Sunday, June 28, 2009

பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)

விளை நிலத்தை பசுமைத் தங்கத்துடன் ஒப்பிடலாம்.உயர் விளைச்சலுக்குத் தரமான விளைமன் மற்றும் நில நிர்வாக அமைப்புகள் அடிப்படைத் தேவையாகும். பொதுவாக விவசாயிகள் தங்களது விளைமண் நிர்வாகத்தில் தகுந்த கவனம் செலுத்துவதில்லை. ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும், நடைமுறைப் படுத்தவும் தகுந்த உழவியல் உபகணங்களை கொண்டு நிலத்தை சீர் படுத்த தேவையான உத்திகளையும், அதற்கான உபகரணங்களைப் பற்றியும் அறியலாம்.

1. நில நிர்வாகம்
2. உழவு

“அகல உழுதலை விட ஆழ உழதல் சிறந்தது” – என்பது மூத்தோர் வாக்கு, ஆனால் நடைமுறையில் விவசாயிகள் ½ அடி ஆழத்திற்கு மேல் ஆழமாக உழுவதில்லை. ஆழ உழுவதற்கான உழவியல் கருவிகளைப் பற்றி அவாகள் அறியாததே இதற்கு காரணம்.

½ அடிக்கும் மேல் ஆழமாக உழுவதன் அவசியம் என்ன?

நாம் தொடர்ச்சியாக வயலை கலப்பை கொண்டு ½ அடி வரை உழுவதால் ½ அடிக்கும் கீழே உள்ள விளை நிலத்தின் பகுதி பாறை போன்ற கடினத் தன்மை அடைகிறது. இதனால் வேர் மற்றும் மழை நீர் ½ அடி ஆழழத்தைத் தாண்டி மண்ணில் ஊடுருவ இயலவில்லை.

அடி விளை மண் (sub surface layer) கடினத்தன்மை அடைவதால் ஏற்படும் விளைவுகள்:

அடி விளை மண் கடினத்தன்மை அடைவதால்…
• பயிர்களின் வேர்கள் ½ அடிக்கும் கீழே ஊடுருவ முடிவதில்லை
• மழை நீர் ½ அடி ஆழத்திற்கு மேல் விளை மண்ணால் உறிஞ்ச இயலாமல் போகிறது.
• அதிகப் படியான மழை நீர் வழிந்தோடி மண் அரிப்பை உருவாக்குகிறது
• வளமான மேல் தட்டு விளைமண் அடித்துச்செல்லப்படுகிறது
• கீழ்த்தட்டில் உள்ள உப்புகள் வடிக்கப் படுவதில்லை இதனால் மண்ணின் தன்மை கெட்டுப் போகிறது.
• வேர்களுக்குத் தேவையான நிலைத்த தன்மை கிடைப்பதில்லை

ஆடித்தட்டு விளைமண்ணின் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழுவதன் மூலம் கடினத்தன்மையைப் போக்கலாம்.

இதற்கு எந்த பண்ணைக் கருவியை உபயோகப் படுத்தலாம்?

உளிக்கலப்பை என்பது விளைமண்ணின் அடித்தட்டுப் கடினத் தன்மையைப் போக்க ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு நவீன பண்ணைக் கருவியாகும்.



படத்தை சுட்டி பெரிதாக பார்க்கவும்


உளிக்கலப்பை கொண்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

• விளைமண் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழப்பட்டு கடினத்தன்மை நீக்கப்படுகிறது.
• இதன் விளைவாக விளை நிலங்களிலேயே மழை நீர் சேகரிக்க படுகிறது
• வேர்கள் விளை மண்ணில் ஆழமாக ஊடருவதால் அடி நீரைப் பயன்படுத்த முடிகிறது
• மண் உப்பத் தன்மை அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
• நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.
• மண் அரிப்பு தடுக்கப்படுகிறது

பொதுவான சந்தேகங்களும் அதன் விளக்கங்களும்:

1. உளிக்கலப்பையை ஏர்மாடு கட்டி உழமுடியுமா?
இயலாது ஓர் உளிக்கலப்பை 1½ அடி ஆழம் உழுவதற்கு 30–35 குதிரைத் திறன் (HP) தேவை. எனவே 35 HP டிராக்டர் கொண்டே இதனை பயன்படுத்த இயலும்.

