Sunday, July 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பள்ளக்கால் வயல்கள் மற்றும் நன்செய் நிலங்களில் நேரடி விதைப்பானைப் பயன்படுத்த இயலாது. அத்தகைய வயல்களில் நாற்று நடுதல் சிறந்த பலனைத் தரும். நாற்றுகளைப் பறிக்கவும் நடவும் வேலையாட்கள் தட்டுப்பாடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நெல் நாற்று நடும் இயந்திரம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.



நெல் நாற்று நடும் இயந்திரத்தின் சிறப்பம்சங்கள:

இது ஓர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரேயில் நாற்றுகளை விட்டு 15-20 நாட்களில் நடவு வயலில் நட வேண்டும் இந்த வகை நடவின் மூலம் பயிர் வரிசைகளுக்கு இடையே சீரான இடைவெளி விடப்படுவதால் தூர் கட்டுவது பெருகி அதிகத் தூர்கள்,மணிகள் மற்றும் கதிர்கள் பிடிக்க வகை செய்கிறது. நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 12-15 கிலோ விதையளவு போதுமானது பயிர் வரிசைகளுக்கிடையில் இடைவெளி இருப்பதால் களை நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.

1 ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு சுமார் 2-3 மணிநேரம போதுமானது.
1 மணிக்கு 0.5-1.0 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

--

Monday, July 20, 2009

உயிர்களை காக்கும் உரங்கள்

இந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பதுதான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் ஏற்படுத்த பட்டு வருகிறது. இது பற்றி முழுதும் அறிய வரலாறின் சில பக்கங்களை புரட்டி பார்ப்போம்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு சீராகவே இருந்தது.கொடிய நோய் நொடிகளாலும்,போர்களாலும், ஒரு சில தலைவர்களின் சித்தாந்த வெறியாலும் , பசி பட்டினியாலும் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் ஒரு மில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க ஒரு நூற்றாண்டு தேவை பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் இந்த நிலை மாற தோன்றியது.1960 ல் 3 பில்லியனான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியனாக மாறியது.அடுத்த 12 ஆண்டுகளில் 5 பில்லியனாக மாறியது.2010ல் 7 பில்லியனாக அதிகரிக்க கூடும் என்று கருத படுகிறது. மக்கள் தொகை பெருகிய அளவு விளை நிலங்கள் பெருகவில்லை.

17 ம் நூற்றாண்டின் மிக பெரிய பொருளாதார நிபுணர் மால்தூசின் கருத்துப்படி உலகில் மக்கள் தொகை பெருக்கள் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் வளர்கிறது. போர், பட்டினி , நோய்,வறுமை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் அதிகளவில் இறப்பதாலேயே மீதி உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறது என்றார்.

அந்த கூற்று படி 1970களில் மிக பெரிய பேரழிவு வந்து பட்டினியால் பெரிய அளவு மக்கள் தொகை குறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் பெரிய அளவில் மக்கள் பட்டினியால் இறந்திருக்க வேண்டும். இந்த பேரழிவிலிருந்து உலகை காக்க வந்தது தான் பசுமை புரட்சி. பசுமை புரட்சி என்பது குறுகிய நில பரப்பில் அதிக அளவு சத்துக்களை உண்டு அதிக அளவு விளைச்சலை கொடுக்கும் பயிர்களை வளர்ப்பதே ஆகும். பயிருக்கு தேவையான அதிக படியான உணவை எப்படியாவது கொடுக்க வேண்டும். பயிருக்கு தேவையான அதிகபடியான உணவை உரங்கள் மூலம் கொடுக்கிறோம்.

எனவே உரங்களின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை

பல வருடங்களாக தழை சத்து சுழல் பற்றி ஆராய்ந்து வரும் ஸ்மில் என்ற விஞ்ஞானியின் கூற்று படி தற்போது 40 சதவித மக்கள் உயிர் வாழ்வது ஹேபர்-போஷ் கண்டுபிடித்த அம்மோனியா தயாரிக்கும் முறையின் உதவி தான்.

இன்னொன்றையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களின் வேருக்கு, தான் எடுக்க போகும் சத்து உரத்திலிருந்து வருகிறதா? அல்லது இயற்கையில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து கிடைக்கிறதா என்று தெரியாது. அவற்றிற்கு இரண்டுமே ஒன்று தான்.


கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் உரங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தை பெருக்கத்தை அறியலாம்

வருடம் உர உபயோகம்(மி. டன்) உர உபயோகம்(kg/ha) உணவு உற்பத்தி(மி.டன்)
1951-520.066 0.652
2001-02 17.391.5212
2002-0316.7 84.9182.6
2004-0518.4797.1204.6
2005-0620.34 106.9208.6
2006-07 22.04115.6211.8


மேலே உள்ள அட்டவனையை பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும். கடந்த சில வருடம் முன்பு வரை நாம் அளிக்கும் உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வருடங்கலாக நிலத்தில் இடும் உரத்தின் அளவு அதிகரித்தாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணங்கள்

1.பயிரின் தேவைகேற்ப உரத்தை அளிக்காமல் அதிக படியாக இடுவது

2.சமச்சீரின்றி உரத்தை உபயோகிப்பது.

3.தழை,மணி மற்றும் சாம்பல் சத்து கொண்ட உரங்கள் மட்டும் அதிகம் இட்டு மற்ற தேவையான சத்துக்களை இடாமல் இருப்பது.

4. இயற்கையான உரங்களை சுத்தமாக அளிக்காமல் இருப்பதால் அங்கக கார்பன் குறைவாக இருப்பது.

5.அலுமினிய அபாயம் (Aluminium toxicity) அமில தன்மை அதிகம் உள்ள மண்ணில் ஏற்படுவது

6.உவர் மற்றும் உப்பு தன்மை.

இதற்கு தீர்வு தான் என்ன?

பயிருக்கு இயற்கை உரமும் அவசியம். வேதியல் உரங்களும் அவசியம். மண்ணின் உயிர் தன்மை மற்றும் அதன் மற்ற குணங்களை காக்க இயற்கை உரம் அவசியம்.இயற்கை உரத்தால் தர முடியாத சத்துக்களை வேதி உரத்தால் கொடுக்கலாம். உரங்களை கணக்கின்றி இடுவதை தவிர்த்து அறிவியல் முறைபடி மண்ணை பரிசோதனை செய்து ,சரியான அனைத்து சத்துக்களையும் சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி அளிக்க வேண்டும்.

--

Monday, July 6, 2009

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

தற்போதைய சூழ் நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாட்கள் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக எல்லாப் பயிர்களிலும் களை நிர்வாகம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றுவதில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்யவே இயந்திரக் களைஎடுப்பான் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.






இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?

• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது.

• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.

• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்

ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.


--