Friday, November 13, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -இது தத்துவம்

மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.


நம்பிக்கை தந்த 1950கள்

1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.


நீர் தேக்கங்களும் அணைகட்டுகளும் தான் நவீன இந்தியாவின் கோவில் என்று அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் முழங்கினார்.அதனால் பல லட்சம் விவசாய நிலங்களின் தாகம் தணிந்ததோடு அல்லாமல் வீடுகளுக்கும் மின்சார உற்பத்தியும் செய்யபட்டது.

நிலையற்ற 1960கள்

1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டது. மிகபெரிய பொருள் இழப்பு ஏற்பட்டது.இதனால் நம் நாட்டில் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1965 - 66ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு மிக கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. இந்த கால கட்டத்திலேயே அரசாங்கமே மக்களை ஒரு நாளுக்கு ஒரு வேளை உண்ணாமல் இருக்க சொன்னது. அப்போதயை பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதற்கு முன்னுதாரனமாக கூட இருந்தார். ஆனால் நிஜத்தில் மக்கள் நல்ல உணவு வாரத்திற்கு ஒரு முறை தான் உண்ட நிலை இருந்தது. பல்லாயிரம் பேர் உணவின்றி பசி கொடுமையால் மாண்டனர். பிறகு 1965 ல் பாக்கிஸ்தானுடன் யுத்தம் ஏற்பட்டு வட இந்தியாவில் பதற்றம் நிலவியது.இது போன்ற அடுக்கடுக்கான இன்னல்களினால் இந்தியா 1966 - 67 இல் 6.4 மில்லியன் டண் கோதுமையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இந்த நேரத்திலேயே அமெரிக்க பத்திரிக்கைகள் இந்தியாவை பிச்சைகார நாடாக கேலி சித்திரம் வரைந்து உலக அரங்கிலேயே இந்தியாவையும் அதன் இறையான்மையையும் அசிங்கபடுத்தியது.

பிறகு 1960களின் நடுவிலேயே மெக்சிகோ நாட்டை சார்ந்தவரும் உலகில் ஈடு இணையற்ற பயிர் பெருக்கவியல் விஞ்சானியுமான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரின் உதவியோடு இந்தியாவிற்கு குறைந்த வயதுடைய குட்டை ரக கோதுமை அறிமுகம் செய்யபட்டது. இது அதிக மகசூல் தரவல்லதாகவும் நோய்,பூச்சி மற்றும் வறட்சியை தாங்கி வளர கூடியதாகவும் இருந்ததால் உணவு தானிய உற்பத்தியில் மிக பெரிய புரட்சியே ஏற்பட்டது. இதுதான் பசுமை புரட்சியின் ஆரம்ப காலம் எனலாம்.

பசுமை புரட்சியின் பரிணாம வளர்ச்சி

இடைக்கால 1960 களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வீரிய ஒட்டு கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு அனைத்து கோதுமை வளரும் மகாணங்களிலும் செம்மையாக செயல்படுத்த பட்டது.
1971 ல் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 26 மில்லியன் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்திய மக்களுக்கு பசியின் மீதிருந்த பயம் மறைய தொடங்கி இருந்த காலம் அது. இந்த தருணத்தில் தான் வங்காள தேசம் உருவானது. அதனால் வேளாண் உற்பத்திக்கு அரசால் அதிக பணம் ஒதுக்கி செலவிடமுடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய மக்களுக்கு எல்லை புரத்தை பற்றிய கவலையோடு உணவுத்தேவை பற்றிய கவலையும் சேர்ந்தே இருந்தது என்று சொல்லலாம்.

அணைகட்டு பாசன வாய்க்கால் நீர் மேலாண்மை அறிமுகம்

பெரிய அணைகளில் நீரை தேக்கி வைத்து அதிலிருந்து பாசன வாய்க்கால்களை வெட்டி சுழற்சி முறையில் நீரை பிரித்து கொடுக்கும் முறையானது 1970 களில் அறிமுகபடுத்தபட்டு இந்திய விவசாய பாசன முறையிலேயே ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் முறையும் அறிமுகபடுத்தபட்டு பல லட்சம் புதிய பயிர் செய்யாத நிலங்களை விவசாயம் செய்ய வைத்த கால கட்டம் அது.


அகில இந்திய நெல் மகசூல்

1980 களில் நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்டேரின் சராசரி உற்பத்தி வெகுவாக பெருகியது. அதாவது 1950 களில் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ நேல் என்ற அளவிலிருந்து 1980 க்ளில் 1.25 டன்னாக உயர்ந்து தற்போது 2 டன்னுக்கும் மேல் மேம்படுத்த பட்டுள்ளது.

