Saturday, December 12, 2009

செம்மை நெல் சாகுபடி - பகுதி II


செம்மை நெல் சாகுபடி - பகுதி I



நாற்றங்கால் தயாரிக்கும் முறை:


1 ஏக்கர் நடவு செய்யத்தேவையான விதை அளவு சுமார் 3 கிலோ ஆகும். 100 ச.அடி நாற்றங்கால் பரப்பு போதுமானது. முதலில் 100 ச.அடிக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்கும்போது மண்ணுடன் சுமார் 5 தட்டு அளவு தொழு எரு மற்றும் 1/4 கிலோ டி.ஏ.பி உரம் சேர்த்துக்கொண்டு மண்ணுடன் நன்கு மண்வெட்டி கொண்டு கலக்க வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட படுக்கையின் மேல் நேர்த்தி செய்யப்பட்ட நெல் விதைகளை அந்த மேட்டுப் பாத்தியில் சீராக விழுமாறு தூவ வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர்பாய்ச்ச வேண்டும். இவ்வாறு சுமர் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பாய்ச்சியபின் மேட்டுப்பாத்தியைச் சுற்றி தண்ணீர் கட்டலாம். சுமார் 15 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு வயலில் நடுவதற்கு ஏற்றது.


நடவு வயல் தயாரித்தல்:


சாதாரணமாக நடவு வயல் தயாரிக்கும் முறையிலேயே இதற்கும் நடவு வயல் தயார் செய்தால் போதுமானது. மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையான அடியுரம் இட்டு வயலை சமன் செய்ய வேண்டும்.


நாற்று நடவு:


15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நாம் ஒரு கூடையிலேயே அள்ளி நடவு வயலுக்கு கொண்டு வர இயலும். மேட்டுப்பத்தியில் வளர்ந்துள்ள நாற்றுகளை அடியோடு பெயர்த்து cake slice போல கொண்டு வரலாம். பின்னர் தயார் செய்த நாற்றுகளை ஒரு குத்துக்கு 1 நாற்று வீதம் நட வேண்டும். வரிசைகளுக்கு இடையிலான இடைவெளியும், நாற்றுகளுக்கான இடைவெளியும் ஒன்றே. 22.5 செ.மீ (9") இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும் (சதுர நடவு). For all practical purposes ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் நடுவது நல்லது. ஏனெனில், ஒரு நாற்று அழுகினாலோ, இறந்தாலோ மற்றோறு நாற்று பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவும். மேலும் கை வசம் சிறிது நாற்று stock வைத்திருப்பது அவசியம். இவை பின்னர் Gap filling க்கு உதவும்.

நீர்ப் பாசனம்:

ஒரு முறை 2" அளவிற்கு நீர் கட்டினால் பின்னர் அது நிலத்தில் குறைந்து மயிரிழை அளவு மண்ணில் வெடிப்பு தென்படும்போது அடுத்த முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு காய்ச்சலும் பாய்ச்சலும் நீர்ப்பாசன முறை என்று பெயர்.

களை மேலாண்மை:

பயிர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதால் களை வளர வாய்ப்புள்ளது. இதற்கு கோனோ வீடர் என்னும் களைக்கருவியை நட்ட 15 நாட்களில் இருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்களுக்கு வயலில் ஓட்ட வேண்டும். இதனால் களைகள் மடிவதோடு, வேர்ப்பகுதிகளில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு பயிர் நன்கு கிளைக்கவும் அதிக தூர்கள் வெடிக்கவும் உதவுகிறது

தழைச்சத்து மேலாண்மை:


மேலுரமாக அளிக்கப்படும் தழைச்சத்து controlled application ஆக இருக்க இலை வண்ண அட்டையை பயன்படுத்தலாம். இது visual observation comparison மூலம் செயல்ப்டுகிறது. இலை வண்ண அட்டையை பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பயிரின் வளர்ந்துவரும் 3வது இலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து அளிக்கலாம். இலை வண்ண அட்டையின் பின் பகுதியிலேயே இதற்கான வழிமுறைகளும் பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

செம்மை நெல் சாகுபடி முறையின் சாதக மற்றும் பாதக அம்சங்கள்:


சாதக அம்சங்கள்:


1. சீரான இடைவெளி இருப்பதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள், காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி போட்டியின்றிக் கிடைக்கிறது. மேலும் ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டுமே நடுவதாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கின்றன.

2. தூர்கள் அதிகம் கட்டுகின்றன. மணியின் எடை மற்றும் தரம் உயர்கிறது.

3. தண்ணீர்த் தேவை 40% குறைகிறது

4. விதை அளவு 90% வரை சேமிக்கப்படுகிறது. எனவே இடுபொருட்களுக்கான செலவு குறைகிறது

5. மிக முக்கியமாக அதிக மகசூல் (கிட்டத்தட்ட 50% வரை) கிடைக்கிறது.

6. பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

பாதக அம்சங்கள்:

1. ஒரு நாற்று நடுவது கூலியாட்களுக்கு பழக்கமில்லாததால் ஆள் செலவு அதிகரிக்கிறது. (சில இடங்களில் நடவுக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்)

2. வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களில் ( Flood prone areas) இம்முறையை பின்பற்றுவது கடினம். ஏனெனில், நாற்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் தண்ணீரை சீராகப் பராமரிக்க இயலாது.

3. விவசாயிகளின் பொதுவான மெத்தனம் மற்றும் resistance to change.

--

நவீன வேளாண் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்
செம்மை நெல் சாகுபடி - பகுதி I

நமது நாட்டில் அரிசி சார்ந்த உணவுப் பழக்கமே தற்போது பிரதானமாக உள்ளது. குறைந்து வரும் நிலப்பரப்பினாலும், அதிகரித்துவரும் மக்கள் தொகையினாலும், மாறியுள்ள life style லாலும் அரிசி உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அரிசி (உணவு தானிய) உற்பத்தியை நாம் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் செம்மை நெல் சாகுபடி. இது இதற்கு முன் தீவிர நெல் சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி என்ற பல பெயர்களைப் பெற்றிருந்தாலும் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களால் அழகாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செம்மை நெல் சாகுபடி (System of Rice Intensification - SRI) என்று அழைக்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் செம்மை நெல் சாகுபடி அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமே. ஆனால், SRIன் கோட்பாடுகளை பெரும்பாலானோர் சரி வர அறியவில்லை. கயிறு பிடித்து நேராக நட்டால் அது ஸ்ரீ என்று நினைக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் அவ்வாறே கூறி தங்கள் இலக்கை முடிக்க நினைக்கிறார்கள்.

அதன் உண்மையான கோட்பாடுகள் என்ன என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும்
2. சதுர நடவு நட வேண்டும் - வரிசைக்கு வரிசை இடைவெளியும், ஒரே வரிசையில் உள்ள செடிகளின் இடைவெளியும் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. கோனோ வீடர் பயன்படுத்தி இடை உழவு செய்ய வேண்டும் - இதன் மூலம் களைகள் மடக்கி உழப்பட்டு மண் வளம் கூடும். மேலும் இடை உழவினால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் அதிகரிக்கப்படும்.
4. காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்
5. இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்

மேற்கூறிய 5 கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டால் தான் அதிக மகசூலை அடைய முடியும்.

இந்த சாகுபடி முறையை எப்படி மேற்கொள்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்:

--

ஒரு விவசாயியின் வெற்றிக்கதை

இது திருவள்ளுர் மாவட்டம் தேர்வாய் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்னும் விவசாயியின் வெற்றிக்கதை:



இவருக்கு மொத்தம் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், கடலை போன்றவையே பிரதான விவசாயம். இவருக்கு உள்ள நிலத்தில் சுமார் 85 செண்ட் நிலப்பரப்பு இவருடைய கணிப்புப்படி ஒன்றுக்கும் உதவாததாக கருதப்பட்டு நீண்ட நாட்களாக தரிசாகவே விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தைச் செம்மை செய்ய இயலும் என்று தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள் மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவரிடம் சில பயிர்களைப் பரிந்துரைத்தனர். அதில் ஒன்று தான் ரோஜா மலர் சாகுபடி. அந்த நிலத்தில் அவரும் ரோஜாவை சாகுபடி செய்து நம்பிக்கையுடன் உழைத்தார்.



விளைவு, தற்போது வருடத்திற்கு நிகர லாபமாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தன் மகளின் திருமணத்திற்காக விற்ற ஒரு நிலத்தையும் அவர் மீண்டும் வாங்கியுள்ளார். இது ஒரு பாராட்டப்பட வேண்டிய success story அல்லவா? இதற்காக இவர் தன் குடும்பத்துடன் விடிகாலை 2 மணி முதல் உழைக்கிறார். விஞ்ஞான முறையில் தெளிந்து உழைத்தால் கை மேல் பலன் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவரை நாம் பாராட்டலாம் அல்லவா?

--

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 7 வேளாண் கடன் தள்ளுபடி:

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 2

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 3

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 4

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 5

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6


இதைப்போன்ற ஒரு கேலிக்கூத்தான கொள்கையை lens வைத்துத் தேடினாலும் கிடைக்காது. பொதுவாகவே தனி மனித ஒழுக்கம் மக்களிடையே குறைந்து வரும் இக்காலத்தில், விவசாயிகளை மென்மேலும் ஒழுக்கம் தவறியவர்களாக மாற்றுவதற்கென்றே இந்த திட்டம் உள்ளது.

கடன் தள்ளுபடி என்பது தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் வரும் காலத்திலோ அல்லது வறட்சி காலத்திலோ செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது தற்போது மக்களின் credit discipline ஐ கெடுக்க வந்த ஒன்று. உண்மையில் சத்தியம் தவறாதவர்களாக இருந்த விவசாயிகளை சீரழித்து குணக்கொலை செய்த ஒன்று.

இந்த தள்ளுபடியில் பலன் அடைபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த பெரிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் என்ற போர்வையில் உள்ள அரசியல்வாதிகளும் தான். கடனை ஒழுங்காகக் கட்டும் விவசாயிகளுக்கு எந்த ஊக்கமும் கிடையாது. Atleast ஒழுங்காகக் கட்டிய விவசாயிகளுக்கு அவர்கள் கட்டிய தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இருப்பதால் ஒழுங்காக செலுத்தும் விவசாயிகள் கட்டாத விவசாயிகளின் பார்வையில் பிழைக்கத்தெரியாதவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் தென்படுகிறார்கள். இதுமட்டுமல்லாது பண நஷ்டமும் அடைகிறார்கள்.

இன்னொரு வேடிக்கை என்ன என்றால், பெரும்பாலும் கஷ்டப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத்தான் இந்தத் திட்டம் தேவை. ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு கடனே கிடைப்பதில்லையே? பிறகு இந்த திட்டத்தால் இவர்களுக்கு என்ன பயன்? அது மட்டுமின்றி நீர்ப்பாசன வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். 10 ஏக்கர் மானாவாரி நிலம் வைத்துள்ள விவசாயியும் 3 ஏக்கர் இறவை வசதி உள்ள விவசாயியையும் ஒன்றாகக் கருத முடியாதல்லவா? கடன் தள்ளுபடித்திட்டதில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?

உதாரணமாக, விதர்பா பகுதியில் மானாவாரியாக (மழையை மட்டும் நம்பி) பயிர் செய்யும் 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு கடன் நிவாரணம் கடன் தள்ளுபடி மூலம் கிடைக்க வில்லை. ஆனால் மேற்கு மஹாராஷ்டிரத்தில் போர் மற்றும் கிணறு வசதி கொண்ட 3 ஏக்கர் திராட்சை பயிரிடும் ஒரு பணக்கார விவசாயிக்கு கடன் தள்ளுபடியில் நிவாரணம் கிடைத்தது. இவ்வகை முரண்பாடுகளை என்ன என்று கூறுவது?

படிக்காத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அலுவலர்களும் நடைமுறையில் உண்டு. வாங்காத கடனுக்கு நோட்டீஸ் பெறும் விவசாயிகளும் உண்டு.

இவ்வகை குளறுபடியால் வேளாண் கடன் தள்ளுபடி உண்மையிலேயே தேவையான பலன் அளிக்கவில்லை. மேலும் விவசாயத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் இதர விஷயங்களுக்குத் தேவையான முதலீடு குறைந்ததன் விளைவு (ஏற்கெனவே குறிஞ்சிப்பாடியார் கூறியது போல) கடன் தள்ளுபடியாக விடிகிறது. உதாரணமாக சென்ற வருடம் (தேர்தல் வருடம்) தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.70,000 கோடியை கட்டமைப்பு வசதிகளுக்காகப் பயன்படுத்தியிருந்தோமேயானல் நமக்கு நிரந்தர வசதி வாய்ப்புகளும் கிட்டியிருக்கும். மேலும் உற்பத்தியும் பெருகியிருக்கும். விவசாயிகளும் அரசாங்கத்திடம் உதவி கேட்டு பிச்சை எடுக்கும் நிலையும் வாராதிருந்திருக்கும்.
என்ன செய்வது? என் போன்றவர்கள் இது போல blog ல் புலம்ப மட்டுமே முடிகிறது. தேவையான அளவு policy makers ஐ sensitize செய்தும் அவர்களின் vested interestனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியவில்லையே?

