Monday, November 30, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -4

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பார்வையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு மாநிலங்களில் விவசாயம் நடைபெறுவதே தெரியாது. அவர்களது ஆராய்ச்சிப்பணிகளும் இம்மாநிலங்களை ஒட்டியே இருக்கும். ஆனால் உண்மையில் அரிசி உற்பத்தியில் தமிழகமும் ஆந்திரமும் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றன. தோட்டக்கலைப்பயிர்களில் கர்னாடகம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பாராமுகம் பரந்த முகமாக மாற வேண்டும்.

நாம் எப்போதும் அரசாங்கத்தைக் குறை கூறி வருகிறோம். அதில் உண்மையும் உள்ளது. கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயிகளின் தேவையான கடன் நிதி அமைச்சகத்தின் கையில் உள்ளது. உரமோ, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. மதிப்பு கூட்டுதலோ தனி அமைச்சகத்தின் கையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ ஊரக வளர்ச்சித்துறையிடம் உள்ளது. நீர் நிலைகளோ, நீர்ப்பாசன அமைச்சரிடம் உள்ளது. காடு வளர்ப்போ தனி அமைச்சகத்திடம் உள்ளது. ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் இதற்கு விடிவு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

வேளாண் துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதில்லை. டெப்போக்களில் தேவையான விதை இருப்பு எப்போதும் இருப்பதில்லை. அது எப்படித்தான் தனியாரிடம் எப்பொதும் இருக்கும் ஒரு பொருள் இவர்களிடம் இருப்பதில்லை என்று புரியவில்லை. தெனாலிராமன் வளர்த்த பூனை பாலைக்கண்டு ஓடியதைப்போல் விவசாயிகள் டெப்போ விதைகளைக்கண்டு ஓடுகிறார்கள். துறையில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஒன்று ரிப்போர்ட் எழுதுகிறார்கள் (அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரிவதில்லை) அல்லது மீட்டிங் அட்டெண்ட் செய்கிறார்கள். யாருமில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றுகிறார்களோ தெரிய வில்லை. போகாத களப்பணிக்கு மீட்டிங்கும் ரிப்போர்ட்களும். அந்த அலுவலர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது தான் நம் சிஸ்டம். இதற்காக நான் மொத்த அலுவலர்களையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது அரசுகளின் கொள்கைக்குறைபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் களப்பணி ஆற்ற வேண்டிய அலுவலர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப் படுவதில்லை. ஒரு டூ வீலருக்குக் கூட வழியில்லாமல் விவசாயியிடம் லிஃப்ட் கேட்டுச் செல்லும் களப்பணியாளர்களையும் பார்க்க இயலும். இது போன்றவை களப்பணி ஆற்ற விரும்பும் அலுவலர்களையும் சோர்வடைய வைத்து விடுகிறது. இது மூலம் நாம் அறியும் உண்மை என்ன என்றால், அரசாங்கம் இவர்களுக்காக சம்பளம் என்பதை விரயம் செய்கிறது. எனவே களப்பனியாளர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தர வேண்டியது அரசின் கடமை மற்றுமன்றி அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகார அமைப்புகளும் தான். நிதிப்பற்றாக்குறையைத்தான் எப்போதும் இதற்கு காரணமாகக் கூறுவார்கள். இதனை ஈடு கட்டத்தான் ஆராய்ச்சிகான முதலீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூறுகிறேன். இதனால் ஆராய்ச்சி தேவையில்லை என்று கூற வரவில்லை. உபயோகமான ஆராய்ச்சி தேவை என்பது என் கருத்து. களத்தில் விவசாயிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே தேவைக்கேற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள இயலும்.

இதன் அடுத்த பதிவை பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்

--

Sunday, November 29, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -3

இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை மிகத்தெளிவாக குறிஞ்சிப்பாடியார் அவர்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப்போக்கு இப்படியே தொடர்ந்தால் நமது நிலை என்ன ஆவது? இதற்கு நாம் அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருக்கலாமா? மற்றவர்களுக்கு இதில் பங்கு இல்லையா?