கரும்பு


1967 - 68ல் 95.50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2006 - 07 ல் 270 மில்லியன் டன்னாக ஆழ்துறை கிணற்று பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் உயர்ந்தது.


எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தி


1980 களில் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் புரட்சி ஏற்பட்டு உற்பத்தி திறன் வெகுவாக உயர்த்தபட்டது. 1990 களில் பருத்தி மகசூல் அதிகரிக்கபட்டது. பருத்தியில் 1967 - 68 ல் 5.78 மில்லியன் பேல்( 1 பேல் என்பது 170 கிலோ) என்ற அளவில் இருந்து 2005 - 2006 ல் 18.50 மில்லியன் பேல்களாக அதிகரிக்கபட்டது.

முட்டை உற்பத்தி

1968 - 69 களில் 5.3 மில்லியன் முட்டைகளாக இருந்தது 2006 - 07 ல் 47.3 மில்லியன் முட்டைகளாக உயர்ந்தது.


மீன் உற்பத்தி

1965 - 66ல் 1.33 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2006 - 07 ல் 6.30 மில்லியன் டன்களாக 5 மடங்கு உயர்ந்தது.


1980களில் ஏற்பட்ட மாற்று பயிர் திட்டம்

இந்த காலகட்டத்திலே நெல் வயல்கள் சில மீன் குட்டைகளாக மாறின. மக்காசோள உற்பத்தி அதிகரிப்பால் நிறைய கொழி பண்ணைகள் உருவாயின. தென் இந்திய கடற்கரை மாநிலங்களில் தென்னை அதிகம் சாகுபடி செய்யபட்டது.சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் ஒரம் கட்டபட்டன. ஏறத்தாழ 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த உணவு தானிய பயிர்கள் அடியோடு பணபயிர் சாகுபடிக்காக மாற்றபட்டன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும் சற்று மேம்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பெருகியது.

எழுச்சி மிகு 1990கள்

இந்த காலகட்டம் இந்திய விவசாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த 1990கள் உலக மயமாக்கல் காலம் எனலாம் . சோசலிஸ்ட் முறையில் நடைபெற்ற இந்திய விவசாயம் கோட்டா முறைக்கு மாற்ற பட்டது. காட் ஒப்பந்தம் காட்டிய வழியில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கள் கொள்கையை ஏற்று கொண்டது. நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த நெல், கோதுமை,மலர்,காய் கனிகள் போன்றவற்றை வெளி நாடுகளுக்கு அதிக அலவில் ஏற்றுமதி செய்தது. இதனால் உலக அரங்கிலே இந்தியாவின் மதிப்பு 1960 களில் இருந்த "கப்பலிலிருந்து இந்தியனின் வயிற்றுக்கு" என்ற அவல நிலை மாறி "உணவு ஏற்றுமதி செய்யும் நாடு" என்ற கௌரவத்தை அடைந்த கால கட்டம்.

21 ம் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தி

தற்போதைய உற்பத்தியை விட 2020 ல் இந்திய வேளாண் உற்பத்தி இரட்டிப்பு அடைய வேண்டும் என்று இந்திய திட்ட வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.உணவு தானியம்,பயிறுவகைகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை சார்ந்த பயிர்களான கரும்பு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் நாம் அதிகபடியான மகசூலை எடுத்து விட்டோம். மேலும் உணவு தானிய பயிர்களுக்கான பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் 2003க்கு பிறகு ஒரு ஹெக்டேர் சராசரி மகசூலில் உணவு தானியங்களை பொருத்த வரையில் நம்முடைய இலக்கை அடைய முடியாத இக்கட்டான சூழலில் தான் உள்ளோம். ஆனால் காய்கறிகள் மற்ரும் பழங்கள், மீன் உற்பத்தி பால் உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்து விட்டோம்.

