந்தது. இருக்கை கூட பூண்டு வைக்கோலை வைத்து தயாரித்து இருந்தனர்.



மேலும் மக்கள் கண்டு களிக்க இசை நிகழ்ச்சிகள்,சிறுவர்கள் விளையாட பல வகை ரைடுகள் என அந்த இடமே கோலாகல பட்டது.



ஆனால் வெயிலின் கொடுமை தான் மிக அதிகமாக இருந்தது. தன்னார்வ தொண்டர்கள் கடுமையான வெயிலிலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, வருபவர்களுக்கு பல உதவி செய்வது, என அயராது பணிகளை செய்தனர்.அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி, அந்த விழாவில் தயாரிக்கபடும் உணவுகள் பெரும்பான்மையாவைக்கு தேவையான உணவு பொருட்கள அனைத்தும் அந்த பகுதியில் பயிரிட படும் உணவு பொருட்களிலிருந்தே தயாரிக்க பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே கில்ராய் பகுதியை சுற்றி இருக்கும் சேவை நிறுவனக்களுக்கு பணம் திரட்டுவதே ஆகும். இதுவரை 85 லட்சத்து 25 ஆயிரத்து 322 டாலர் நிதி திரட்ட பட்டுள்ளது.



தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பல காய் கறி, பழங்கள் பிரசித்தி பெற்றது. உதாரணமாக தர்மபுரி மாம்பழம், பண்ருட்டி பலா சேலம் கப்பை கிழங்கு, ஈரோடு மஞ்சள் என அடுக்கி கொண்டே செல்லலாம். நம்மூரிலும் இது போன்ற திருவிழா நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள சேவை நிறுவனங்களுக்கு உதவி,கிராம பள்ளிகளுக்கு நிதி என நல்ல காரியங்களுக்கு செலவிடலாம். அது மட்டுமன்றி நகரில் இருக்கும் மக்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்.

--

1 comment:

  1. அன்பின் சதுக்க பூதம்

    நல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை - நாமும் செய்யலாமே ! சிந்திப்போம் இவ்வழியில்.....

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்