அடுத்த பதிவில் வேளாண் காப்பீடுத் திட்டம் பற்றி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

--

Friday, December 11, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6

மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை எந்த அளவு புரிந்துகொண்டு உள்ளது என்பது கேள்விக்குறியே!. மத்திய அரசின் அளவுக்கு மாநில அரசுக்கு விவசாயிகளின் பிரச்சனையின் தீவிரம் புரிவதில்லை. பிரச்சனை ஏதாவது ஏற்படுமாயின் மத்திய அரசின் பொறுப்பு என்று தள்ளி விடும் சாமர்த்தியம் மட்டும் மாநில அரசுக்கு நிரம்பவே உண்டு

மாநில அரசின் மெத்தனப்போக்கு குறித்து ஒரு சாம்பிள்:

ஏரி, குளம் போன்றவற்றை தூர் வாருதல் என்பது. குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது தூர் வார வேண்டும். எனக்குத் தெரிந்து கடைசியாக 97ம் ஆண்டு தூர் வாரப்பட்டது என்று நினைக்கிறேன். நமக்கு கிடைக்கும் மழை அளவு தாராளமானது. அதனை நாம் சேமிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார், இஸ்ரேலைப் பார் என்று கூறும் நாம் அவர்கள் எடுக்கும் முயற்சியையும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொரு வருடமும் பல டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. கிடைக்கும்/இருக்கும் தண்ணீரை சேமிக்கத்தெரியாத நாம் அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் தாவாவில் இறங்குகிறோம். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றை தூர் வாரி நீரை சேமித்தாலே போதும். ஒரு ரூபாய் அரிசி மற்றும் கலர் டி.வி போன்றவை தேவையில்லை. அதனை சம்பாதிக்கும் அளவு விவசாயிகள் உயர்ந்து விடுவர்.

அரசாங்கத்தின் கொள்கை என்பதில் மற்றுமொரு குறைபாடு என்பது குறைந்தபட்ச ஆதார விலை. நெல், கோதுமை மற்றும் கரும்புக்கு மட்டுமே இவை நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு இருப்பதால் தான் சிறு தானியங்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடுவது பரப்பளவில் மிகவும் குறைந்துள்ளது. ஒரு வேளை இவற்றிற்கும் ஆதார விலை நிர்ணயித்தால் இவற்றின் உற்பத்தியும் கூடும். மாற்றுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தும் அரசு அவ்ற்றிற்கான support ம் சேர்ந்து அளிக்க வேண்டும். சர்க்கரை என்று எழுதிப் படித்தால் மட்டும் இனிக்காது.

வேளாண் கடன் தள்ளுபடி என்ற கேலிக்கூத்தை அடுத்த பதிவில் காண்போம்

--

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -5 வேளாண் விரிவாக்கம்

வேளாண் துறையின் மெத்தனப்போக்கு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.இது ஒரு சாம்பிள் தான். இதனைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முறை நான் விவசாயிகள் பயிற்சிக்காகத் தேவையான கருத்துகளைத் திரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசு கட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தை அணுகினேன். அங்கிருந்த ஒரு வேளாண் அதிகாரி எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நிறைய கையேடுகள் கொடுத்தார். ஒரு அறை முழுதும் கையேடுகள் இருந்தன. அவற்றிலிருந்து தேவையானவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அறையையே எனக்கு திறந்து கொடுத்தார். நான் அப்போது அவரிடம் " உங்களிடம் இவ்வளவு இருக்கிறதே, இதை நீங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவது இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை இருந்தாலும் எனக்கு பயன் இல்லை. நான் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூட்டங்கள் நடத்த விரும்பினேன். எனக்கு என் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர் வந்தால் தான் ஜீப் அல்லது வண்டி கிடைக்கும். அவரிடம் கேட்டபோது என்னை அலைக்கழித்து தொந்தரவு செய்யதே என்று கூறி விட்டார். மேலும் எங்கள் பட்ஜெட் மிகவும் குறைவு. எனவே நான் வெறுத்து விட்டேன். நாங்கள் வீண் சம்பளம் வாங்குகிறோம். நீங்களாவது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் எண்னத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு உதவி செய்து நான் திருப்தி அடைகிறேன்" என்றார். இதற்கு என்ன சொல்லுவது?

மேலும் ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

தோட்டக்கலைத்த்றையில் ஒரு திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஒரு ஒன்றியம் நகர்ப்புறம் சார்ந்தது. அதற்கும் ஒரே அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பொறுப்பு அதிகாரி தன்னாலான முயற்சியை செய்து விட்டு, தகுந்த விவசாயிகள் கிடைக்காததால் தன் இலக்கை எட்ட மாவட்டத்தின் வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்ய தன் மேலதிகாரியின் அனுமதியும் பெற்றார். இதன் பின் வேறு ஒரு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளை எங்கள் மூலம் கண்டறிந்தார். ஆனால், புதிய ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியோ அதனைத் தடுத்துவிட்டார். தன் எல்லைக்குள் மற்றவர் எப்படி வரலாம் என்பதே அவரின் கேள்வி. அதனால் இந்த அதிகாரி ஒதுங்கிக் கொண்டார். உரிமை கொண்டாடிய அதிகாரியோ இவரை விரட்டியபின் ஆள் தென்படவே இல்லை. இவரது இந்த சேவைக்கு பாரத ரத்னா விருதே அளிக்கலாம்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நல்ல அதிகாரிகள் கூட வேலை செய்ய இயலாமல் கைகள் கட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையை நமது வேளாண் துறை உருவாக்குகிறது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்படுகிறதோ இல்லையோ, இவர்களின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு விவசாயிகள் துன்பம் அடைகின்றனர்.

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் காண்போம்

--

Monday, November 30, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -4

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பார்வையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு மாநிலங்களில் விவசாயம் நடைபெறுவதே தெரியாது. அவர்களது ஆராய்ச்சிப்பணிகளும் இம்மாநிலங்களை ஒட்டியே இருக்கும். ஆனால் உண்மையில் அரிசி உற்பத்தியில் தமிழகமும் ஆந்திரமும் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றன. தோட்டக்கலைப்பயிர்களில் கர்னாடகம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பாராமுகம் பரந்த முகமாக மாற வேண்டும்.

நாம் எப்போதும் அரசாங்கத்தைக் குறை கூறி வருகிறோம். அதில் உண்மையும் உள்ளது. கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயிகளின் தேவையான கடன் நிதி அமைச்சகத்தின் கையில் உள்ளது. உரமோ, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. மதிப்பு கூட்டுதலோ தனி அமைச்சகத்தின் கையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ ஊரக வளர்ச்சித்துறையிடம் உள்ளது. நீர் நிலைகளோ, நீர்ப்பாசன அமைச்சரிடம் உள்ளது. காடு வளர்ப்போ தனி அமைச்சகத்திடம் உள்ளது. ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் இதற்கு விடிவு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

வேளாண் துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதில்லை. டெப்போக்களில் தேவையான விதை இருப்பு எப்போதும் இருப்பதில்லை. அது எப்படித்தான் தனியாரிடம் எப்பொதும் இருக்கும் ஒரு பொருள் இவர்களிடம் இருப்பதில்லை என்று புரியவில்லை. தெனாலிராமன் வளர்த்த பூனை பாலைக்கண்டு ஓடியதைப்போல் விவசாயிகள் டெப்போ விதைகளைக்கண்டு ஓடுகிறார்கள். துறையில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஒன்று ரிப்போர்ட் எழுதுகிறார்கள் (அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரிவதில்லை) அல்லது மீட்டிங் அட்டெண்ட் செய்கிறார்கள். யாருமில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றுகிறார்களோ தெரிய வில்லை. போகாத களப்பணிக்கு மீட்டிங்கும் ரிப்போர்ட்களும். அந்த அலுவலர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது தான் நம் சிஸ்டம். இதற்காக நான் மொத்த அலுவலர்களையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது அரசுகளின் கொள்கைக்குறைபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் களப்பணி ஆற்ற வேண்டிய அலுவலர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப் படுவதில்லை. ஒரு டூ வீலருக்குக் கூட வழியில்லாமல் விவசாயியிடம் லிஃப்ட் கேட்டுச் செல்லும் களப்பணியாளர்களையும் பார்க்க இயலும். இது போன்றவை களப்பணி ஆற்ற விரும்பும் அலுவலர்களையும் சோர்வடைய வைத்து விடுகிறது. இது மூலம் நாம் அறியும் உண்மை என்ன என்றால், அரசாங்கம் இவர்களுக்காக சம்பளம் என்பதை விரயம் செய்கிறது. எனவே களப்பனியாளர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தர வேண்டியது அரசின் கடமை மற்றுமன்றி அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகார அமைப்புகளும் தான். நிதிப்பற்றாக்குறையைத்தான் எப்போதும் இதற்கு காரணமாகக் கூறுவார்கள். இதனை ஈடு கட்டத்தான் ஆராய்ச்சிகான முதலீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூறுகிறேன். இதனால் ஆராய்ச்சி தேவையில்லை என்று கூற வரவில்லை. உபயோகமான ஆராய்ச்சி தேவை என்பது என் கருத்து. களத்தில் விவசாயிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே தேவைக்கேற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள இயலும்.

இதன் அடுத்த பதிவை பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்

--

Sunday, November 29, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -3

இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை மிகத்தெளிவாக குறிஞ்சிப்பாடியார் அவர்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப்போக்கு இப்படியே தொடர்ந்தால் நமது நிலை என்ன ஆவது? இதற்கு நாம் அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருக்கலாமா? மற்றவர்களுக்கு இதில் பங்கு இல்லையா?

இந்திய விவசாயத்தில் மாற்றம் ஏற்பட பலருடைய பங்களிப்பு தேவைப்படுகிறது.

முதலில் முக்கியமாக அரசாங்கத்தின் பங்கு உள்ளது. அரசாங்கத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவசாயிகளை விட ஆழமான அறிவு உள்ளது. அவர்களது முன்னுரிமை வேறு. அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

இரண்டாவதாக, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கு. அரசாங்கம் முக்கிய முடிவுகள் எடுக்க இந்நிறுவனத்தின் ஆலோசனைகளை பெரிதும் சார்ந்துள்ளது. இவர்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண் விரிவாக்கத்துக்கு அளிப்பதில்லை. உதாரணமாக, வீரிய ஒட்டு விதைகள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வீரிய ஒட்டு விதைகளில் எத்தனை ரகங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளன? சமீபத்தில் வெளியிடப்பட்ட ரகங்களின் பெர்ஃபார்மன்ஸ் என்ன? நாம் ஏன் இன்னும் 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ரகங்களை இன்னும் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்? இவ்வளவுக்குப்பின் புதிய ஆராய்ச்சியின் மூலம் நாம் சாதிக்கப்போவது என்ன? அதற்கான முதலீட்டினால் என்ன பயன் விளையப்போகிறது? மேலும் நவீன ரகங்கள் அதன் முழுத்திறமையை வெளிப்படுத்த தேவையான வளர்ச்சி சூழ்நிலைகளை உருவாக்கித்தர வேண்டாமா? ஆராய்ச்சி நிலையங்களுக்கும் அரசாங்க வேளாண் டிபார்ட்மண்ட்க்கும் உள்ள தொடர்பு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் இவர்களை யார் ஒருங்கிணைக்கப்போகிறார்கள்? விவசாயம் ஸ்டேட் சப்ஜெக்ட் அல்லது செண்ரல் சப்ஜெக்ட் என்று எவ்வளவு நாள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? விவசாய முன்னேற்றத்திற்கு ஸ்டேட் சப்ஜெக்டாக இருந்தால் என்ன செண்ரல் சப்ஜெக்டாக இருந்தால் என்ன? ஒரு தெளிவான கொள்கை வேண்டாமா? இதனை அரசுக்கு எடுத்துக்கூறி வழிகாட்ட ஐ.சி.ஏ.ஆர் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டாமா?

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் இடுகிறேன்?

இது பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

--

Saturday, November 28, 2009

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 2

சென்ற பதிவில் ஓர் கரைசலைத் தயார் செய்வது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இன்னொரு எளிய வழியைப் பற்றிப் பார்ப்போம்:

பொறி வைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். பல்வேறு வகைப் பொறிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:

விளக்குப் பொறி
இனக்கவர்ச்சிப்பொறி
ஒட்டும் பொறி


இவற்றில் விளக்குப் பொறிகள் வயல்களின் நடுவே 60 வாட்ஸ் பல்பை நேரெதிர் நிலையில் அமைக்கப்பட்ட புனல்களின் இடையில் கட்டி அதன் கீழே ஒரு தட்டில் சிறிது பூச்சிகொல்லி மருந்தை வைத்தால் விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு பொறிகளில் மாட்டிக்கொள்ளும். இவை குறைந்த செலவுதான் பிடிக்கும் என்றாலும் கிராமப்புறங்களில் தொடர் மின்சாரம் என்பது கேள்விக்குறியாக இருப்பதால் இதன் பலன் முழுமையாகக் கிடைப்படு இல்லை.

இனக்கவர்ச்சிபொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச்சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவு கொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொனண்டு தான் இனக்கவர்ச்சிபொறிகள் செயல்படுகின்றன. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிற்து. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. .

இனக்கவர்ச்சிபொறிகள் மூலம் எல்லா விதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது. அவையாவன:

கத்தரி தண்டு துளைப்பான்
வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான்
தக்காளி காய் துளைப்பான்
நெல் தண்டு துளைப்பான்

மேலே கூறியுள்ள பயிர்களில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு 5 - 6 பொறிகள் வைத்தால் போதுமானது.

ஒட்டும் பொறி:

சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகர ஷீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப் பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண்டை, பருத்திப் பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. 1 ஏக்கருக்கு 4 - 5 பொறிகள் வைத்தால் போதுமானது.

இருப்பினும் பூச்சித்தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.

பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது பூச்சி வரும் அறிகுறிகளை நமக்கு தெரிவித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

தற்போதைய அவசர உலகத்தில் மேற்கூறிய பொறிகள் உடனடியாகக் கிடைக்கின்றன. பெஸ்ட் கண்ரோல் இந்தியா என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து விற்று வருகிறது. உபயோகித்துப்பார்த்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

--

Friday, November 27, 2009

இந்திய விவசாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

சென்ற பதிவில் இந்திய விவசாயம் கடந்து வந்த பாதையை பற்றி பார்த்தோம் .இப்பதிவில் இந்திய விவசாயம் இனி வரும் காலங்களில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.


1.வேளாண் உற்பத்தியின் வளர்ச்சியில் மந்த நிலை


உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 1980 களில் 2.85 சதவீதத்திலிருந்து 1990 களில் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 2009 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் மேலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனால் இந்த ஆண்டு இந்தியா அதிக அளவில் (நிர்ணயிக்கபட்ட 20 மில்லியன் டன்னை விட) உணவு தானியங்கள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

2.வேளாண் தொழிலில் குறைந்து வரும் அரசின் முதலீடு


இந்திய அரசு வேளாண்மைக்கு செய்யும் முதலீடு சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் குறைந்து வர தொடங்கி உள்ளது.உதரணமாக முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நீர் பாசனத்துக்கு செலவு செய்ய பட்ட தொகை மொத்த பட்ஜெட்டில் 23% ல் இருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 5 சதவிதமாக குறைந்து உள்ளது.


3.குறைந்து வரும் தனி நபர் நில அளவு


உணவு தானிய உற்பத்தி செய்யபடும் 120 மில்லியன் ஹெக்டேர் என்ற நில அளவானது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரிக்க படாமல் அப்படியே உள்ளது. மேலும் இந்த நிலத்திலே நெல், கோதுமை பயிரிடபட்ட நிலங்கள் வெகுவாக மற்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்ய குறைந்து கொண்டு வருகிறது.
1960 களில் சராசரியாக தனி நபர் நில அளவானது 2.63 ஹெக்டேர் என்ற நிலையிலிருந்து மாறி 2006 - 2007 ல் 0.14 ஹெக்டேர் ஆக குறைந்துள்ளது. தற்சமயம் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சபடுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 7.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமானது பல்வேறு பட்ட தேவைகளுக்காக குறைந்து கொண்டு வருகிறது.


4. வளம் குன்றிய மண்


மண்ணின் பௌதீக தன்மையை அறியாமலும் அடிப்படை அறிவியல் முறை சாராமலும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இடபட்டு கொண்டிருக்கும் செயற்கை உரங்களால் மண் தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.


5.தொழில்நுட்பம் அறியாமை


உணவு தானிய பயிர்களுக்கு உற்பத்தியை பெருக்க போதிய தொழில் நுட்ப அறிவுடன் கூடிய அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளிடம் சென்றடைய வைப்பதிலேயே நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது. உதாரணமாக கோதுமையில் ஒரு ஹெக்டேர் மகசூலானது 4700 கிலோ என்ற அளவிலிருந்து தற்சமயம் 4000 கிலோவாக குறைந்து கொண்டு இருக்கிறது. நெல், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் இதே நிலை தான்.இதனால் தான் சமையல் எண்ணெயை மட்டும் கடந்த ஆண்டு சுமார் 30000 கோடி ரூபாய்க்கு அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.


6.தொலைநோக்கு பார்வை அற்ற திட்டங்கள்


தன்னிறைவு வேளாண்மைக்கு 2001ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தேக்க நிலையே இந்தியாவில் நிலவுகின்றது. 40% விவசாயிகள் தங்களுக்கு எதாவது மாற்று தொழில் கிடைத்தால் அடுத்த கணமே விவசாயத்தை விட்டு செல்ல தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு. எனவே இதற்கு தகுந்த நீண்ட கால திட்டங்கள் தான் நமக்கு தேவை. ஆகவே கவர்ச்சி திட்டங்களை ஒழித்து வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.


7.தரமான விதை


ஒரு ஆண்டிற்கு சராசரியாக எல்லா பயிர்களுக்கும் தேவையான தரமான விதை அளவு 48 மில்லியன் குவிண்டால் விதைகள். ஆனால் நமக்கு கிடைப்பதோ 10.84 மில்லியன் குவிண்டால் விதைகளே. பெரும்பாலான விவசாயிகள் தரமான விதை கிடைக்காமலே திண்டாடுகின்றனர் என்பது வேதனையான செய்தி.


8. வேளாண் கடன்


47% நடுத்தர விவசாயிகளும் 70% சிறு விவசாயிகளும் நம் நாட்டிலே வங்கிகள் மற்றும் ஏனைய வேளாண் கடன் தரும் நிறுவனக்களிடம் இருந்து கடன் பெற இயலாத நிலையிலேயே உள்ளனர். கடன் தரும் நிறுவனக்களிடையே உள்ள வேறுபாடுள்ள வட்டி விகிதமும் மக்களை குழப்புகிறது.இந்தியாவிலேயே அதிக கடன் தேவைபடும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 9403 ரூபாய் கடன் தேவை படுகிறது. ஆனால் மத்திய பிரதேசத்திற்கு 667 ரூபாய் தான் தேவை படுகிரது


9. ஆள் பற்றாக்குறை


புதிய தலைமுறையினர் விவசாயம் செய்வதை கௌரவ குறைச்சலாக கருதுகின்றனர். மேலும் மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களினாலும், இலவசங்களாலும் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.அதே சமயம் இதை ஈடு கட்ட இயந்திரமாக்களும் சிரமமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகளிடம் உள்ளது மிக குறைந்த தனி நபர் நில அளவு.
அது மட்டுமன்றி விவசாய படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முன்பு போல் மிகவும் அதிக திறமையான மாணவர்கள் வருவதும் குறைந்து கொண்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அதிக சம்பளத்துடன் எளிமையாக வேலை கிடைப்பதால் மாணவர்களிடையே விவசாய பட்ட படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.


10.மானாவரி நிலம்


நாம் பயிர் செய்யும் 143 மில்லியன் ஹெக்டேரில் 60% க்கும் மேல் மானாவரி நிலமாகும்.நிலையற்ற வான்மழையும் தொழில் நுட்ப அறிவு பற்றாக்குறையும் இயற்கையாகவே மானாவாரி நிலங்களின் குறைந்த உற்பத்தி திறனும் விவசாயிகளை மேலும் கடனாளிகளாகவே ஆக்குகின்றன. இந்த மானாவாரி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை ஏற்க தயாராக இருப்பினும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும், சூழ்நிலையும் பெரும் தடையாகவே இருக்கின்றன.


மக்கள் தொகையும் உணவு உற்பத்தியும்


ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி அமைப்பின் அறிக்கை படி எதிர்வரும் 2050 இல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். தற்போதைய மக்கள் தொகை பெருக்க நிலை நீடித்தால் 2050 ல் இந்திய மக்கள் தொகை 165 கோடியாகவும் சீன மக்கள் தொகை 141 கோடியாகவும் இருக்கும். எனவே மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.1950களை ஒப்பிடும் போது இடு பொருட்களின் விலை 50 - 100 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வேளாண் விலை பொருட்களின் விலையோ 10 மடங்கு தான் அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி திறனும் குறைந்து, விவசாயிகளும் வேறு வேலை பார்க்க போய் கொண்டு உள்ளனர்.இந்த நிலை நீடித்தால் நாம் மீண்டும் அமெரிக்கா மற்ரும் மேலை நாடுகளிடம் உணவிற்காக பிச்சை எடுக்கும் அவல நிலை ஏற்படும். தன் மக்களுக்கு தேவையான உணவை எந்த நாடு சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடிகின்றதோ அந்த நாடே வல்லரசாகும்.
--

Sunday, November 22, 2009

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1

தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.

பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேன்டும்.

பின்னர் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் நீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள் / செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

இதனைப்பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இது எங்கள் அனுபவம்.

--

Friday, November 13, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -இது தத்துவம்

மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.


நம்பிக்கை தந்த 1950கள்

1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.


நீர் தேக்கங்களும் அணைகட்டுகளும் தான் நவீன இந்தியாவின் கோவில் என்று அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் முழங்கினார்.அதனால் பல லட்சம் விவசாய நிலங்களின் தாகம் தணிந்ததோடு அல்லாமல் வீடுகளுக்கும் மின்சார உற்பத்தியும் செய்யபட்டது.

நிலையற்ற 1960கள்

1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டது. மிகபெரிய பொருள் இழப்பு ஏற்பட்டது.இதனால் நம் நாட்டில் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1965 - 66ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு மிக கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. இந்த கால கட்டத்திலேயே அரசாங்கமே மக்களை ஒரு நாளுக்கு ஒரு வேளை உண்ணாமல் இருக்க சொன்னது. அப்போதயை பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதற்கு முன்னுதாரனமாக கூட இருந்தார். ஆனால் நிஜத்தில் மக்கள் நல்ல உணவு வாரத்திற்கு ஒரு முறை தான் உண்ட நிலை இருந்தது. பல்லாயிரம் பேர் உணவின்றி பசி கொடுமையால் மாண்டனர். பிறகு 1965 ல் பாக்கிஸ்தானுடன் யுத்தம் ஏற்பட்டு வட இந்தியாவில் பதற்றம் நிலவியது.இது போன்ற அடுக்கடுக்கான இன்னல்களினால் இந்தியா 1966 - 67 இல் 6.4 மில்லியன் டண் கோதுமையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இந்த நேரத்திலேயே அமெரிக்க பத்திரிக்கைகள் இந்தியாவை பிச்சைகார நாடாக கேலி சித்திரம் வரைந்து உலக அரங்கிலேயே இந்தியாவையும் அதன் இறையான்மையையும் அசிங்கபடுத்தியது.

பிறகு 1960களின் நடுவிலேயே மெக்சிகோ நாட்டை சார்ந்தவரும் உலகில் ஈடு இணையற்ற பயிர் பெருக்கவியல் விஞ்சானியுமான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரின் உதவியோடு இந்தியாவிற்கு குறைந்த வயதுடைய குட்டை ரக கோதுமை அறிமுகம் செய்யபட்டது. இது அதிக மகசூல் தரவல்லதாகவும் நோய்,பூச்சி மற்றும் வறட்சியை தாங்கி வளர கூடியதாகவும் இருந்ததால் உணவு தானிய உற்பத்தியில் மிக பெரிய புரட்சியே ஏற்பட்டது. இதுதான் பசுமை புரட்சியின் ஆரம்ப காலம் எனலாம்.

பசுமை புரட்சியின் பரிணாம வளர்ச்சி

இடைக்கால 1960 களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வீரிய ஒட்டு கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு அனைத்து கோதுமை வளரும் மகாணங்களிலும் செம்மையாக செயல்படுத்த பட்டது.
1971 ல் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 26 மில்லியன் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்திய மக்களுக்கு பசியின் மீதிருந்த பயம் மறைய தொடங்கி இருந்த காலம் அது. இந்த தருணத்தில் தான் வங்காள தேசம் உருவானது. அதனால் வேளாண் உற்பத்திக்கு அரசால் அதிக பணம் ஒதுக்கி செலவிடமுடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய மக்களுக்கு எல்லை புரத்தை பற்றிய கவலையோடு உணவுத்தேவை பற்றிய கவலையும் சேர்ந்தே இருந்தது என்று சொல்லலாம்.

அணைகட்டு பாசன வாய்க்கால் நீர் மேலாண்மை அறிமுகம்

பெரிய அணைகளில் நீரை தேக்கி வைத்து அதிலிருந்து பாசன வாய்க்கால்களை வெட்டி சுழற்சி முறையில் நீரை பிரித்து கொடுக்கும் முறையானது 1970 களில் அறிமுகபடுத்தபட்டு இந்திய விவசாய பாசன முறையிலேயே ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் முறையும் அறிமுகபடுத்தபட்டு பல லட்சம் புதிய பயிர் செய்யாத நிலங்களை விவசாயம் செய்ய வைத்த கால கட்டம் அது.


அகில இந்திய நெல் மகசூல்

1980 களில் நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்டேரின் சராசரி உற்பத்தி வெகுவாக பெருகியது. அதாவது 1950 களில் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ நேல் என்ற அளவிலிருந்து 1980 க்ளில் 1.25 டன்னாக உயர்ந்து தற்போது 2 டன்னுக்கும் மேல் மேம்படுத்த பட்டுள்ளது.

கரும்பு


1967 - 68ல் 95.50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2006 - 07 ல் 270 மில்லியன் டன்னாக ஆழ்துறை கிணற்று பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் உயர்ந்தது.


எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தி


1980 களில் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் புரட்சி ஏற்பட்டு உற்பத்தி திறன் வெகுவாக உயர்த்தபட்டது. 1990 களில் பருத்தி மகசூல் அதிகரிக்கபட்டது. பருத்தியில் 1967 - 68 ல் 5.78 மில்லியன் பேல்( 1 பேல் என்பது 170 கிலோ) என்ற அளவில் இருந்து 2005 - 2006 ல் 18.50 மில்லியன் பேல்களாக அதிகரிக்கபட்டது.

முட்டை உற்பத்தி

1968 - 69 களில் 5.3 மில்லியன் முட்டைகளாக இருந்தது 2006 - 07 ல் 47.3 மில்லியன் முட்டைகளாக உயர்ந்தது.


மீன் உற்பத்தி

1965 - 66ல் 1.33 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2006 - 07 ல் 6.30 மில்லியன் டன்களாக 5 மடங்கு உயர்ந்தது.