2020 ல் எதிர்பார்க்கும் நிர்ணயிக்க பட்ட உணவு தானிய உற்பத்தி

வாழிங்டனில் உள்ள பன்னாட்டு உணவு கோட்பாடு ஆராய்ச்சி கழகம் இந்தியாவை பொருத்த வரை அதன் உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இனிவரும் 20 ஆண்டுகள் உணவு உற்பத்திக்கு மிக போரட்டமான கால கட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

எதிர் வரும் 2020 ல் இந்திய மக்கள் தொகை உத்தேசமாக 145 கோடி. உணவு தானிய தேவை பாடு 307 மில்லியன் டன். உணவு தானிய தேவைபாடு 307 மில்லியன் டன். எதிர் பார்க்கும் உற்பத்தி 240 - 250 மில்லியன் டன். நம்மிடம் உல்ள அவசர கால தேவைக்காக சேமிக்க பட்டுள்ள உணவு தானியங்களின் அளவு 60 மில்லியன் டன்.(இதில் பாதிக்கும் மேல் சரியான அறிவியல் முறைப்படி சேமிப்பு செய்யாததால் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளதாக முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களே வேதனையோடு சொன்ன விஷயம்). எதிர்பார்க்கும் உணவு தானிய இறக்குமதி அளவு 20 மில்லியன் டன்(மீண்டும் 1960 ல் ஏற்பட்ட நிலை).

அது மட்டுமின்றி புவி வெப்பமாதல் நிகழ்வால் பருவம் தப்பும் பருவ மழைகளும்,புயல் மற்றும் குறுகிய கால பேய் மழைகளும் இப்பிரச்சனையின் பரிமாணத்தை அதிகரிக்கின்றன. விரிவாகும் ஏழை பணக்கார விரிசலால் பற்றாக்குறை காலங்களில் உற்பத்தி செய்ய பட்ட உணவும் எந்த அளவுக்கு ஏழை மக்களால் வாங்கும் திறன் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திலே வேளாண் வளர்ச்சி விகிதம்


8 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 4.7%

9 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 2.1%

10 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 1.8%


முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் எட்டபட்ட இரட்டை இலக்க வளர்ச்சி படி படியாக குறைந்து இந்த மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ள பட்டுள்ளது.பன்னாட்டு உணவு கோட்பாட்டு ஆராய்ச்சி கழகம் 2006 ம் ஆண்டு தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் 30% க்கும் மேலானவர்கள் இன்றும் ஒரு வேளை உணவோடு தான் அன்றாடம் உறங்க செல்கின்றனர். ஆப்ரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத வேதனையான உண்மையாகும்.
இந்திய விவசாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் காண்போம்

Saturday, August 29, 2009

பண்ணை உபகரணங்கள் - 6 (டிராபிக்கல்டர்)

தற்போதைய சூழ்நிலையில் விவசாய வேலைகளுக்கான கூலியாட்கள் சரிவர கிடைக்கப்பெறாமல் பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாமல் நட்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த குறையை போக்க உருவாக்கப்பட்டுள்ள ஓர் நவீன வேளாண் கருவியாக டிராபிக்கல்டர் விளங்குகிறது.



டிராப்பிக்ல்டர் கருவியின் அங்கங்கள்:

1. விதைப்பான்
2. உரமிடும் கருவி
3. பார் கலப்பை
4. பரம்பு பலகை
5. மண் அணைக்கும் கருவி
6. களை எடுக்கும்; கருவி

டிராப்பிகல்டர் மூலம் எவ்வகை பயிர்களை பயிரிடலாம்?

டீராப்பிகல்டர் மூலம் வேர்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட இயலும்.

டிராப்பிகல்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

1. ஒரே சமயத்தில் பார் மற்றும் சால்களை அமைத்து, அடியுரம்; இட்டு, விதைவிதைத்து விதையை மூட இயலும்.
2. மேலும் பயிர் வளர்ந்த பின்னர் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.
3. மண்ணின் ஈரம் இருக்கும் போதே விவசாயப்பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலும்.
4. சீரான இடைவெளியில் (பயிர் வரிசைகள் மற்றும் ஒரே வரிசையில் உள்ள பயிருக்கு இடையில்) விதைக்க இயலும். எனவே பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
5. அடியுரத்தை சரியான மற்றும் சீரான ஆழத்தில் இடுவதால் பயிர் எளிதாக வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும்.
6. அகன்ற பார் சால்களை உருவாக்குவதால் மானாவாரிப் பயிரில் மழை நீரை அறுவடை செய்ய இயலும்.
7. டிராப்பிக்கல்டரை உழவுமாடுகள் மற்றும் டிராக்டர் இரண்டையும் கொண்டு இயக்க இயலும் என்பதால் சிறு, குறு, மத்திய மற்றும் பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த இயலும்.