இந்திய விவசாயத்தில் மாற்றம் ஏற்பட பலருடைய பங்களிப்பு தேவைப்படுகிறது.

முதலில் முக்கியமாக அரசாங்கத்தின் பங்கு உள்ளது. அரசாங்கத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவசாயிகளை விட ஆழமான அறிவு உள்ளது. அவர்களது முன்னுரிமை வேறு. அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

இரண்டாவதாக, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கு. அரசாங்கம் முக்கிய முடிவுகள் எடுக்க இந்நிறுவனத்தின் ஆலோசனைகளை பெரிதும் சார்ந்துள்ளது. இவர்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண் விரிவாக்கத்துக்கு அளிப்பதில்லை. உதாரணமாக, வீரிய ஒட்டு விதைகள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வீரிய ஒட்டு விதைகளில் எத்தனை ரகங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளன? சமீபத்தில் வெளியிடப்பட்ட ரகங்களின் பெர்ஃபார்மன்ஸ் என்ன? நாம் ஏன் இன்னும் 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ரகங்களை இன்னும் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்? இவ்வளவுக்குப்பின் புதிய ஆராய்ச்சியின் மூலம் நாம் சாதிக்கப்போவது என்ன? அதற்கான முதலீட்டினால் என்ன பயன் விளையப்போகிறது? மேலும் நவீன ரகங்கள் அதன் முழுத்திறமையை வெளிப்படுத்த தேவையான வளர்ச்சி சூழ்நிலைகளை உருவாக்கித்தர வேண்டாமா? ஆராய்ச்சி நிலையங்களுக்கும் அரசாங்க வேளாண் டிபார்ட்மண்ட்க்கும் உள்ள தொடர்பு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் இவர்களை யார் ஒருங்கிணைக்கப்போகிறார்கள்? விவசாயம் ஸ்டேட் சப்ஜெக்ட் அல்லது செண்ரல் சப்ஜெக்ட் என்று எவ்வளவு நாள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? விவசாய முன்னேற்றத்திற்கு ஸ்டேட் சப்ஜெக்டாக இருந்தால் என்ன செண்ரல் சப்ஜெக்டாக இருந்தால் என்ன? ஒரு தெளிவான கொள்கை வேண்டாமா? இதனை அரசுக்கு எடுத்துக்கூறி வழிகாட்ட ஐ.சி.ஏ.ஆர் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டாமா?

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் இடுகிறேன்?

இது பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

--

Saturday, November 28, 2009

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 2

சென்ற பதிவில் ஓர் கரைசலைத் தயார் செய்வது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இன்னொரு எளிய வழியைப் பற்றிப் பார்ப்போம்:

பொறி வைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். பல்வேறு வகைப் பொறிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:

விளக்குப் பொறி
இனக்கவர்ச்சிப்பொறி
ஒட்டும் பொறி


இவற்றில் விளக்குப் பொறிகள் வயல்களின் நடுவே 60 வாட்ஸ் பல்பை நேரெதிர் நிலையில் அமைக்கப்பட்ட புனல்களின் இடையில் கட்டி அதன் கீழே ஒரு தட்டில் சிறிது பூச்சிகொல்லி மருந்தை வைத்தால் விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு பொறிகளில் மாட்டிக்கொள்ளும். இவை குறைந்த செலவுதான் பிடிக்கும் என்றாலும் கிராமப்புறங்களில் தொடர் மின்சாரம் என்பது கேள்விக்குறியாக இருப்பதால் இதன் பலன் முழுமையாகக் கிடைப்படு இல்லை.

இனக்கவர்ச்சிபொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச்சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவு கொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொனண்டு தான் இனக்கவர்ச்சிபொறிகள் செயல்படுகின்றன. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிற்து. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. .