1980களில் ஏற்பட்ட மாற்று பயிர் திட்டம்

இந்த காலகட்டத்திலே நெல் வயல்கள் சில மீன் குட்டைகளாக மாறின. மக்காசோள உற்பத்தி அதிகரிப்பால் நிறைய கொழி பண்ணைகள் உருவாயின. தென் இந்திய கடற்கரை மாநிலங்களில் தென்னை அதிகம் சாகுபடி செய்யபட்டது.சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் ஒரம் கட்டபட்டன. ஏறத்தாழ 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த உணவு தானிய பயிர்கள் அடியோடு பணபயிர் சாகுபடிக்காக மாற்றபட்டன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும் சற்று மேம்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பெருகியது.

எழுச்சி மிகு 1990கள்

இந்த காலகட்டம் இந்திய விவசாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த 1990கள் உலக மயமாக்கல் காலம் எனலாம் . சோசலிஸ்ட் முறையில் நடைபெற்ற இந்திய விவசாயம் கோட்டா முறைக்கு மாற்ற பட்டது. காட் ஒப்பந்தம் காட்டிய வழியில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கள் கொள்கையை ஏற்று கொண்டது. நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த நெல், கோதுமை,மலர்,காய் கனிகள் போன்றவற்றை வெளி நாடுகளுக்கு அதிக அலவில் ஏற்றுமதி செய்தது. இதனால் உலக அரங்கிலே இந்தியாவின் மதிப்பு 1960 களில் இருந்த "கப்பலிலிருந்து இந்தியனின் வயிற்றுக்கு" என்ற அவல நிலை மாறி "உணவு ஏற்றுமதி செய்யும் நாடு" என்ற கௌரவத்தை அடைந்த கால கட்டம்.

21 ம் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தி

தற்போதைய உற்பத்தியை விட 2020 ல் இந்திய வேளாண் உற்பத்தி இரட்டிப்பு அடைய வேண்டும் என்று இந்திய திட்ட வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.உணவு தானியம்,பயிறுவகைகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை சார்ந்த பயிர்களான கரும்பு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் நாம் அதிகபடியான மகசூலை எடுத்து விட்டோம். மேலும் உணவு தானிய பயிர்களுக்கான பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் 2003க்கு பிறகு ஒரு ஹெக்டேர் சராசரி மகசூலில் உணவு தானியங்களை பொருத்த வரையில் நம்முடைய இலக்கை அடைய முடியாத இக்கட்டான சூழலில் தான் உள்ளோம். ஆனால் காய்கறிகள் மற்ரும் பழங்கள், மீன் உற்பத்தி பால் உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்து விட்டோம்.

2020 ல் எதிர்பார்க்கும் நிர்ணயிக்க பட்ட உணவு தானிய உற்பத்தி

வாழிங்டனில் உள்ள பன்னாட்டு உணவு கோட்பாடு ஆராய்ச்சி கழகம் இந்தியாவை பொருத்த வரை அதன் உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இனிவரும் 20 ஆண்டுகள் உணவு உற்பத்திக்கு மிக போரட்டமான கால கட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

எதிர் வரும் 2020 ல் இந்திய மக்கள் தொகை உத்தேசமாக 145 கோடி. உணவு தானிய தேவை பாடு 307 மில்லியன் டன். எதிர் பார்க்கும் உற்பத்தி 240 - 250 மில்லியன் டன். நம்மிடம் உள்ள அவசர கால தேவைக்காக சேமிக்க பட்டுள்ள உணவு தானியங்களின் அளவு 60 மில்லியன் டன்.(இதில் பாதிக்கும் மேல் சரியான அறிவியல் முறைப்படி சேமிப்பு செய்யாததால் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளதாக முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களே வேதனையோடு சொன்ன விஷயம்). எதிர்பார்க்கும் உணவு தானிய இறக்குமதி அளவு 20 மில்லியன் டன்(மீண்டும் 1960 ல் ஏற்பட்ட நிலை).

அது மட்டுமின்றி புவி வெப்பமாதல் நிகழ்வால் பருவம் தப்பும் பருவ மழைகளும்,புயல் மற்றும் குறுகிய கால பேய் மழைகளும் இப்பிரச்சனையின் பரிமாணத்தை அதிகரிக்கின்றன. விரிவாகும் ஏழை பணக்கார விரிசலால் பற்றாக்குறை காலங்களில் உற்பத்தி செய்ய பட்ட உணவும் எந்த அளவுக்கு ஏழை மக்களால் வாங்கும் திறன் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திலே வேளாண் வளர்ச்சி விகிதம்


8 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 4.7%

9 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 2.1%

10 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 1.8%


முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் எட்டபட்ட இரட்டை இலக்க வளர்ச்சி படி படியாக குறைந்து இந்த மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ள பட்டுள்ளது.பன்னாட்டு உணவு கோட்பாட்டு ஆராய்ச்சி கழகம் 2006 ம் ஆண்டு தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் 30% க்கும் மேலானவர்கள் இன்றும் ஒரு வேளை உணவோடு தான் அன்றாடம் உறங்க செல்கின்றனர். ஆப்ரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத வேதனையான உண்மையாகும்.
இந்திய விவசாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் காண்போம்



--

Saturday, August 29, 2009

பண்ணை உபகரணங்கள் - 6 (டிராபிக்கல்டர்)

தற்போதைய சூழ்நிலையில் விவசாய வேலைகளுக்கான கூலியாட்கள் சரிவர கிடைக்கப்பெறாமல் பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாமல் நட்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த குறையை போக்க உருவாக்கப்பட்டுள்ள ஓர் நவீன வேளாண் கருவியாக டிராபிக்கல்டர் விளங்குகிறது.



டிராப்பிக்ல்டர் கருவியின் அங்கங்கள்:

1. விதைப்பான்
2. உரமிடும் கருவி
3. பார் கலப்பை
4. பரம்பு பலகை
5. மண் அணைக்கும் கருவி
6. களை எடுக்கும்; கருவி

டிராப்பிகல்டர் மூலம் எவ்வகை பயிர்களை பயிரிடலாம்?

டீராப்பிகல்டர் மூலம் வேர்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட இயலும்.

டிராப்பிகல்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

1. ஒரே சமயத்தில் பார் மற்றும் சால்களை அமைத்து, அடியுரம்; இட்டு, விதைவிதைத்து விதையை மூட இயலும்.
2. மேலும் பயிர் வளர்ந்த பின்னர் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.
3. மண்ணின் ஈரம் இருக்கும் போதே விவசாயப்பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலும்.
4. சீரான இடைவெளியில் (பயிர் வரிசைகள் மற்றும் ஒரே வரிசையில் உள்ள பயிருக்கு இடையில்) விதைக்க இயலும். எனவே பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
5. அடியுரத்தை சரியான மற்றும் சீரான ஆழத்தில் இடுவதால் பயிர் எளிதாக வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும்.
6. அகன்ற பார் சால்களை உருவாக்குவதால் மானாவாரிப் பயிரில் மழை நீரை அறுவடை செய்ய இயலும்.
7. டிராப்பிக்கல்டரை உழவுமாடுகள் மற்றும் டிராக்டர் இரண்டையும் கொண்டு இயக்க இயலும் என்பதால் சிறு, குறு, மத்திய மற்றும் பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த இயலும்.

--

பண்ணை உபகரணங்கள் - 5 (பார் கலப்பை)

நெற்பயிரைத் தவிர ஏறக்குறைய அனைத்துப் பயிர்களும் பார்சால் முறையில் பயிரிடப்படுகிறது. மேலும் பார்சால் முறையில் செய்வதால் பயிருக்குத் தேவையான நீர், காற்று மற்றும் ஊட்டங்கள் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறுகிறது.

பார் மற்றும் சால் அமைக்க பார்கலப்பை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரியான அளவுகளில் சீரான உயரம் மற்றும் ஆழங்களில் பார் மற்றும் சால்கள் அமைக்கப்படுகின்றன.

பார் கலப்பை மூலம் மேட்டுப்பாத்திகளும் அகன்ற பார் சால்களும் அமைக்க இயலும்.

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)

--

Wednesday, August 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)



நில நிர்வாகத்தில் அடுத்த முக்கியமான பண்ணைக்கருவி சுழற்கலப்பை ஆகும். நன்கு பொடிக்கப்பட்ட விளை நிலமானது பயிற்களுக்குத் தோதான படுக்கையாகிறது .இவ்வாறான விளை நிலம் நீர் மற்றும் காற்று இவற்றை சமமான அளவில் கொள்வதால் பயிறுக்குத் தேவையான அளவில் பருக நீரும், சுவாசிக்கக் காற்றும் கிடைக்கிறது இவ்வாறு பயிருக்குத் தேவையான விளைமண்ணை உருவாக்குவதில் சுழற் கலப்பை பெரும் பங்கு வகிக்கிறது.

சுழற்கலப்பையின் வேலைகள் என்ன?

சுழற்கலப்பை உழப்படாத விளை மண்ணை வெட்டுகிறது(Cutting). அவ்வாறு வெட்டப்பட்ட விளைமண் பொடிக்கப்படுகிறது(Pulverizing) .பொடிக்கப்பட்ட விளைமண் சமப்படுத்தப் படுகிறது(Leveling). சுழற் கலப்பையின் கொழுக்கள் எதிர் எதிர் திசையில் இருப்பதாலும் அதன் சுழற்சி இயக்கத்தாலும் மண் வெட்டப்பட்டு பொடிக்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் ஓர் பரம்புப் பலகை இருப்பதால் பொடிக்கப்பட்ட மண் சமப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் சீரான(Free flowing) மேல்தட்டு விளைமண் கிடைக்கப் பெறுகிறது.

பயன்கள்:

• விளைமண் எத்தனை கடினமாக இருப்பினும் துகளாக்கப்படுகிறது.
• விளைநிலம் சமப்படுத்தப்படுவதால் நீர் நிர்வாகம் செம்மை பெறுகிறது.
• இதனால் களை நிர்வாகமும் எளிதாகிறது.

சுழற் கலப்பை 36 மற்றும் 42 கொழுக்களைக் கொண்ட இரண்டு வடிவங்களில் பெரும்பாலான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

--

Sunday, August 16, 2009

விதைப்புடன் உரமிடும் கொருகலப்பை

ராமு: அண்ணே வணக்கம்னே

சோமு: வணக்கம் விடிஞ்சும் விடியமா இருக்கிற இந்த நேரத்துல வந்து நிக்கிற என்ன விசயமப்பா

ராமு: கொருக்கலப்பைய வச்சு விதைக்கிறத பத்தி சொன்ன நீங்க அதோட உரத்தையும் சேர்த்து போட்ற கலப்பை இருக்கிறதா சொன்னிங்க அத பத்தி தெரிஞ்சுட்டு போலாமேன்னுதன் இவ்வளவு சீக்கிரமா வந்தேன்

சோமு: அதுவாப்பா குறைஞ்ச விலைல கிடைக்கிற இந்த கொருக்கலப்பை மூலம் நாம் விதைக்கிறதோட அடியுரத்தையும் சேர்த்து இடுவதுதான் இதனோட சிறப்பே!

ராமு : இந்த கலப்பை எப்படி இருக்கும்னு சொல்லுங்கண்ணே

சோமு: சொல்றேன் விதைப்பு மட்டுமே செய்ற கொருக்கலப்பை மாதரியே இதுலேயும் படுக்கை வச சட்டத்துல உள்ள தண்டுகளை மாத்தி அமைச்சு சாலோட இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் இதோட இரண்டு புனல்கள், புனல்களையும் கொழு முனைகளையும் இணைக்க குழாய்கள் இருக்கு இந்த புனல்கள் வழியே விதைகளையும் அடியுரத்தையும் போடும் போது ஒரு புனல் வழியே அடியுரம் விதைக்கு சற்று தள்ளி விழற மாதரி செஞ்சுருக்காங்க இதன் மூலம் விதைக்கிறதும் அடியுரம் போடுவதும் ஒரே நேரத்துல செஞ்சு முடிக்கமுடியுது






ராமு: ஆமாண்ணே வயல் வேலைக்கு ஆள் கிடைக்கிறது சிரமமா இருக்கிற இந்த நேரத்துல விதைப்புடன் உரமிடும் கொருக்கலப்பையை வச்சு விதைக்கும் போது விதையும் உரமும் வெவ்வேறு அழத்துல விழுது.அதோட விதைகள் வரிசைக்கு வரிசை சீரான இடைவெளில விதைக்கப்படுவதால கலைகளையும் மிகச்சொலபமா எடுத்துடலாம். இதனால கலைகளுக்கும் பயிருக்கும் பயிர்களுக்குள் ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் மட்டும் மிக அதிக அளவுல உரச் சத்தை எடுத்துக்கிட்டு வளர முடியும். என்ன நான் சொல்றது?

சோமு: ரொம்ப சரியா சொன்னப்பா நீ

ராமு: இந்த கலப்பைய பத்தி வேற எதாவது விவரம் இருக்கான்னே?

சோமு: இந்த கலப்பைல விதைகளையும் உரத்தையும் போட்டு வைக்கிற பகுதி இல்லாததால நம்ம மடியிலேயோ இல்லைன்னா முதுகிலேயோ கட்டி எடுத்துகிட்டு விதைக்கும் போது விதைக்க முடியும் ஒரு கொழு முனையோட உள்ள கலப்பைய வச்சு 0.25-0.30 ஹெக்டேர் நிலத்தையும் இரண்டு கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.6-0.8 ஹெக்டேர் நிலத்தையும் மூன்று கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.8-10 ஹெக்டேர் வரைலயும் ஒரே நாளில் விதைச்சு உரமிட்டு முடிச்சுடலாம்

ராமு: ரொம்ப சந்தோசம்னே இந்த முறை வேதைப்புடன் உரமிடும் இந்த கொருகலப்பைய வச்சு என்னோட பங்காளியை விட நான் நல்ல மகசூல் எடுப்பன்னேன்.