--

பண்ணை உபகரணங்கள் - 5 (பார் கலப்பை)

நெற்பயிரைத் தவிர ஏறக்குறைய அனைத்துப் பயிர்களும் பார்சால் முறையில் பயிரிடப்படுகிறது. மேலும் பார்சால் முறையில் செய்வதால் பயிருக்குத் தேவையான நீர், காற்று மற்றும் ஊட்டங்கள் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறுகிறது.

பார் மற்றும் சால் அமைக்க பார்கலப்பை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரியான அளவுகளில் சீரான உயரம் மற்றும் ஆழங்களில் பார் மற்றும் சால்கள் அமைக்கப்படுகின்றன.

பார் கலப்பை மூலம் மேட்டுப்பாத்திகளும் அகன்ற பார் சால்களும் அமைக்க இயலும்.

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)

--

Wednesday, August 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)



நில நிர்வாகத்தில் அடுத்த முக்கியமான பண்ணைக்கருவி சுழற்கலப்பை ஆகும். நன்கு பொடிக்கப்பட்ட விளை நிலமானது பயிற்களுக்குத் தோதான படுக்கையாகிறது .இவ்வாறான விளை நிலம் நீர் மற்றும் காற்று இவற்றை சமமான அளவில் கொள்வதால் பயிறுக்குத் தேவையான அளவில் பருக நீரும், சுவாசிக்கக் காற்றும் கிடைக்கிறது இவ்வாறு பயிருக்குத் தேவையான விளைமண்ணை உருவாக்குவதில் சுழற் கலப்பை பெரும் பங்கு வகிக்கிறது.

சுழற்கலப்பையின் வேலைகள் என்ன?

சுழற்கலப்பை உழப்படாத விளை மண்ணை வெட்டுகிறது(Cutting). அவ்வாறு வெட்டப்பட்ட விளைமண் பொடிக்கப்படுகிறது(Pulverizing) .பொடிக்கப்பட்ட விளைமண் சமப்படுத்தப் படுகிறது(Leveling). சுழற் கலப்பையின் கொழுக்கள் எதிர் எதிர் திசையில் இருப்பதாலும் அதன் சுழற்சி இயக்கத்தாலும் மண் வெட்டப்பட்டு பொடிக்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் ஓர் பரம்புப் பலகை இருப்பதால் பொடிக்கப்பட்ட மண் சமப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் சீரான(Free flowing) மேல்தட்டு விளைமண் கிடைக்கப் பெறுகிறது.

பயன்கள்:

• விளைமண் எத்தனை கடினமாக இருப்பினும் துகளாக்கப்படுகிறது.
• விளைநிலம் சமப்படுத்தப்படுவதால் நீர் நிர்வாகம் செம்மை பெறுகிறது.
• இதனால் களை நிர்வாகமும் எளிதாகிறது.

சுழற் கலப்பை 36 மற்றும் 42 கொழுக்களைக் கொண்ட இரண்டு வடிவங்களில் பெரும்பாலான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

--

Sunday, August 16, 2009

விதைப்புடன் உரமிடும் கொருகலப்பை

ராமு: அண்ணே வணக்கம்னே

சோமு: வணக்கம் விடிஞ்சும் விடியமா இருக்கிற இந்த நேரத்துல வந்து நிக்கிற என்ன விசயமப்பா

ராமு: கொருக்கலப்பைய வச்சு விதைக்கிறத பத்தி சொன்ன நீங்க அதோட உரத்தையும் சேர்த்து போட்ற கலப்பை இருக்கிறதா சொன்னிங்க அத பத்தி தெரிஞ்சுட்டு போலாமேன்னுதன் இவ்வளவு சீக்கிரமா வந்தேன்

சோமு: அதுவாப்பா குறைஞ்ச விலைல கிடைக்கிற இந்த கொருக்கலப்பை மூலம் நாம் விதைக்கிறதோட அடியுரத்தையும் சேர்த்து இடுவதுதான் இதனோட சிறப்பே!

ராமு : இந்த கலப்பை எப்படி இருக்கும்னு சொல்லுங்கண்ணே

சோமு: சொல்றேன் விதைப்பு மட்டுமே செய்ற கொருக்கலப்பை மாதரியே இதுலேயும் படுக்கை வச சட்டத்துல உள்ள தண்டுகளை மாத்தி அமைச்சு சாலோட இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் இதோட இரண்டு புனல்கள், புனல்களையும் கொழு முனைகளையும் இணைக்க குழாய்கள் இருக்கு இந்த புனல்கள் வழியே விதைகளையும் அடியுரத்தையும் போடும் போது ஒரு புனல் வழியே அடியுரம் விதைக்கு சற்று தள்ளி விழற மாதரி செஞ்சுருக்காங்க இதன் மூலம் விதைக்கிறதும் அடியுரம் போடுவதும் ஒரே நேரத்துல செஞ்சு முடிக்கமுடியுது