இனக்கவர்ச்சிபொறிகள் மூலம் எல்லா விதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது. அவையாவன:

கத்தரி தண்டு துளைப்பான்
வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான்
தக்காளி காய் துளைப்பான்
நெல் தண்டு துளைப்பான்

மேலே கூறியுள்ள பயிர்களில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு 5 - 6 பொறிகள் வைத்தால் போதுமானது.

ஒட்டும் பொறி:

சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகர ஷீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப் பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண்டை, பருத்திப் பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. 1 ஏக்கருக்கு 4 - 5 பொறிகள் வைத்தால் போதுமானது.

இருப்பினும் பூச்சித்தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.

பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது பூச்சி வரும் அறிகுறிகளை நமக்கு தெரிவித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

தற்போதைய அவசர உலகத்தில் மேற்கூறிய பொறிகள் உடனடியாகக் கிடைக்கின்றன. பெஸ்ட் கண்ரோல் இந்தியா என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து விற்று வருகிறது. உபயோகித்துப்பார்த்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

--

Friday, November 27, 2009

இந்திய விவசாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

சென்ற பதிவில் இந்திய விவசாயம் கடந்து வந்த பாதையை பற்றி பார்த்தோம் .இப்பதிவில் இந்திய விவசாயம் இனி வரும் காலங்களில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.


1.வேளாண் உற்பத்தியின் வளர்ச்சியில் மந்த நிலை


உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 1980 களில் 2.85 சதவீதத்திலிருந்து 1990 களில் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 2009 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் மேலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனால் இந்த ஆண்டு இந்தியா அதிக அளவில் (நிர்ணயிக்கபட்ட 20 மில்லியன் டன்னை விட) உணவு தானியங்கள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

2.வேளாண் தொழிலில் குறைந்து வரும் அரசின் முதலீடு


இந்திய அரசு வேளாண்மைக்கு செய்யும் முதலீடு சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் குறைந்து வர தொடங்கி உள்ளது.உதரணமாக முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நீர் பாசனத்துக்கு செலவு செய்ய பட்ட தொகை மொத்த பட்ஜெட்டில் 23% ல் இருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 5 சதவிதமாக குறைந்து உள்ளது.


3.குறைந்து வரும் தனி நபர் நில அளவு


உணவு தானிய உற்பத்தி செய்யபடும் 120 மில்லியன் ஹெக்டேர் என்ற நில அளவானது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரிக்க படாமல் அப்படியே உள்ளது. மேலும் இந்த நிலத்திலே நெல், கோதுமை பயிரிடபட்ட நிலங்கள் வெகுவாக மற்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்ய குறைந்து கொண்டு வருகிறது.
1960 களில் சராசரியாக தனி நபர் நில அளவானது 2.63 ஹெக்டேர் என்ற நிலையிலிருந்து மாறி 2006 - 2007 ல் 0.14 ஹெக்டேர் ஆக குறைந்துள்ளது. தற்சமயம் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சபடுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 7.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமானது பல்வேறு பட்ட தேவைகளுக்காக குறைந்து கொண்டு வருகிறது.


4. வளம் குன்றிய மண்


மண்ணின் பௌதீக தன்மையை அறியாமலும் அடிப்படை அறிவியல் முறை சாராமலும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இடபட்டு கொண்டிருக்கும் செயற்கை உரங்களால் மண் தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.


5.தொழில்நுட்பம் அறியாமை


உணவு தானிய பயிர்களுக்கு உற்பத்தியை பெருக்க போதிய தொழில் நுட்ப அறிவுடன் கூடிய அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளிடம் சென்றடைய வைப்பதிலேயே நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது. உதாரணமாக கோதுமையில் ஒரு ஹெக்டேர் மகசூலானது 4700 கிலோ என்ற அளவிலிருந்து தற்சமயம் 4000 கிலோவாக குறைந்து கொண்டு இருக்கிறது. நெல், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் இதே நிலை தான்.இதனால் தான் சமையல் எண்ணெயை மட்டும் கடந்த ஆண்டு சுமார் 30000 கோடி ரூபாய்க்கு அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.