சோமு: நிச்சயம் எடுக்கலாம்ப்பா! அரோக்கியமான உங்க போட்டியில கண்டிப்பா ஜெயிக்க போவது நம்ம நாட்டோட விவசாயம்தாம்ப்பா!

--

Sunday, July 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பள்ளக்கால் வயல்கள் மற்றும் நன்செய் நிலங்களில் நேரடி விதைப்பானைப் பயன்படுத்த இயலாது. அத்தகைய வயல்களில் நாற்று நடுதல் சிறந்த பலனைத் தரும். நாற்றுகளைப் பறிக்கவும் நடவும் வேலையாட்கள் தட்டுப்பாடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நெல் நாற்று நடும் இயந்திரம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.



நெல் நாற்று நடும் இயந்திரத்தின் சிறப்பம்சங்கள:

இது ஓர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரேயில் நாற்றுகளை விட்டு 15-20 நாட்களில் நடவு வயலில் நட வேண்டும் இந்த வகை நடவின் மூலம் பயிர் வரிசைகளுக்கு இடையே சீரான இடைவெளி விடப்படுவதால் தூர் கட்டுவது பெருகி அதிகத் தூர்கள்,மணிகள் மற்றும் கதிர்கள் பிடிக்க வகை செய்கிறது. நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 12-15 கிலோ விதையளவு போதுமானது பயிர் வரிசைகளுக்கிடையில் இடைவெளி இருப்பதால் களை நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.

1 ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு சுமார் 2-3 மணிநேரம போதுமானது.
1 மணிக்கு 0.5-1.0 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

--

Monday, July 20, 2009

உயிர்களை காக்கும் உரங்கள்

இந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பதுதான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் ஏற்படுத்த பட்டு வருகிறது. இது பற்றி முழுதும் அறிய வரலாறின் சில பக்கங்களை புரட்டி பார்ப்போம்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு சீராகவே இருந்தது.கொடிய நோய் நொடிகளாலும்,போர்களாலும், ஒரு சில தலைவர்களின் சித்தாந்த வெறியாலும் , பசி பட்டினியாலும் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் ஒரு மில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க ஒரு நூற்றாண்டு தேவை பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் இந்த நிலை மாற தோன்றியது.1960 ல் 3 பில்லியனான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியனாக மாறியது.அடுத்த 12 ஆண்டுகளில் 5 பில்லியனாக மாறியது.2010ல் 7 பில்லியனாக அதிகரிக்க கூடும் என்று கருத படுகிறது. மக்கள் தொகை பெருகிய அளவு விளை நிலங்கள் பெருகவில்லை.

17 ம் நூற்றாண்டின் மிக பெரிய பொருளாதார நிபுணர் மால்தூசின் கருத்துப்படி உலகில் மக்கள் தொகை பெருக்கள் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் வளர்கிறது. போர், பட்டினி , நோய்,வறுமை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் அதிகளவில் இறப்பதாலேயே மீதி உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறது என்றார்.

அந்த கூற்று படி 1970களில் மிக பெரிய பேரழிவு வந்து பட்டினியால் பெரிய அளவு மக்கள் தொகை குறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் பெரிய அளவில் மக்கள் பட்டினியால் இறந்திருக்க வேண்டும். இந்த பேரழிவிலிருந்து உலகை காக்க வந்தது தான் பசுமை புரட்சி. பசுமை புரட்சி என்பது குறுகிய நில பரப்பில் அதிக அளவு சத்துக்களை உண்டு அதிக அளவு விளைச்சலை கொடுக்கும் பயிர்களை வளர்ப்பதே ஆகும். பயிருக்கு தேவையான அதிக படியான உணவை எப்படியாவது கொடுக்க வேண்டும். பயிருக்கு தேவையான அதிகபடியான உணவை உரங்கள் மூலம் கொடுக்கிறோம்.

எனவே உரங்களின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை

பல வருடங்களாக தழை சத்து சுழல் பற்றி ஆராய்ந்து வரும் ஸ்மில் என்ற விஞ்ஞானியின் கூற்று படி தற்போது 40 சதவித மக்கள் உயிர் வாழ்வது ஹேபர்-போஷ் கண்டுபிடித்த அம்மோனியா தயாரிக்கும் முறையின் உதவி தான்.

இன்னொன்றையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களின் வேருக்கு, தான் எடுக்க போகும் சத்து உரத்திலிருந்து வருகிறதா? அல்லது இயற்கையில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து கிடைக்கிறதா என்று தெரியாது. அவற்றிற்கு இரண்டுமே ஒன்று தான்.


கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் உரங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தை பெருக்கத்தை அறியலாம்

வருடம் உர உபயோகம்(மி. டன்) உர உபயோகம்(kg/ha) உணவு உற்பத்தி(மி.டன்)
1951-520.066 0.652
2001-02 17.391.5212
2002-0316.7 84.9182.6
2004-0518.4797.1204.6
2005-0620.34 106.9208.6
2006-07 22.04115.6211.8


மேலே உள்ள அட்டவனையை பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும். கடந்த சில வருடம் முன்பு வரை நாம் அளிக்கும் உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வருடங்கலாக நிலத்தில் இடும் உரத்தின் அளவு அதிகரித்தாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணங்கள்

1.பயிரின் தேவைகேற்ப உரத்தை அளிக்காமல் அதிக படியாக இடுவது

2.சமச்சீரின்றி உரத்தை உபயோகிப்பது.

3.தழை,மணி மற்றும் சாம்பல் சத்து கொண்ட உரங்கள் மட்டும் அதிகம் இட்டு மற்ற தேவையான சத்துக்களை இடாமல் இருப்பது.

4. இயற்கையான உரங்களை சுத்தமாக அளிக்காமல் இருப்பதால் அங்கக கார்பன் குறைவாக இருப்பது.

5.அலுமினிய அபாயம் (Aluminium toxicity) அமில தன்மை அதிகம் உள்ள மண்ணில் ஏற்படுவது

6.உவர் மற்றும் உப்பு தன்மை.

இதற்கு தீர்வு தான் என்ன?

பயிருக்கு இயற்கை உரமும் அவசியம். வேதியல் உரங்களும் அவசியம். மண்ணின் உயிர் தன்மை மற்றும் அதன் மற்ற குணங்களை காக்க இயற்கை உரம் அவசியம்.இயற்கை உரத்தால் தர முடியாத சத்துக்களை வேதி உரத்தால் கொடுக்கலாம். உரங்களை கணக்கின்றி இடுவதை தவிர்த்து அறிவியல் முறைபடி மண்ணை பரிசோதனை செய்து ,சரியான அனைத்து சத்துக்களையும் சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி அளிக்க வேண்டும்.

--

Monday, July 6, 2009

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

தற்போதைய சூழ் நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாட்கள் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக எல்லாப் பயிர்களிலும் களை நிர்வாகம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றுவதில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்யவே இயந்திரக் களைஎடுப்பான் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.






இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?

• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது.

• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.

• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்

ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.


--

Sunday, June 28, 2009

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

விளை நிலத்தை பசுமைத் தங்கத்துடன் ஒப்பிடலாம்.உயர் விளைச்சலுக்குத் தரமான விளைமன் மற்றும் நில நிர்வாக அமைப்புகள் அடிப்படைத் தேவையாகும். பொதுவாக விவசாயிகள் தங்களது விளைமண் நிர்வாகத்தில் தகுந்த கவனம் செலுத்துவதில்லை. ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும், நடைமுறைப் படுத்தவும் தகுந்த உழவியல் உபகணங்களை கொண்டு நிலத்தை சீர் படுத்த தேவையான உத்திகளையும், அதற்கான உபகரணங்களைப் பற்றியும் அறியலாம்.

1. நில நிர்வாகம்
2. உழவு

“அகல உழுதலை விட ஆழ உழதல் சிறந்தது” – என்பது மூத்தோர் வாக்கு, ஆனால் நடைமுறையில் விவசாயிகள் ½ அடி ஆழத்திற்கு மேல் ஆழமாக உழுவதில்லை. ஆழ உழுவதற்கான உழவியல் கருவிகளைப் பற்றி அவாகள் அறியாததே இதற்கு காரணம்.

½ அடிக்கும் மேல் ஆழமாக உழுவதன் அவசியம் என்ன?

நாம் தொடர்ச்சியாக வயலை கலப்பை கொண்டு ½ அடி வரை உழுவதால் ½ அடிக்கும் கீழே உள்ள விளை நிலத்தின் பகுதி பாறை போன்ற கடினத் தன்மை அடைகிறது. இதனால் வேர் மற்றும் மழை நீர் ½ அடி ஆழழத்தைத் தாண்டி மண்ணில் ஊடுருவ இயலவில்லை.

அடி விளை மண் (sub surface layer) கடினத்தன்மை அடைவதால் ஏற்படும் விளைவுகள்:

அடி விளை மண் கடினத்தன்மை அடைவதால்…
• பயிர்களின் வேர்கள் ½ அடிக்கும் கீழே ஊடுருவ முடிவதில்லை
• மழை நீர் ½ அடி ஆழத்திற்கு மேல் விளை மண்ணால் உறிஞ்ச இயலாமல் போகிறது.
• அதிகப் படியான மழை நீர் வழிந்தோடி மண் அரிப்பை உருவாக்குகிறது
• வளமான மேல் தட்டு விளைமண் அடித்துச்செல்லப்படுகிறது
• கீழ்த்தட்டில் உள்ள உப்புகள் வடிக்கப் படுவதில்லை இதனால் மண்ணின் தன்மை கெட்டுப் போகிறது.
• வேர்களுக்குத் தேவையான நிலைத்த தன்மை கிடைப்பதில்லை

ஆடித்தட்டு விளைமண்ணின் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழுவதன் மூலம் கடினத்தன்மையைப் போக்கலாம்.

இதற்கு எந்த பண்ணைக் கருவியை உபயோகப் படுத்தலாம்?

உளிக்கலப்பை என்பது விளைமண்ணின் அடித்தட்டுப் கடினத் தன்மையைப் போக்க ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு நவீன பண்ணைக் கருவியாகும்.



படத்தை சுட்டி பெரிதாக பார்க்கவும்


உளிக்கலப்பை கொண்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

• விளைமண் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழப்பட்டு கடினத்தன்மை நீக்கப்படுகிறது.
• இதன் விளைவாக விளை நிலங்களிலேயே மழை நீர் சேகரிக்க படுகிறது
• வேர்கள் விளை மண்ணில் ஆழமாக ஊடருவதால் அடி நீரைப் பயன்படுத்த முடிகிறது
• மண் உப்பத் தன்மை அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
• நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.
• மண் அரிப்பு தடுக்கப்படுகிறது

பொதுவான சந்தேகங்களும் அதன் விளக்கங்களும்:

1. உளிக்கலப்பையை ஏர்மாடு கட்டி உழமுடியுமா?
இயலாது ஓர் உளிக்கலப்பை 1½ அடி ஆழம் உழுவதற்கு 30–35 குதிரைத் திறன் (HP) தேவை. எனவே 35 HP டிராக்டர் கொண்டே இதனை பயன்படுத்த இயலும்.

2. உளிக்கலப்பை பயன்படுத்துவதால் 1½ அடி ஆழ விளைமண் புரட்டப்படுமா?
இல்லவே இல்லை, இக்கலப்பை மண்ணை கீறிக் கொண்டு மட்டுமே உழுகிறது. கடினத்தன்மை தகர்க்கப்படுகிறது, மண் புரட்டப்படுவதில்லை

3. வருடத்தில் எத்தனை முறை இக்கலப்பை கொண்டு உழவேண்டும்?
வருடத்தில் குறைந்தது 1 முறையாவது உழுதல் நல்லது

4. எப்போது உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்?
கோடை மழைக்குப் பிறகு உழுதல் நல்லது. ஏனெனில் கோடை காலத்தைத் தொடர்ந்து வரும் மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை விளை நிலத்தில் சேமிக்க இயலும


--

Monday, June 22, 2009

பயிரின் உணவு - 3 மண் பரிசோதனையின் முக்கியத்துவம்

சென்ற பகுதியில் மண் பரிசோதனை செய்ய மண் மாதிரி எடுப்பது எப்படி என்று பார்த்தோம்..

இப்பதிவில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பற்றியும் மண் பரிசோதனையில் நாம் ஆராயும் காரணிகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். பயிர் உற்பத்தியின் செலவில் 40% செலவு பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்க செலவாகிறது. எனவே தேவையான சத்துக்களை மட்டும் தேவையான அளவு, தேவையான நேரத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது ஆகும்.

எந்த ஒரு சத்தும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் பயிர் பற்றாக்குறை அல்லது மிதமிஞ்சிய நச்சுதன்மைக்கான வெளியீட்டு குறியை காட்டும்.அது மட்டுமின்றி பயிர் வெளியிடும் குறியானது கண்டு பிடிக்க மிகவும் கடுமையானதாக இருக்கும்.இந்த பயிரின் குறியானது பூச்சி அல்லது நோய் தாக்குதலால் ஏற்படும் குறி போலவே இருக்கும்.பெரும்பாலான சத்துக்களின் குறைவு ஒரே குறியாக பயிரின் பச்சை தன்மை வெளிரியிருப்பதாகவே காட்டும். எனவே நாம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது.இல்லாவிட்டால் நம்முடைய மண்ணின் சத்தை பற்றிய கணிப்பு தவறாக போய் தேவையற்ற உரங்களை தேவையற்ற அளவு அளித்து பணம் வீணாவதுடன், பயிரின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது

எனவே மண்ணில் உள்ள சத்துக்களை ஒட்டு மொத்தமாக பரிசோதனை செய்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சில நேரங்களில் மண்ணின் வளம் நன்றாக இருந்தும் நல்ல விளைச்சளை தர கூடியதாக இல்லை. இதற்கு காரணம் மண்ணின் சுற்று சூழலில் உள்ள அனுகூலமற்ற நிலையாக இருக்கும்.
மண் பரிசோதனை மூலம் சத்துக்களின் அளவை அறிவதோடு மண்ணின் வளத்தை நிர்வகிக்கும் காரணிகளை பற்றியும் அறிந்து கொள்ளளாம்.