ராமு: ஆமாண்ணே வயல் வேலைக்கு ஆள் கிடைக்கிறது சிரமமா இருக்கிற இந்த நேரத்துல விதைப்புடன் உரமிடும் கொருக்கலப்பையை வச்சு விதைக்கும் போது விதையும் உரமும் வெவ்வேறு அழத்துல விழுது.அதோட விதைகள் வரிசைக்கு வரிசை சீரான இடைவெளில விதைக்கப்படுவதால கலைகளையும் மிகச்சொலபமா எடுத்துடலாம். இதனால கலைகளுக்கும் பயிருக்கும் பயிர்களுக்குள் ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் மட்டும் மிக அதிக அளவுல உரச் சத்தை எடுத்துக்கிட்டு வளர முடியும். என்ன நான் சொல்றது?

சோமு: ரொம்ப சரியா சொன்னப்பா நீ

ராமு: இந்த கலப்பைய பத்தி வேற எதாவது விவரம் இருக்கான்னே?

சோமு: இந்த கலப்பைல விதைகளையும் உரத்தையும் போட்டு வைக்கிற பகுதி இல்லாததால நம்ம மடியிலேயோ இல்லைன்னா முதுகிலேயோ கட்டி எடுத்துகிட்டு விதைக்கும் போது விதைக்க முடியும் ஒரு கொழு முனையோட உள்ள கலப்பைய வச்சு 0.25-0.30 ஹெக்டேர் நிலத்தையும் இரண்டு கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.6-0.8 ஹெக்டேர் நிலத்தையும் மூன்று கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.8-10 ஹெக்டேர் வரைலயும் ஒரே நாளில் விதைச்சு உரமிட்டு முடிச்சுடலாம்

ராமு: ரொம்ப சந்தோசம்னே இந்த முறை வேதைப்புடன் உரமிடும் இந்த கொருகலப்பைய வச்சு என்னோட பங்காளியை விட நான் நல்ல மகசூல் எடுப்பன்னேன்.

சோமு: நிச்சயம் எடுக்கலாம்ப்பா! அரோக்கியமான உங்க போட்டியில கண்டிப்பா ஜெயிக்க போவது நம்ம நாட்டோட விவசாயம்தாம்ப்பா!

--

Sunday, July 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பள்ளக்கால் வயல்கள் மற்றும் நன்செய் நிலங்களில் நேரடி விதைப்பானைப் பயன்படுத்த இயலாது. அத்தகைய வயல்களில் நாற்று நடுதல் சிறந்த பலனைத் தரும். நாற்றுகளைப் பறிக்கவும் நடவும் வேலையாட்கள் தட்டுப்பாடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நெல் நாற்று நடும் இயந்திரம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.



நெல் நாற்று நடும் இயந்திரத்தின் சிறப்பம்சங்கள:

இது ஓர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரேயில் நாற்றுகளை விட்டு 15-20 நாட்களில் நடவு வயலில் நட வேண்டும் இந்த வகை நடவின் மூலம் பயிர் வரிசைகளுக்கு இடையே சீரான இடைவெளி விடப்படுவதால் தூர் கட்டுவது பெருகி அதிகத் தூர்கள்,மணிகள் மற்றும் கதிர்கள் பிடிக்க வகை செய்கிறது. நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 12-15 கிலோ விதையளவு போதுமானது பயிர் வரிசைகளுக்கிடையில் இடைவெளி இருப்பதால் களை நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.

1 ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு சுமார் 2-3 மணிநேரம போதுமானது.
1 மணிக்கு 0.5-1.0 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

--

Monday, July 20, 2009

உயிர்களை காக்கும் உரங்கள்

இந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பதுதான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் ஏற்படுத்த பட்டு வருகிறது. இது பற்றி முழுதும் அறிய வரலாறின் சில பக்கங்களை புரட்டி பார்ப்போம்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு சீராகவே இருந்தது.கொடிய நோய் நொடிகளாலும்,போர்களாலும், ஒரு சில தலைவர்களின் சித்தாந்த வெறியாலும் , பசி பட்டினியாலும் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் ஒரு மில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க ஒரு நூற்றாண்டு தேவை பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் இந்த நிலை மாற தோன்றியது.1960 ல் 3 பில்லியனான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியனாக மாறியது.அடுத்த 12 ஆண்டுகளில் 5 பில்லியனாக மாறியது.2010ல் 7 பில்லியனாக அதிகரிக்க கூடும் என்று கருத படுகிறது. மக்கள் தொகை பெருகிய அளவு விளை நிலங்கள் பெருகவில்லை.