6.தொலைநோக்கு பார்வை அற்ற திட்டங்கள்


தன்னிறைவு வேளாண்மைக்கு 2001ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தேக்க நிலையே இந்தியாவில் நிலவுகின்றது. 40% விவசாயிகள் தங்களுக்கு எதாவது மாற்று தொழில் கிடைத்தால் அடுத்த கணமே விவசாயத்தை விட்டு செல்ல தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு. எனவே இதற்கு தகுந்த நீண்ட கால திட்டங்கள் தான் நமக்கு தேவை. ஆகவே கவர்ச்சி திட்டங்களை ஒழித்து வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.


7.தரமான விதை


ஒரு ஆண்டிற்கு சராசரியாக எல்லா பயிர்களுக்கும் தேவையான தரமான விதை அளவு 48 மில்லியன் குவிண்டால் விதைகள். ஆனால் நமக்கு கிடைப்பதோ 10.84 மில்லியன் குவிண்டால் விதைகளே. பெரும்பாலான விவசாயிகள் தரமான விதை கிடைக்காமலே திண்டாடுகின்றனர் என்பது வேதனையான செய்தி.


8. வேளாண் கடன்


47% நடுத்தர விவசாயிகளும் 70% சிறு விவசாயிகளும் நம் நாட்டிலே வங்கிகள் மற்றும் ஏனைய வேளாண் கடன் தரும் நிறுவனக்களிடம் இருந்து கடன் பெற இயலாத நிலையிலேயே உள்ளனர். கடன் தரும் நிறுவனக்களிடையே உள்ள வேறுபாடுள்ள வட்டி விகிதமும் மக்களை குழப்புகிறது.இந்தியாவிலேயே அதிக கடன் தேவைபடும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 9403 ரூபாய் கடன் தேவை படுகிறது. ஆனால் மத்திய பிரதேசத்திற்கு 667 ரூபாய் தான் தேவை படுகிரது


9. ஆள் பற்றாக்குறை


புதிய தலைமுறையினர் விவசாயம் செய்வதை கௌரவ குறைச்சலாக கருதுகின்றனர். மேலும் மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களினாலும், இலவசங்களாலும் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.அதே சமயம் இதை ஈடு கட்ட இயந்திரமாக்களும் சிரமமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகளிடம் உள்ளது மிக குறைந்த தனி நபர் நில அளவு.
அது மட்டுமன்றி விவசாய படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முன்பு போல் மிகவும் அதிக திறமையான மாணவர்கள் வருவதும் குறைந்து கொண்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அதிக சம்பளத்துடன் எளிமையாக வேலை கிடைப்பதால் மாணவர்களிடையே விவசாய பட்ட படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.


10.மானாவரி நிலம்


நாம் பயிர் செய்யும் 143 மில்லியன் ஹெக்டேரில் 60% க்கும் மேல் மானாவரி நிலமாகும்.நிலையற்ற வான்மழையும் தொழில் நுட்ப அறிவு பற்றாக்குறையும் இயற்கையாகவே மானாவாரி நிலங்களின் குறைந்த உற்பத்தி திறனும் விவசாயிகளை மேலும் கடனாளிகளாகவே ஆக்குகின்றன. இந்த மானாவாரி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை ஏற்க தயாராக இருப்பினும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும், சூழ்நிலையும் பெரும் தடையாகவே இருக்கின்றன.


