Sunday, April 12, 2009

ஏன் வேண்டும் கோடை உழவு?


ராமு: அண்ணே! என்ன வானத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க!

சோமு : அடிக்கிற வெயிலுக்கு பெருசா மழை வந்தா நல்லா இருக்குமேன்னு பாக்குரேன்!!

ராமு : ஆமாண்ணே ! அப்பதான் வறண்டு போயிருக்கிற குளம்,குட்டையெல்லாம் நிரம்ப ஆரம்பிக்கும் ,தண்ணீர் பிரச்சனை இல்லாம இருக்கலாம்.

சோமு : தம்பி! கோடையில மழை பெஞ்சா குளம்,குட்டைக்கு மட்டுமில்ல நம்ம வயலுக்கும் நல்லது !

ராமு: கொஞ்சம்விளக்கமா சொல்லுங்களேன்.

சோமு: தமிழகத்துல வருசத்துக்கு சராசரியா 958 மி.மீ மழை பெய்யுது. அதுல 35 சதம் தென்மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள்ளையும்,50 சதவீதம் வடமேற்கு பருவகாற்று வீசும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்கள்ளையும் மிச்சமுள்ள 15 சதவீதம் ஜனவரி முதல் மே வரை உள்ள மாதங்கள்ளையும் பெய்யுது. உழவு செய்யப்படாத கெட்டியான நிலத்தில் விழும் இந்த மழையானது மண் அரிப்பை ஏற்படுத்துவதோடல்லாம மண்ணில் இடப்பட்ட உரசத்துக்களையும் இழுத்துட்டு போய்டுது . மண்ணில் ஈர்த்துகொள்ளப்பட்ட குறைந்த அளவு மழை நீரும் சூரிய வெப்பத்தினால சீக்கிரமா ஆவியாக மாறி வெளியேறுது. அதோட வயலில் முளைத்து வளர்ற களைசெடிகளும் நீரை உபயோகிப்பதால மண்ணில் உள்ள நீர் மிக வேகமாக விரயமாகி போவுது.

ராமு :அண்ணே! இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கான்னே ?வளமான மேல் மண் அரிப்பு,மண்ணில் இடப்பட்ட உர சத்து வீணாவது போன்றவற்றை தடுத்து மழை நீரை எப்படின்னே சேமிக்கிறது?

சோமு: இந்த பிரச்சனைகள்ள இருந்து விடுபடனும்னா சாகுபடி செய்ற நிலங்கள்ள பயிர் அறுவடைக்கு பின்னாடி பெய்யிர கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை 3 வருசத்திற்கு ஒரு முறை சட்டிகலப்பை கொண்டு அழமாக(25 செ.மீ முதல் 30 செ.மீ வரை) உழனும். இதனால மண்ணின் இறுக்கமும் குறையுது.அப்படி உழுதா அடுத்ததாக நம்ப பயிர் செய்யும் போது பயிரோட வேர்கள் ஆழமா வளர்ந்துட்டு போகும். நீர் பற்றாக்குறை காலங்கள்ல கீழ்மட்டத்தில உள்ள நீரை கூட பயிர் உறிஞ்சி வறட்ச்சியை தாக்கு பிடிக்க முடியுது. அதோட இப்படி உழுவதால நன்கு வேர் விட்டு வளர கூடிய அருகம்புல் மற்றும் கோரை கிழங்கு போன்ற களைகளின் வேர் பகுதி முழுவதும் தோண்டி எடுக்க பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்க படுது.

ராமு :அண்ணே!மேல சொல்லுங்கண்ணே!

சோமு : அவசர படாதே. இப்படி உழுத பின்னே பெய்யுர ஒவ்வொரு மழைக்கும் டில்லர் கலப்பை இல்லாட்டி கொளுகலப்பை வச்சி நில சரிவுக்கு குறுக்க நிலத்தை நன்கு பல தடவை புழுதி பட உழனும்.இப்படி உழுவதால மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால நீர் ஆவியவதை தடுப்பதோட வறட்சி காலங்கள்ல பயிருக்கு பயன்படுத்தலாம்னா பாரேன்.

ராமு:இதுல இவ்வளவு விஷயம் இருக்காண்ணே! மண் அரிப்பு தடுப்பு, மழை நீரு சேமிப்போட வேற எதாவது பயன் இருக்காண்ணே?

சோமு :நல்ல கேட்ட போ! பயிர அறுவடை செய்த பின்னாடி வயல்ல பயிரோட தாள்கள் தங்கிடுது. இது பூச்சிகளுக்கு உணவாகவும்,நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்குது . அதனால கோடைஉழவு செய்தோம்னா களைசெடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகுது. இதுனால களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கபடுது.அதோட பயிரை பாதிக்க கூடிய பூச்சிகளின் முட்டைகளும் கூண்டு புழுக்களும் அழிக்கபடுது உழவு செய்யும் போது நெறைய பறவைங்க உழுது கொண்டிருக்கிற நிலங்கள்ள உட்கார்ந்து இருப்பதை பார்த்திருப்ப. இது ஏன்னா நிலத்தை உழும்போது மண்ணின் அடியிலுள்ள கூண்டுபுழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் மேலும் களைகளோட விதைகள் மண்ணின் மேல் வந்து கிடக்கும் போது அவற்றை உணவாக சாப்பிட தான். அதுங்க சாப்பிடலன்னா கூட மண்ணுக்கு மேல புழுக்களின் முட்டைகள்.கூண்டு புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் வரும் போது சூரிய வெப்பத்தால அழிஞ்சிடும்.

ராமு :அண்ணே! நம்ம முன்னோர்கள் கோடை உழவின் மகத்துவத்தை உணர்ந்து தான் சித்திரை மாத புழுதி பத்திரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்னும் சொல்லியிருபாங்களோ! நாமும் கோடை உழவின் மகத்துவமறிந்து செயல் பட்டா குறைந்த நீர் இல்லாட்டி சிக்கன நீருல அதிக மகசூல் எடுக்கலாம். என்னா நான் சொல்ரது?

சோமு :பரவாயில்லயே!கற்பூரம் மாதிரி உடனே பத்திகிட்ட!அது சரி எங்க கிளம்பிட்ட?

ராமு : டிராக்டருக்கு சொல்லி வைக்கத்தான்.

--

2 comments:

  1. we saw your blog. Nice one. But why the name Kuppan and Suppan for farmers? Pls change it!!

    For Velaanmai.com
    Osai CHella
    Editor

    ReplyDelete
  2. நன்றி ஓசை செல்லா. பொதுவான பெயர் வைக்க வேண்டும் என்று இப்பெயர் வைத்தோம். இனி வரும் பதிவுகளில் இது போன்றவற்றை தவிர்க்கிறோம். நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்