மண் பரிசோதனை மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய காரணிகள் வருமாறு

மண் சத்துக்கள்

தழை சத்து,மணி சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், துத்தநாகம், மாங்கனீசு,இரும்பு,காப்பர்,போரான் மற்றும் மாலிப்டீனம்.

பிற காரணிகள்

pH, Electrical conductivity, Organic Matter, Cation Exchange Capacity, % Base Saturation



CEC(Cation Exchange Capacity)
CEC மூலம் மண்ணின் கெட்டிதன்மையை பற்றிய செய்தியை அறிந்து கொள்ளளாம்.CEC குறைவாக இருந்தால் மண் மணற்பாங்காக இருக்கிறது என்று அர்த்தம்.CEC நடுத்தரமாக இருந்தால் மண் மிதத்தன்மையாக இருக்கிறது என்றும் CEC அதிகம் என்றால் மண்ணில் களி தன்மை அதிகம் என்றும் அர்த்தம்.

PH
PH மூலம் மண்ணில் உள்ள அமில தன்மை மற்றும் உவர் தன்மையை கண்டு பிடிக்கலாம்.PH இன் அளவு 6.5க்கும் குறைவாக இருந்தால் அது அமில நிலமாகவும் 7.5 க்கும் மேல் இருந்தால் அது உவர் நிலமாகவும் இருக்கும். PHஇன் அளவு 6.5 - 7.5 ஆக இருந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்லாம். இந்த PHல் தான் மண்ணில் உள்ள சத்துக்கள் எல்லாம் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும்.

முந்தய பதிவுகள்

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?



--

Thursday, June 18, 2009

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?

சென்ற பதிவில் பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றியும் அவை பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினையும் பார்த்தோம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் நம் மண்ணில் உள்ளதா என்று அறிவது எப்படி? அதற்கு மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்கள் அளவினை கண்டு பிடித்து அது பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முதலில் மண் மாதிரியை நம் வயலில் இருந்து எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் . மண் மாதிரி எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.கீழே இருக்கும் படத்தை அழுத்தி பெரிதாக்கி தெளிவாக படிக்களாம்.

முந்தய பதிவில் திரு யூர்கன் க்ருகியர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே உள்ள படத்தில் விளக்க பட்டுள்ளது.




நன்றி - NAF


மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

முதல் பகுதி - பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

--

Sunday, June 14, 2009

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

மண் வள மேம்பாடு என்பது விவசாயத்தில் மிக முக்கிய முதலீடு என்பது மறுக்க முடியாது.ஏனென்றால் விவசாயத்திற்கு ஆகும் செலவில் 40 சதவிதம், வேளாண் இடுபொருட்களுக்கு ஆகும் செலவாக உள்ளது.

பொதுவாக நாம் உரங்களை இடுவதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை உண்மையிலேயே தேவையான அளவு மட்டும் அளிப்பதில்லை. இதன் விளைவாக இடு பொருட்களின் செலவு அதிகரிப்பதுடன், அந்த செலவுக்கு ஏற்றால் போல் லாபம் கிடைப்பதில்லை. நாம் மேற் சொன்ன மூன்று சத்துக்களை பற்றி மட்டும் நினைக்கிறோம். ஆனால் பயிருக்கு தேவையான முக்கிய சத்துக்கள் 12 உள்ளன.

இப்பதிவில் அவை என்னென்ன சத்துக்கள் என்றும் அவை பயிருக்கு ஆற்றும் உதவி பற்றியும் காண்போம்.

முதன்மை சத்துக்கள்

தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிது முக்கியமான சத்துக்கள்

கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Micro Nutrient)

இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),போரான்(B), காப்பர்(Cu).

தற்போது இந்த சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் முக்கிய பங்கினை பார்ப்போம்

சத்துக்கள்ஆற்றும் பணி
முதன்மை சத்துக்கள்
தழை சத்து
இலை,தழைகளின் வளர்ச்சிக்கு
மணி சத்து வேரின் வளர்ச்சி
சாம்பல் சத்து விளை பொருட்களின் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் இலையில் உற்பத்தி செய்யபடும் சத்தை பயிர்ன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது
சிறிது முக்கியமான சத்துக்கள்
கால்சியம்பயிரின் செற்சுவர் மற்றும் செல்லை வலுவாக்குவது
மெக்னீசியம்பச்சயத்தில் உள்ள முக்கிய சத்து
சல்பர்பயிர் மற்றும் விளை பொருளின் நிறம் மற்றும் வாசனையை நிர்ணயிப்பது(உதாரணம்- பூண்டு)
குறைவான அளவு தேவைபடுபவை
போரான் பூவிலிருந்து காய் உருவாக்கத்திற்கு உதவுகிறது
துத்தநாகம்,
மாங்கனீசு,
இரும்பு,காப்பர்,
மாலிப்டீனம்
பல்வேறு என்சைம் மற்றும் வினை வேக மாற்றியாக செயல் பட்டு உயிர் வேதியல் வினைகளில் ஈடுபடுதல்


ஒவ்வொரு தனிபட்ட சத்துக்களும் ஒரு சில முக்கிய சேவைகளில் ஈடுபட்டாலும், அனைத்து சத்துக்களின் ஒன்றினைந்த சேவை தான் பயிரின் ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நிர்ணயிக்கிறது. அனைத்து சத்துக்களும் தேவையான அளவு இருந்தாலும் ஒரு சத்தின் அளவு மண்ணில் குறைந்து இருந்தாலும் அது பயிரின் உற்பத்தியை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே தான் அனைத்து வகை சத்துக்களை பற்றியும், அவை பயிருக்கு ஆற்றும் சேவை பற்றியும், மண்ணிலிருந்து சத்துக்கள் எவ்வாறு பயிருக்கு கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் அறிவது மிகவும் அவசியம்.

இந்த சத்துக்கள் எந்த அளவு நம்முடைய வயலில் உள்ளது. எவ்வாறு அறிந்து கொள்வது. அதற்கு தான் நாம் மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

--

Sunday, June 7, 2009

Pick Your Own Fruits



அமெரிக்காவின் விவசாயம் மிக பெரிய கார்பொரேட்டுகளின் கைக்கு சென்று பல காலமாகிறது. ஆனாலும் இன்னும் சில சிறு விவசாயிகளும் அங்கங்கு இருக்கிறார்கள். அமெரிக்காவில் பொது மக்கள் காய்கறி மற்றும் பழம் வாங்க செலவிடும் பணத்தில் மிகவும் சிறிய அளவே விவசாயிகள் கைக்கு போகிறது. மிக பெரிய கடை குழுமங்கள் மற்றும் மிக பெரிய விவசாய பண்ணைகளுடனான உறவும் வலுவானது.பெரிய பண்ணைகளிடம் குறைந்த விளையில் கிடைக்காத காய்கறி மற்றும் பழவகைகளை முடிந்த அளவு வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வர்.இப்படி பட்ட சூழ்நிலையில் பழம் மற்றும் காய்கறி பயிரிடும் சிறு விவசாயிகள் சந்தையில் நிலைத்து இருப்பதே கடினமான செயல். அவர்கள் Farmers Market என்ற பெயரில் நகரங்களில் விடுமுறை நாட்களில்(அதாங்க நம்ம ஊர் உழவர் சந்தை போல்) நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் விற்பனை செய்வர்.




அது தவிர ”Pick Your own fruits ” என்ற பெயரில் பழங்கள் நன்கு கனிந்திருக்கும் காலங்களில் பொது மக்களை தங்கள் பழ தோட்டத்திற்குள் அனுமதிப்பர். உள்ளே வரும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வேண்டிய அளவு தாங்களே இலவசமாக பறித்து உண்ணலாம். ஆனால் வீட்டுக்கு வாங்கி செல்ல வேண்டியவற்றை எடை போட்டு வாங்கி செல்ல வேண்டும். அந்த பழங்களின் விலை மார்க்கெட்டில் இருக்கும் விலைக்கோ அல்லது அதைவிட சிறிது அதிகமாகவோஇருக்கும். ஆனால் பழங்களின் சுவையோ மிகவும் நன்றாக இருக்கும்.


இதன் மூலம் பொது மக்களுக்கு ஒரு நாள் பொழுது மிகவும் இனிமையாக செல்கிறது. நகரத்தில் இருக்கும் மக்களுக்கு நல்ல மாறுபாடாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலான பழ மரங்களை மக்கள் பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களும் இலவசமாக தங்களுக்கு தேவையான் பழங்களை இலவசமாக உண்ணலாம்..



விவசாயிகளுக்கோ பழ வகைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதே நேரம் பழங்களை பறிப்பது மற்றும் போகுவரத்து செலவு போன்றவை குறைகிறது.

இந்தியாவில் கூட பழபண்ணைகளில் இது போன்ற செயல்முறைகளை அறிமுகபடுத்தி , சாப்ட்வேர் கம்பெனிகளில் அவுட்டிங் செல்லும் குழுக்களை அங்கு இழுக்களாம். Fruit Picking மட்டுமின்றி அதனுடன் கிராமிய விளையாட்டு,மோட்டார் குளியல் மற்றும் கிராமிய இசை போன்றவற்றையும் சேர்த்து அறிமுக படுத்தாலாம். ஒவ்வொரு குழுவுக்கும் மொத்தமாக பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும்.நகரத்தில் வளரும் இளைஞர்களுக்கும் கிரமிய கலாசாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

--

Wednesday, May 13, 2009

குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்


பயிரின் உற்பத்தி பெருக்கத்திற்கு உழவின் பங்கு இன்றியமையாதது.பயிரின் வேரை மண்ணில் நிலைத்து நிற்க வைப்பது, மண்ணின் தன்மையை நன்கு உயர்த்தி, மண் துகள்களுக்கு இடையே உள்ள இடை வெளியை அதிகரித்து நீர் பிடிப்பு தன்மையை அதிகரிப்பது போன்ற செயல்கள் நன்கு நடைபெற உழவு உதவுகிறது.மேலும் தொழு உரம் மற்றும் உரத்தை மண்ணில் நன்கு கலக்கவும்,களை செடிகளை அழிக்கவும்(முக்கியமாக நீண்ட வேரை கொண்ட களை செடிகளை) உழவு உதவுகிறது.

வேர் வளர்ச்சியின் தன்மை பயிருக்கு பயிர் வேறுபடுகிறது. சில பயிரின் வேர் ஆழமாகவும், சில பயிரின் வேர் மேம்போக்காக வளரும் தன்மை உடையது.பயிரின் தன்மைக்கேற்ப உழவின் முறையை மாற்றி அமைப்பதன் மூலம் பயிரின் விளைச்சளை 30 - 40 சதம் வரை அதிகரிக்களாம். மேம்போக்காக வளரும் நெல் பயிர் போன்ற பயிருக்கு ஆழமான உழவு தேவை படுவது இல்லை.ஆனால் உளுந்து பயிரு போன்ற ஆழ ஊடுருவி வளரும் பயிர்கள் ஆழமான உழவை எதிர்பார்க்கிறது.
இது போல் மேம்போக்காக வேர் விட்டு வளரும் நெற் பயிருக்கு உழவின் தேவையை குறைப்பதன் மூலம் உழவிற்கு ஆகும் செலவில் 40 சதம் குறைக்கலாம்.

சமீப காலமாக விவசாயிகளிடையே மிகவும் வேகமாக பரவி வரும் நியதி குறைந்த உழவு (Conservative Tillage)அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவை குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய முந்தய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு(30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம்.சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே பயிரை வளர்க்க கூட முடியும்!

குறைந்த உழவு செய்யும் முறை:

முந்தய பயிரை அறுவடை செய்த பின் ஒன்று அல்லது இரண்டு முறை டிராக்டர் வைத்து உழ வேண்டும்.அதற்கு பின் ஐந்து நாள் இடைவெளியில் உடனடியாக இரு முறை வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இது களை செடிகளை முளைக்க தூண்டும். களை செடிகள் முளைத்தவுடன்(2 - 3 இலை விட்டபின்) கிளைபோசேட்டை 1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லிலிட்டர் என கரைத்து நாப்சாக் ஸ்பிரேயரில் பிளட் ஜெட்(flood jet) நாசில் கொண்டு களை செடிகளுக்கு மேல் நன்றாக விரவி தெளிக்க வேண்டும்.கிளைபோசாட் தெளித்த 48 மணி நேரத்திற்கு பிறகு வயலில் 5 நாட்களுக்கு நீர் தேக்கி வைக்க வேண்டும். இது மண்னை மென்மை படுத்தும். வயலை சம படுத்திய பின் நெல் நாற்றை வயலில் நடலாம். களையை முளைக்கும் முன் கட்டு படுத்தும் களை கொல்லியை நடவு நட்ட 3 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.களை கொல்லியை தெளிக்கும் போது மண் முழுவதும் மூடி இருக்கும் படி மெல்லிய இழை அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். பொதுவாக விவசாயிகள் 4 முதல் 5 முறை நடவு நடும் முன் வயலை நன்றாக உழுவார்கள்.ஒரு உழுதலுக்கு 750 முதல் 900 ரூபய் வரை ஆகும். குறைந்த அளவிலான உழவு மூலம் இதை குறைக்கலாம்.

இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்:

1.செடியின் வேருக்கு நன்கு பிடிப்பு கிடைக்கிறது.

2.நடவு நட்ட வயலில் உயிர் பிழைக்கும் நாற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

3.நிலத்தில் போடும் உரம் பயிருக்கு அதிக அளவு கிடைக்கிறது. ஆழ உழுதால் உரம் மண்ணில் மிக அதிக அளவு ஆழ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உரம் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை உழவால் பயிரின் வேர் பகுதியிலேயே உரம் தங்கி விடும்.

4.உழவிற்கு செலவிடும் பணம் கணிசமாக(1750 - 2750/ஏக்கர்) சேமிக்க படுகிறது.

5.மண்னின் அங்கக சத்து(Organic carbon) அதிக அளவு காக்க படுகிறது.

6.விளைச்சல் 350- 425 கிலோ/ஏக்கர் அதிகரிக்கிறது.

7.பூட்டாகுளோர் மற்றும் கிளைபோசாட்டு போன்ற களை கொல்லிகள் மண்ணில் தங்குவது இல்லை என்று ஆராய்ச்சி மூலம் நிருபிக்க பட்டுள்ளது.

இம்முறையை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்.

மோட்டார் வைத்து தண்ணிர் பாய்க்கும் விவசாயிகளுக்கு இது ஏற்ற முறை.ஏனென்றால் அவர்கள் தேவையான போது தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம். தமிழ் நாட்டில் ஆற்று நீர் பாய்ச்சி விவசாயம் செய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். PWD தண்ணீரை பயிரிடும் காலத்தில் ஒரே நேரத்தில் திறந்து விடுவதால் விவசாயிகள் அதை பொருத்தே உடனடியாக நிலத்தை உழ வேண்டி உள்ளது.

இது போல் உழும் நிலங்களில் பெண்கள் நாற்று நடும் போது சிறிது கடினமாக இருக்க வாய்ப்புண்டு.
--

Wednesday, May 6, 2009

கொரு கலப்பை விதைப்பு

ராமு: அண்ணே! உங்க கிட்ட ரொம்ப நாளாவே ஒரு விசயம் கேக்கனும்னு இருந்தேன்.

சோமு: என்ன விசயம்பா அது !

ராமு: அண்ணே! என்னோட வயல்ல இதுவரைக்கும் நான் கைவெதைப்பு தான் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனா என்னோட பங்காளி அதாண்ணே நம்ம சுப்பிரமணி, கலப்பை வச்சு விதைக்கிராறு, எனக்கும் அந்த கலப்பை விதைப்ப பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே !

சோமு: அதுவாப்பா ! உன்னோட பங்காளி கொரு கலப்பை வச்சு விதைக்கிராறு.

ராமு: அந்த கலப்பை எப்படின்னே இருக்கும் ?


சோமு: ஆந்திர மாநில உள்ளூர் விவசாயிகளால முதல்ல உபயோகபடுத்தப்பட்ட இந்த கொரு கலப்பையில உள்ள படுக்கை வச சட்டத்தில இரண்டு இல்லேன்னா மூன்று கொழுக்கள் இணைக்கபட்டுருக்குது. இந்த கொழுக்கள் நாட்டு கலப்பையை மாதரியே இருக்கும், ஆனா அதை விட சின்னதா இருக்கும். இந்த கலப்பைய நிலத்தில ஓட்டும் போது கொழுக்கள் சால் அமைச்சிக்கிட்டே வரும். படுக்கை வச சட்டத்த்தில உள்ள தண்டுகளை மாற்றி அமைச்சி சாலோட இடைவெளியை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதோட ஒன்று இல்லன்னா இரண்டு புனல்கள் , புனலையும் கொழு முனையையும் இணைக்க மூங்கிலாலோ இல்லைன்னா உலோகத்தாலோ செய்யப்பட்ட குழாய்கள் இருக்கு. இந்த புனல்கள் வழியே விதைகளை போடும் போது குழாய்கள் வழியே விதைகள் சாலுக்கு வந்துடும். இந்த அமைப்பு முழுவதும் ஒரு ஜோடி மாடுகள் இழுத்துட்டு போற மாதரி நுகத்தடியோட இணைச்சுக்கலாம்.


ராமு: புனல்கள்ள எப்படின்னே விதைகள விதைக்கும்போது கொட்டி வைக்க முடியும்?

சோமு: புனல்கள்ள விதைக்ரதுக்காக உள்ள விதைகள கொட்டி வைக்க முடியாது. ஆனா அதுக்கு பதிலா விதைகளை நமது மடியிலோ இல்லைன்னா முதுகிலையோ தான் கட்டி, விதைக்கும் போது கூட எடுத்துக்கிட்டு போய் விதைக்க முடியும்.

ராமு: கலப்பையோட அமைப்பை பத்தி சொன்ன நீங்க விதைக்கிறத பத்தி சொல்லுங்கண்ணே !



சோமு: கொரு கலப்பையை ஏர் ஓட்ற மாதரி வயல்ல ஓட்டும் போது புனலுக்கு ஒரு ஆள்ன்னு கலப்பைக்கு பின்னாடியே வந்து, புனலுக்குள்ள விதைகள போட்டுகிட்டே வரணும். விதைங்க கொழு ஏற்படுத்தற சால்கள்ள விழுந்துக்கிட்டே வரும் . கொருக்கலப்பையை அடுத்த வரிசையில ஓட்டும் போது சால்கள் தானாகவே மூடிடும். இல்லன்னா விதைச்ச பின்னாடி விதைகள் மண்ணுல நல்லா மூட குண்டகாங்கற கருவியை வச்சு உழவு ஓட்டற மாதரி ஓட்டலாம். இத நம்ம ஆளுங்க குண்டி ஒட்டறதுன்னு சொல்லுவாங்க. இப்படி செய்றதால விதைங்க சால்ல ஒரே சீரான ஆழத்துல விழுந்து மேல் மண் ஒரே சீரா அழுத்தப்படுது. இதனால மண்ணுல உள்ள ஈரத்தன்மை பாதுகாக்கபடுது .விதைச்ச இரண்டாம் நாளும் சாலுக்கு குறுக்க குண்டி ஓட்டனும். மூணாவது,நாலாவது நாள்லையும் தேவைப்பட்டா ஓட்டலாம்.

ராமு: எப்ப வரைலையும் இந்த குண்டி ஒட்டலாம்ணே ?

சோமு: மொளப்பு வெளிய தெரிய ஆரம்பிக்கிற வரைலையும் குண்டி ஓட்டலாம் , அதுக்கப்புறம் ஒட்டவே கூடாது.

ராமு: கொருக்கலப்பையை வச்சு விதைக்கிறத பத்தி சொன்னீங்க! கைவிதைப்பை விட இது எந்த விதத்துல சிறந்ததுன்னே!

சோமு: கை விதைப்பு செஞ்சு,கலப்பைய இல்லைன்னா டிராக்டர வச்சு ஒட்டி விதைகளை மூடும் போது சில விதைங்க மண்ணுக்கு மேலயும், சில விதைங்க ஆழத்ளையும் விழுதுங்க. மண் மேலயே கிடக்கிற விதைங்க விதைச்ச பின்னாடி மழை பெஞ்சா மொளைச்சுரும் இல்லைன்னா மொளைக்காது. ஆனா அழத்துல விழுந்த விதைகலோட மொளைப்பு மண்ணுக்கு வெளியே வரமலேயே உள்ளுக்குள்ளேயே கருகிடும். இதனாலேயும், மண்ணுல ஈரப்பதம் குறைவா இருந்தாலும் கூடுதலான விதைகள விதைக்க வேண்டிஇருக்குது. இதோட விதைங்க வரிசையா விழாம அங்கொன்னும், இங்கொன்னுமாகவோ இல்லன்னா கொத்தாகவோ விழுந்துரும். இதனால தண்ணீர் , சத்து அப்புறம் சூரிய வெளிச்சத்துக்கு போட்டி ஏற்படுறதோட களை எடுக்கும் போது பயிரும் வேரோட பிடுங்கிக்கிட்டு வரும்.

ராமு: ஆமாண்ணே! நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் கைவிதைப்பு செய்ற என்னோட வயல்ல இருக்கு!

சோமு: நிச்சயமா இருக்கும் ! அதனால கொருக்கலப்பைய வச்சு விதைகளை விதைக்கும் போது விதைகள் போதிய ஆழத்ல விதைக்கபடுவதால பயிரோட வேருங்க விரைவா நல்லா வளர்ரதால அடி மண்ணுல உள்ள தண்ணிய கூட எளிதா உறிஞ்சி வறட்சிய தாக்கு புடிச்சி வளர முடியுது.அதோட விதைகள் வருசைக்கு வருசை சீரான இடைவெளயில விதைக்கபடுவதால களைகளை சுலபமா எடுத்துடலாம். இதனால களைகளுக்கும் பயிருக்கும், பயர்களுக்குள்ளேயே ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் செழிப்பா வளருது.

ராமு: ரொம்ப சந்தோசம்னே! நேரடி விதைப்பு செய்யிற விவசாயிகளுக்கு இது ரொம்ப உதவிகரமா இருக்கும்னே! எந்த எந்த பயிரோட விதைகள இந்த கலப்பைனால விதைக்கலாம் .

சோமு: நெல்,சோளம்,மக்கா சோளம் ,பயறு வகை பயிர்கள் மற்றும் கடலை போன்ற விதைகளை ஒரு நாளைக்கு 0.6ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை விதைக்கலாம். ஒரு புனல் உள்ள கொருக்கலப்பை 14.5 கிலோவும் , இரு புனல் உள்ள கொருகலப்பை 18.7 கிலோ எடையும் இருக்கிறமாதரி செஞ்சுருக்காங்க.

ராமு: இந்த முறை கொருகலப்பை வாங்கி என்னோட பங்காளி மாதரி நானும் விதைக்கனும்னே!

சோமு: அவசரப்படாத! இப்ப கொரு கலப்பையோட உரத்தையும் சேர்த்து வயல்ல போட்ற மாதரி கொருக்கலப்பை வந்துருச்சு. அதுபத்தி நாளைக்கு படத்தோட விளக்கமா சொல்றேன்.

ராமு: சரிண்ணே! படுத்தா தூக்கமே வராதுன்னே! எப்ப விடியும்னு இருக்குது! விடிஞ்சதும் மொத வேலையா இங்க வந்து நிப்பேன். நீங்க அவசியம் அந்த உரத்தோட விதைக்கிற கொரு கலப்பையை பத்தி சொல்லணும்.வர்றேன்னே!

சோமு: சரி வாப்பா!

--

Sunday, May 3, 2009

விவசாய மறுமலர்ச்சிக்கு NAF- நவீன மண் பரிசோதனை கூடம்

இந்திய மக்களை பசி பட்டியினியிலிருந்து காப்பாற்றி இன்றைய இந்தியாவின் தற்போதய வளர்ச்சிக்கு காரணமான தலைவர் ஒருவர் என்றால் அது திரு சி.சுப்ரமணியம் அவர்களாக தான் இருக்கும்.மக்களுக்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதும், நாட்டின் கட்டமைப்பை மேற்படுத்துவதும் தான் தனது தலையாய கடமை என்று பாடுபட்டவர் அவர். இந்த வருடம் அவரது நூற்றாண்டு தினம் வருகிறது. 1970 வரை இந்தியாவில் பஞ்சத்தால் ஏற்பபட்ட பட்டினி சாவு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. இந்தியா தன் உணவு தேவையை தன்னால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வெளி நாடுகளிடமிருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலிருந்தது. அந்த உணவையும் இறக்குமதி செய்ய பணம் இன்றி தவித்தது. ஒரு புறம் உணவு பற்றாக்குறை மறு புறம் வெகு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை என மிகவும் அபாயகரமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தது. உணவிற்கு வெளி நாட்டை கையேந்தி இருந்ததால் எந்த அரசியல் ரீதியான முடிவும் சுயமாக எடுக்க முடியாமல் வெளி நாட்டின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் உணவு துறை அமைச்சராக யாருமே பொறுபேர்க்க விரும்பவில்லை. அப்படி பட்ட இக்கட்டான நேரத்தில் உணவு துறை அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்கள் பொறுபேற்றார். மிக குறைந்த வருடங்களில் புதிய வேளாண் தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகபடுத்தி பசுமை புரட்சி ஏற்படுத்தி உணவு பற்றாகுறையை போக்கினார்.(பசுமை புரட்சியின் தேவை, நன்மை, தீமைகள் பற்றி பல எதிர்மறை கருத்து நிலவுகிறது.அது பற்றிய விரிவான அலசலை பிரிதொறு பதிவில் காண்போம்).