மக்கள் தொகையும் உணவு உற்பத்தியும்


ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி அமைப்பின் அறிக்கை படி எதிர்வரும் 2050 இல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். தற்போதைய மக்கள் தொகை பெருக்க நிலை நீடித்தால் 2050 ல் இந்திய மக்கள் தொகை 165 கோடியாகவும் சீன மக்கள் தொகை 141 கோடியாகவும் இருக்கும். எனவே மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.1950களை ஒப்பிடும் போது இடு பொருட்களின் விலை 50 - 100 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வேளாண் விலை பொருட்களின் விலையோ 10 மடங்கு தான் அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி திறனும் குறைந்து, விவசாயிகளும் வேறு வேலை பார்க்க போய் கொண்டு உள்ளனர்.இந்த நிலை நீடித்தால் நாம் மீண்டும் அமெரிக்கா மற்ரும் மேலை நாடுகளிடம் உணவிற்காக பிச்சை எடுக்கும் அவல நிலை ஏற்படும். தன் மக்களுக்கு தேவையான உணவை எந்த நாடு சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடிகின்றதோ அந்த நாடே வல்லரசாகும்.
--

Sunday, November 22, 2009

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1

தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.

பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேன்டும்.

பின்னர் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் நீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள் / செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

இதனைப்பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இது எங்கள் அனுபவம்.

--

Friday, November 13, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -இது தத்துவம்

மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.


நம்பிக்கை தந்த 1950கள்

1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.


நீர் தேக்கங்களும் அணைகட்டுகளும் தான் நவீன இந்தியாவின் கோவில் என்று அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் முழங்கினார்.அதனால் பல லட்சம் விவசாய நிலங்களின் தாகம் தணிந்ததோடு அல்லாமல் வீடுகளுக்கும் மின்சார உற்பத்தியும் செய்யபட்டது.

நிலையற்ற 1960கள்

1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டது. மிகபெரிய பொருள் இழப்பு ஏற்பட்டது.இதனால் நம் நாட்டில் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1965 - 66ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு மிக கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. இந்த கால கட்டத்திலேயே அரசாங்கமே மக்களை ஒரு நாளுக்கு ஒரு வேளை உண்ணாமல் இருக்க சொன்னது. அப்போதயை பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதற்கு முன்னுதாரனமாக கூட இருந்தார். ஆனால் நிஜத்தில் மக்கள் நல்ல உணவு வாரத்திற்கு ஒரு முறை தான் உண்ட நிலை இருந்தது. பல்லாயிரம் பேர் உணவின்றி பசி கொடுமையால் மாண்டனர். பிறகு 1965 ல் பாக்கிஸ்தானுடன் யுத்தம் ஏற்பட்டு வட இந்தியாவில் பதற்றம் நிலவியது.இது போன்ற அடுக்கடுக்கான இன்னல்களினால் இந்தியா 1966 - 67 இல் 6.4 மில்லியன் டண் கோதுமையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இந்த நேரத்திலேயே அமெரிக்க பத்திரிக்கைகள் இந்தியாவை பிச்சைகார நாடாக கேலி சித்திரம் வரைந்து உலக அரங்கிலேயே இந்தியாவையும் அதன் இறையான்மையையும் அசிங்கபடுத்தியது.

பிறகு 1960களின் நடுவிலேயே மெக்சிகோ நாட்டை சார்ந்தவரும் உலகில் ஈடு இணையற்ற பயிர் பெருக்கவியல் விஞ்சானியுமான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரின் உதவியோடு இந்தியாவிற்கு குறைந்த வயதுடைய குட்டை ரக கோதுமை அறிமுகம் செய்யபட்டது. இது அதிக மகசூல் தரவல்லதாகவும் நோய்,பூச்சி மற்றும் வறட்சியை தாங்கி வளர கூடியதாகவும் இருந்ததால் உணவு தானிய உற்பத்தியில் மிக பெரிய புரட்சியே ஏற்பட்டது. இதுதான் பசுமை புரட்சியின் ஆரம்ப காலம் எனலாம்.