17 ம் நூற்றாண்டின் மிக பெரிய பொருளாதார நிபுணர் மால்தூசின் கருத்துப்படி உலகில் மக்கள் தொகை பெருக்கள் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் வளர்கிறது. போர், பட்டினி , நோய்,வறுமை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் அதிகளவில் இறப்பதாலேயே மீதி உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறது என்றார்.

அந்த கூற்று படி 1970களில் மிக பெரிய பேரழிவு வந்து பட்டினியால் பெரிய அளவு மக்கள் தொகை குறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் பெரிய அளவில் மக்கள் பட்டினியால் இறந்திருக்க வேண்டும். இந்த பேரழிவிலிருந்து உலகை காக்க வந்தது தான் பசுமை புரட்சி. பசுமை புரட்சி என்பது குறுகிய நில பரப்பில் அதிக அளவு சத்துக்களை உண்டு அதிக அளவு விளைச்சலை கொடுக்கும் பயிர்களை வளர்ப்பதே ஆகும். பயிருக்கு தேவையான அதிக படியான உணவை எப்படியாவது கொடுக்க வேண்டும். பயிருக்கு தேவையான அதிகபடியான உணவை உரங்கள் மூலம் கொடுக்கிறோம்.

எனவே உரங்களின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை

பல வருடங்களாக தழை சத்து சுழல் பற்றி ஆராய்ந்து வரும் ஸ்மில் என்ற விஞ்ஞானியின் கூற்று படி தற்போது 40 சதவித மக்கள் உயிர் வாழ்வது ஹேபர்-போஷ் கண்டுபிடித்த அம்மோனியா தயாரிக்கும் முறையின் உதவி தான்.

இன்னொன்றையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களின் வேருக்கு, தான் எடுக்க போகும் சத்து உரத்திலிருந்து வருகிறதா? அல்லது இயற்கையில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து கிடைக்கிறதா என்று தெரியாது. அவற்றிற்கு இரண்டுமே ஒன்று தான்.


கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் உரங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தை பெருக்கத்தை அறியலாம்

வருடம் உர உபயோகம்(மி. டன்) உர உபயோகம்(kg/ha) உணவு உற்பத்தி(மி.டன்)
1951-520.066 0.652
2001-02 17.391.5212
2002-0316.7 84.9182.6
2004-0518.4797.1204.6
2005-0620.34 106.9208.6
2006-07 22.04115.6211.8


மேலே உள்ள அட்டவனையை பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும். கடந்த சில வருடம் முன்பு வரை நாம் அளிக்கும் உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வருடங்கலாக நிலத்தில் இடும் உரத்தின் அளவு அதிகரித்தாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணங்கள்

1.பயிரின் தேவைகேற்ப உரத்தை அளிக்காமல் அதிக படியாக இடுவது

2.சமச்சீரின்றி உரத்தை உபயோகிப்பது.

3.தழை,மணி மற்றும் சாம்பல் சத்து கொண்ட உரங்கள் மட்டும் அதிகம் இட்டு மற்ற தேவையான சத்துக்களை இடாமல் இருப்பது.

4. இயற்கையான உரங்களை சுத்தமாக அளிக்காமல் இருப்பதால் அங்கக கார்பன் குறைவாக இருப்பது.

5.அலுமினிய அபாயம் (Aluminium toxicity) அமில தன்மை அதிகம் உள்ள மண்ணில் ஏற்படுவது

6.உவர் மற்றும் உப்பு தன்மை.

இதற்கு தீர்வு தான் என்ன?

பயிருக்கு இயற்கை உரமும் அவசியம். வேதியல் உரங்களும் அவசியம். மண்ணின் உயிர் தன்மை மற்றும் அதன் மற்ற குணங்களை காக்க இயற்கை உரம் அவசியம்.இயற்கை உரத்தால் தர முடியாத சத்துக்களை வேதி உரத்தால் கொடுக்கலாம். உரங்களை கணக்கின்றி இடுவதை தவிர்த்து அறிவியல் முறைபடி மண்ணை பரிசோதனை செய்து ,சரியான அனைத்து சத்துக்களையும் சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி அளிக்க வேண்டும்.

--