பசுமை புரட்சி தொடங்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசுமை புரட்சியினால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும், விவசாயிகளின் இன்றைய நிலை மோசமாக இருப்பதாலும், உணவு பொருளின் தேவை அதிகமாக இருப்பதாலும், விளை நிலங்களின் அளவு குறைவதலும் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவ்சாய உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த கிராம புற மக்களின் வாழ்க்கை திறனை அதிகரிக்க இரண்டாம் பசுமை புரட்சியினை ஆரம்பிக்க தேவை இருப்பதை அறிந்து தன்னுடைய 90 ஆவது வயதில் தேசிய வேளாண் நிறுவனம் என்னும் அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் விவசாய உற்பத்தி திறன் பெருக்கத்துக்காகவும், கிராம மக்கள் முன்னேற்றத்துக்காகவும் ஆற்றும் பணிகள் அளவிட முடியாது. அதன் பணிகளும் அதனால் மக்கள் அடையும் பயன்களை பற்றியும் பார்ப்போம்


நவீன மண் பரிசோதனை கூடம்



பயிரின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சளுக்கும் அடிப்படை தேவை மண்ணின் சத்துக்கள். இந்திய விவசாயிகள் தங்களுடைய மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளாமல் தேவையான் உரங்களை தேவையான அளவு இடாமல் அதிகமான உரங்களை தேவையற்று இடுகின்றனர். மேலும் உரம் இடும் போது தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றி மட்டும் கவலை கொண்டு பிற சத்துக்களை பற்றி கவலை படுவதில்லை.அரசு மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்தாலும் அது அந்த அளவு தரமானதாக இல்லை.


இந்த பிரச்ச்னையை போக்க தேசிய வேளாண் நிறுவனம் உலக தரம் வாய்ந்த மண் பரிசோதனை கூடத்தை தொடங்கி உள்ளது. பயிரை விதைக்கும் முன் மண்ணை இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் சரியாக அளவிடபட்டு தேவையான் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தருகின்றனர். அது மட்டுமன்றி அந்த மண்ணின் தரத்தை உயர்த்த செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றனர். இதன் மூலம் பயிருக்கு தேவையான உரத்தின் அளவு சரியாக நிர்ணயிக்க பட்டு, தேவையான உரங்களை சரியான காலத்தில், தகுந்த முறைபடி பயிருக்கு இடும் முறை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் பயிரின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.

இதை படிக்கும் விவசாயிகளும் தங்கள் மண்ணை நவீன முறையில் பரிசோதனை செய்ய தேசிய வேளாண் நிறுவனத்தை தொடர்பு கொள்ள்ளாம்.
தொலை பேசி: 22542598/22542803
மின்னஞ்சல்: nationalagro@gmail.com
இந்நிறுவனத்தின் மற்ற பணிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்

--

Sunday, April 26, 2009

நெல்லில் நல்ல விதையை தேர்ந்து எடுப்பது எப்படி?

வயலில் தேவையான பயிரின் எண்ணிக்கையை பெருவதற்கு விதையின் முளைப்பு திறனை அறிவது மிகவும் அவசியம். பொதுவாக விவசாயிகள் தங்கள் விதையை பிறரிடமிருந்து வாங்குவதால் அதன் முளைப்பு திறன் குறித்து அறிந்திருப்பது கடினம். தங்களிடம் உள்ள விதைகளில் நன்கு முளைப்பு திறன் மட்டும் உள்ள விதையை பிரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அள்ளவா? அதற்கும் ஒரு எளிய தொழில் நுட்பம் உள்ளது.

1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முட்டையை போடுங்கள். அந்த முட்டை தண்ணீருக்கு அடியில் சென்று அங்கேயே தங்கி விட்டால் அது நல்ல முட்டை. அந்த முட்டையை நம்முடைய நல் விதையை பிரிக்கும் முயற்ச்சிக்கு எடுத்து கொள்ளலாம்.

2. அந்த முட்டையை தண்ணிரிலிருந்து எடுத்து விடவும்.

3. 200 கிராம் உப்பை(1 லிட்டர் தண்ணீருக்கு) தண்ணீரில் இட்டு கரைக்கவும்.

4. தற்போது முட்டையை தண்ணிரில் போடவும். முட்டை தண்ணீரில் மிதக்க வேண்டும். அதன் மேல் பகுதி (25 பைசா நாணயம் அளவு) மட்டும் வெளியில் தெரியவேண்டும். அவ்வாறு இருந்தால் கரைசல் நமக்கு தேவையான அளவு உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாவிட்டால் உப்பின் அளவை அதிகரித்து அல்லது புதிய கரைசலை தயார் செய்து சரி செய்யவும்

5. அந்த கரைசலில் நெல் விதையை இடவும்

6 சில நிமிடத்தில் தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியில் எடுத்து விடவும். அது பதர் விதை. அது முளைக்காது.

7. 10 - 15 நிமிடம் கழித்து மேலுள்ள தண்ணிரை வடிய விடவும்.அடியில் தங்கிய விதையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவவும்.

8. பிறகு விதைக்கும் முன் நிழலில் உலர்த்தவும்

இதன் மூலம் நல்ல முளைப்பு தன்மை உள்ள விதையை மட்டும் தனியே பிரித்து எடுக்களாம்

--

Wednesday, April 22, 2009

தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!


தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்!

--

Sunday, April 12, 2009

ஏன் வேண்டும் கோடை உழவு?


ராமு: அண்ணே! என்ன வானத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க!

சோமு : அடிக்கிற வெயிலுக்கு பெருசா மழை வந்தா நல்லா இருக்குமேன்னு பாக்குரேன்!!

ராமு : ஆமாண்ணே ! அப்பதான் வறண்டு போயிருக்கிற குளம்,குட்டையெல்லாம் நிரம்ப ஆரம்பிக்கும் ,தண்ணீர் பிரச்சனை இல்லாம இருக்கலாம்.

சோமு : தம்பி! கோடையில மழை பெஞ்சா குளம்,குட்டைக்கு மட்டுமில்ல நம்ம வயலுக்கும் நல்லது !

ராமு: கொஞ்சம்விளக்கமா சொல்லுங்களேன்.

சோமு: தமிழகத்துல வருசத்துக்கு சராசரியா 958 மி.மீ மழை பெய்யுது. அதுல 35 சதம் தென்மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள்ளையும்,50 சதவீதம் வடமேற்கு பருவகாற்று வீசும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்கள்ளையும் மிச்சமுள்ள 15 சதவீதம் ஜனவரி முதல் மே வரை உள்ள மாதங்கள்ளையும் பெய்யுது. உழவு செய்யப்படாத கெட்டியான நிலத்தில் விழும் இந்த மழையானது மண் அரிப்பை ஏற்படுத்துவதோடல்லாம மண்ணில் இடப்பட்ட உரசத்துக்களையும் இழுத்துட்டு போய்டுது . மண்ணில் ஈர்த்துகொள்ளப்பட்ட குறைந்த அளவு மழை நீரும் சூரிய வெப்பத்தினால சீக்கிரமா ஆவியாக மாறி வெளியேறுது. அதோட வயலில் முளைத்து வளர்ற களைசெடிகளும் நீரை உபயோகிப்பதால மண்ணில் உள்ள நீர் மிக வேகமாக விரயமாகி போவுது.

ராமு :அண்ணே! இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கான்னே ?வளமான மேல் மண் அரிப்பு,மண்ணில் இடப்பட்ட உர சத்து வீணாவது போன்றவற்றை தடுத்து மழை நீரை எப்படின்னே சேமிக்கிறது?

சோமு: இந்த பிரச்சனைகள்ள இருந்து விடுபடனும்னா சாகுபடி செய்ற நிலங்கள்ள பயிர் அறுவடைக்கு பின்னாடி பெய்யிர கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை 3 வருசத்திற்கு ஒரு முறை சட்டிகலப்பை கொண்டு அழமாக(25 செ.மீ முதல் 30 செ.மீ வரை) உழனும். இதனால மண்ணின் இறுக்கமும் குறையுது.அப்படி உழுதா அடுத்ததாக நம்ப பயிர் செய்யும் போது பயிரோட வேர்கள் ஆழமா வளர்ந்துட்டு போகும். நீர் பற்றாக்குறை காலங்கள்ல கீழ்மட்டத்தில உள்ள நீரை கூட பயிர் உறிஞ்சி வறட்ச்சியை தாக்கு பிடிக்க முடியுது. அதோட இப்படி உழுவதால நன்கு வேர் விட்டு வளர கூடிய அருகம்புல் மற்றும் கோரை கிழங்கு போன்ற களைகளின் வேர் பகுதி முழுவதும் தோண்டி எடுக்க பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்க படுது.

ராமு :அண்ணே!மேல சொல்லுங்கண்ணே!

சோமு : அவசர படாதே. இப்படி உழுத பின்னே பெய்யுர ஒவ்வொரு மழைக்கும் டில்லர் கலப்பை இல்லாட்டி கொளுகலப்பை வச்சி நில சரிவுக்கு குறுக்க நிலத்தை நன்கு பல தடவை புழுதி பட உழனும்.இப்படி உழுவதால மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால நீர் ஆவியவதை தடுப்பதோட வறட்சி காலங்கள்ல பயிருக்கு பயன்படுத்தலாம்னா பாரேன்.

ராமு:இதுல இவ்வளவு விஷயம் இருக்காண்ணே! மண் அரிப்பு தடுப்பு, மழை நீரு சேமிப்போட வேற எதாவது பயன் இருக்காண்ணே?

சோமு :நல்ல கேட்ட போ! பயிர அறுவடை செய்த பின்னாடி வயல்ல பயிரோட தாள்கள் தங்கிடுது. இது பூச்சிகளுக்கு உணவாகவும்,நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்குது . அதனால கோடைஉழவு செய்தோம்னா களைசெடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகுது. இதுனால களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கபடுது.அதோட பயிரை பாதிக்க கூடிய பூச்சிகளின் முட்டைகளும் கூண்டு புழுக்களும் அழிக்கபடுது உழவு செய்யும் போது நெறைய பறவைங்க உழுது கொண்டிருக்கிற நிலங்கள்ள உட்கார்ந்து இருப்பதை பார்த்திருப்ப. இது ஏன்னா நிலத்தை உழும்போது மண்ணின் அடியிலுள்ள கூண்டுபுழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் மேலும் களைகளோட விதைகள் மண்ணின் மேல் வந்து கிடக்கும் போது அவற்றை உணவாக சாப்பிட தான். அதுங்க சாப்பிடலன்னா கூட மண்ணுக்கு மேல புழுக்களின் முட்டைகள்.கூண்டு புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் வரும் போது சூரிய வெப்பத்தால அழிஞ்சிடும்.

ராமு :அண்ணே! நம்ம முன்னோர்கள் கோடை உழவின் மகத்துவத்தை உணர்ந்து தான் சித்திரை மாத புழுதி பத்திரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்னும் சொல்லியிருபாங்களோ! நாமும் கோடை உழவின் மகத்துவமறிந்து செயல் பட்டா குறைந்த நீர் இல்லாட்டி சிக்கன நீருல அதிக மகசூல் எடுக்கலாம். என்னா நான் சொல்ரது?

சோமு :பரவாயில்லயே!கற்பூரம் மாதிரி உடனே பத்திகிட்ட!அது சரி எங்க கிளம்பிட்ட?

ராமு : டிராக்டருக்கு சொல்லி வைக்கத்தான்.

--

Sunday, April 5, 2009

நாங்களும் அமைச்சர்கள் தான் - பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்

பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை

மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன் ,ஹைடிரஜன்,ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.

அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),குளோரின்(Cl),போரான்(B),கோபால்ட்(Co),நிக்கல்(Ni) மற்றயவை.

பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது. பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.

சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்

தழை சத்து - அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)

மணி சத்து -ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)

சாம்பல் சத்து- போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )

கால்சியம்- பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )

மக்னீசியம்- உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )

சல்பர்- பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)

துத்தநாகம்- தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது)

--

Monday, March 30, 2009

தர்பூசனி விளைச்சலுக்கு சில யோசனைகள்



தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். NS - 295 (Namdhari), Riya (sinnova company), SPW - 10 (SPIC), PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 2.5 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.

--

Saturday, March 14, 2009

விவசாயிகளுக்கு நல்ல காலமா?

எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் வந்த இந்த செய்தியை பாருங்கள்.இந்தியாவின் மொத்த உற்பத்தி பொருளுக்கான பண வீக்கம் 2.5 சதம் அதிகரித்துள்ளது.ஆனால் உணவு பொருள் மற்றும் தானியத்தின் பண வீக்கம் 8 - 12% அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிய கூடியது என்ன என்றால் ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் உணவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் அதிகரித்து ஆடம்பர செலவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் குறையும்.இதன் மூலம் அதிக அளவு பணம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கைக்கு வர வாய்ப்புள்ளது.ஏழை மக்களை இந்த விலை உயர்விலிருந்து காக்க அரசாங்கம், PDS போன்றவை உள்ளதால் அவர்கள் இந்த பாதிப்பினில் இருந்து தடுக்க படுவர்.விவசாயத்தை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அதிக பணம் அவர்களை நோக்கி சென்றால்(அவர்கள் செய்யும் செலவு மூலம்) அது அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும்.உலக அளவில் கடந்த சில காலமாக உணவு தானியத்தின் நிகர விலை ஏற்றமும் 50% உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மேலும் சீனா மற்றும் இந்தியாவின் நடுத்தர மக்களின் வளர்ச்சியால் தேவை ஒவ்வொரு வருடமும் 5% உயரும் என கணிக்கின்றனர்.

ஆனால் இதன் முழு பயனும் இடை தரகர்களிடம் போகாமல் விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதுதான் கேள்விக்குறி?

--

Tuesday, March 3, 2009

உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்

சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது

பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?

தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்


தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்
வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.

இவற்றில் முக்கியமானது ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.

அசோஸ்பிரில்லம் என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.

அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்

மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்

மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.

பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.

பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்

சூடோமோனாசு போன்ற நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .

இவ்வகை நுன்ணியிர் உரம் உண்மையிலேயே பயன் அளிக்கிறதா? எவ்வாறு உபயோக படுத்த வேண்டும்? அது செயல் படும் விதம் எப்படி என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.

--