பசுமை புரட்சியின் பரிணாம வளர்ச்சி

இடைக்கால 1960 களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வீரிய ஒட்டு கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு அனைத்து கோதுமை வளரும் மகாணங்களிலும் செம்மையாக செயல்படுத்த பட்டது.
1971 ல் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 26 மில்லியன் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்திய மக்களுக்கு பசியின் மீதிருந்த பயம் மறைய தொடங்கி இருந்த காலம் அது. இந்த தருணத்தில் தான் வங்காள தேசம் உருவானது. அதனால் வேளாண் உற்பத்திக்கு அரசால் அதிக பணம் ஒதுக்கி செலவிடமுடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய மக்களுக்கு எல்லை புரத்தை பற்றிய கவலையோடு உணவுத்தேவை பற்றிய கவலையும் சேர்ந்தே இருந்தது என்று சொல்லலாம்.

அணைகட்டு பாசன வாய்க்கால் நீர் மேலாண்மை அறிமுகம்

பெரிய அணைகளில் நீரை தேக்கி வைத்து அதிலிருந்து பாசன வாய்க்கால்களை வெட்டி சுழற்சி முறையில் நீரை பிரித்து கொடுக்கும் முறையானது 1970 களில் அறிமுகபடுத்தபட்டு இந்திய விவசாய பாசன முறையிலேயே ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் முறையும் அறிமுகபடுத்தபட்டு பல லட்சம் புதிய பயிர் செய்யாத நிலங்களை விவசாயம் செய்ய வைத்த கால கட்டம் அது.


அகில இந்திய நெல் மகசூல்

1980 களில் நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்டேரின் சராசரி உற்பத்தி வெகுவாக பெருகியது. அதாவது 1950 களில் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ நேல் என்ற அளவிலிருந்து 1980 க்ளில் 1.25 டன்னாக உயர்ந்து தற்போது 2 டன்னுக்கும் மேல் மேம்படுத்த பட்டுள்ளது.

கரும்பு


1967 - 68ல் 95.50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2006 - 07 ல் 270 மில்லியன் டன்னாக ஆழ்துறை கிணற்று பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் உயர்ந்தது.


எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தி


1980 களில் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் புரட்சி ஏற்பட்டு உற்பத்தி திறன் வெகுவாக உயர்த்தபட்டது. 1990 களில் பருத்தி மகசூல் அதிகரிக்கபட்டது. பருத்தியில் 1967 - 68 ல் 5.78 மில்லியன் பேல்( 1 பேல் என்பது 170 கிலோ) என்ற அளவில் இருந்து 2005 - 2006 ல் 18.50 மில்லியன் பேல்களாக அதிகரிக்கபட்டது.

முட்டை உற்பத்தி

1968 - 69 களில் 5.3 மில்லியன் முட்டைகளாக இருந்தது 2006 - 07 ல் 47.3 மில்லியன் முட்டைகளாக உயர்ந்தது.


மீன் உற்பத்தி

1965 - 66ல் 1.33 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2006 - 07 ல் 6.30 மில்லியன் டன்களாக 5 மடங்கு உயர்ந்தது.


1980களில் ஏற்பட்ட மாற்று பயிர் திட்டம்

இந்த காலகட்டத்திலே நெல் வயல்கள் சில மீன் குட்டைகளாக மாறின. மக்காசோள உற்பத்தி அதிகரிப்பால் நிறைய கொழி பண்ணைகள் உருவாயின. தென் இந்திய கடற்கரை மாநிலங்களில் தென்னை அதிகம் சாகுபடி செய்யபட்டது.சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் ஒரம் கட்டபட்டன. ஏறத்தாழ 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த உணவு தானிய பயிர்கள் அடியோடு பணபயிர் சாகுபடிக்காக மாற்றபட்டன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும் சற்று மேம்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பெருகியது.

எழுச்சி மிகு 1990கள்

இந்த காலகட்டம் இந்திய விவசாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த 1990கள் உலக மயமாக்கல் காலம் எனலாம் . சோசலிஸ்ட் முறையில் நடைபெற்ற இந்திய விவசாயம் கோட்டா முறைக்கு மாற்ற பட்டது. காட் ஒப்பந்தம் காட்டிய வழியில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கள் கொள்கையை ஏற்று கொண்டது. நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த நெல், கோதுமை,மலர்,காய் கனிகள் போன்றவற்றை வெளி நாடுகளுக்கு அதிக அலவில் ஏற்றுமதி செய்தது. இதனால் உலக அரங்கிலே இந்தியாவின் மதிப்பு 1960 களில் இருந்த "கப்பலிலிருந்து இந்தியனின் வயிற்றுக்கு" என்ற அவல நிலை மாறி "உணவு ஏற்றுமதி செய்யும் நாடு" என்ற கௌரவத்தை அடைந்த கால கட்டம்.

21 ம் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தி

தற்போதைய உற்பத்தியை விட 2020 ல் இந்திய வேளாண் உற்பத்தி இரட்டிப்பு அடைய வேண்டும் என்று இந்திய திட்ட வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.உணவு தானியம்,பயிறுவகைகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை சார்ந்த பயிர்களான கரும்பு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் நாம் அதிகபடியான மகசூலை எடுத்து விட்டோம். மேலும் உணவு தானிய பயிர்களுக்கான பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் 2003க்கு பிறகு ஒரு ஹெக்டேர் சராசரி மகசூலில் உணவு தானியங்களை பொருத்த வரையில் நம்முடைய இலக்கை அடைய முடியாத இக்கட்டான சூழலில் தான் உள்ளோம். ஆனால் காய்கறிகள் மற்ரும் பழங்கள், மீன் உற்பத்தி பால் உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்து விட்டோம்.

2020 ல் எதிர்பார்க்கும் நிர்ணயிக்க பட்ட உணவு தானிய உற்பத்தி

வாழிங்டனில் உள்ள பன்னாட்டு உணவு கோட்பாடு ஆராய்ச்சி கழகம் இந்தியாவை பொருத்த வரை அதன் உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இனிவரும் 20 ஆண்டுகள் உணவு உற்பத்திக்கு மிக போரட்டமான கால கட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

எதிர் வரும் 2020 ல் இந்திய மக்கள் தொகை உத்தேசமாக 145 கோடி. உணவு தானிய தேவை பாடு 307 மில்லியன் டன். எதிர் பார்க்கும் உற்பத்தி 240 - 250 மில்லியன் டன். நம்மிடம் உள்ள அவசர கால தேவைக்காக சேமிக்க பட்டுள்ள உணவு தானியங்களின் அளவு 60 மில்லியன் டன்.(இதில் பாதிக்கும் மேல் சரியான அறிவியல் முறைப்படி சேமிப்பு செய்யாததால் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளதாக முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களே வேதனையோடு சொன்ன விஷயம்). எதிர்பார்க்கும் உணவு தானிய இறக்குமதி அளவு 20 மில்லியன் டன்(மீண்டும் 1960 ல் ஏற்பட்ட நிலை).

அது மட்டுமின்றி புவி வெப்பமாதல் நிகழ்வால் பருவம் தப்பும் பருவ மழைகளும்,புயல் மற்றும் குறுகிய கால பேய் மழைகளும் இப்பிரச்சனையின் பரிமாணத்தை அதிகரிக்கின்றன. விரிவாகும் ஏழை பணக்கார விரிசலால் பற்றாக்குறை காலங்களில் உற்பத்தி செய்ய பட்ட உணவும் எந்த அளவுக்கு ஏழை மக்களால் வாங்கும் திறன் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திலே வேளாண் வளர்ச்சி விகிதம்


8 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 4.7%

9 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 2.1%

10 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 1.8%


முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் எட்டபட்ட இரட்டை இலக்க வளர்ச்சி படி படியாக குறைந்து இந்த மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ள பட்டுள்ளது.பன்னாட்டு உணவு கோட்பாட்டு ஆராய்ச்சி கழகம் 2006 ம் ஆண்டு தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் 30% க்கும் மேலானவர்கள் இன்றும் ஒரு வேளை உணவோடு தான் அன்றாடம் உறங்க செல்கின்றனர். ஆப்ரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத வேதனையான உண்மையாகும்.
இந்திய விவசாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் காண்போம்



--