2. உளிக்கலப்பை பயன்படுத்துவதால் 1½ அடி ஆழ விளைமண் புரட்டப்படுமா?
இல்லவே இல்லை, இக்கலப்பை மண்ணை கீறிக் கொண்டு மட்டுமே உழுகிறது. கடினத்தன்மை தகர்க்கப்படுகிறது, மண் புரட்டப்படுவதில்லை

3. வருடத்தில் எத்தனை முறை இக்கலப்பை கொண்டு உழவேண்டும்?
வருடத்தில் குறைந்தது 1 முறையாவது உழுதல் நல்லது

4. எப்போது உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்?
கோடை மழைக்குப் பிறகு உழுதல் நல்லது. ஏனெனில் கோடை காலத்தைத் தொடர்ந்து வரும் மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை விளை நிலத்தில் சேமிக்க இயலும


--

Monday, June 22, 2009

பயிரின் உணவு - 3 மண் பரிசோதனையின் முக்கியத்துவம்

சென்ற பகுதியில் மண் பரிசோதனை செய்ய மண் மாதிரி எடுப்பது எப்படி என்று பார்த்தோம்..

இப்பதிவில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பற்றியும் மண் பரிசோதனையில் நாம் ஆராயும் காரணிகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். பயிர் உற்பத்தியின் செலவில் 40% செலவு பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்க செலவாகிறது. எனவே தேவையான சத்துக்களை மட்டும் தேவையான அளவு, தேவையான நேரத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது ஆகும்.

எந்த ஒரு சத்தும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் பயிர் பற்றாக்குறை அல்லது மிதமிஞ்சிய நச்சுதன்மைக்கான வெளியீட்டு குறியை காட்டும்.அது மட்டுமின்றி பயிர் வெளியிடும் குறியானது கண்டு பிடிக்க மிகவும் கடுமையானதாக இருக்கும்.இந்த பயிரின் குறியானது பூச்சி அல்லது நோய் தாக்குதலால் ஏற்படும் குறி போலவே இருக்கும்.பெரும்பாலான சத்துக்களின் குறைவு ஒரே குறியாக பயிரின் பச்சை தன்மை வெளிரியிருப்பதாகவே காட்டும். எனவே நாம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது.இல்லாவிட்டால் நம்முடைய மண்ணின் சத்தை பற்றிய கணிப்பு தவறாக போய் தேவையற்ற உரங்களை தேவையற்ற அளவு அளித்து பணம் வீணாவதுடன், பயிரின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது

எனவே மண்ணில் உள்ள சத்துக்களை ஒட்டு மொத்தமாக பரிசோதனை செய்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சில நேரங்களில் மண்ணின் வளம் நன்றாக இருந்தும் நல்ல விளைச்சளை தர கூடியதாக இல்லை. இதற்கு காரணம் மண்ணின் சுற்று சூழலில் உள்ள அனுகூலமற்ற நிலையாக இருக்கும்.
மண் பரிசோதனை மூலம் சத்துக்களின் அளவை அறிவதோடு மண்ணின் வளத்தை நிர்வகிக்கும் காரணிகளை பற்றியும் அறிந்து கொள்ளளாம்.

மண் பரிசோதனை மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய காரணிகள் வருமாறு

மண் சத்துக்கள்

தழை சத்து,மணி சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், துத்தநாகம், மாங்கனீசு,இரும்பு,காப்பர்,போரான் மற்றும் மாலிப்டீனம்.

பிற காரணிகள்

pH, Electrical conductivity, Organic Matter, Cation Exchange Capacity, % Base Saturation



CEC(Cation Exchange Capacity)
CEC மூலம் மண்ணின் கெட்டிதன்மையை பற்றிய செய்தியை அறிந்து கொள்ளளாம்.CEC குறைவாக இருந்தால் மண் மணற்பாங்காக இருக்கிறது என்று அர்த்தம்.CEC நடுத்தரமாக இருந்தால் மண் மிதத்தன்மையாக இருக்கிறது என்றும் CEC அதிகம் என்றால் மண்ணில் களி தன்மை அதிகம் என்றும் அர்த்தம்.

PH
PH மூலம் மண்ணில் உள்ள அமில தன்மை மற்றும் உவர் தன்மையை கண்டு பிடிக்கலாம்.PH இன் அளவு 6.5க்கும் குறைவாக இருந்தால் அது அமில நிலமாகவும் 7.5 க்கும் மேல் இருந்தால் அது உவர் நிலமாகவும் இருக்கும். PHஇன் அளவு 6.5 - 7.5 ஆக இருந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்லாம். இந்த PHல் தான் மண்ணில் உள்ள சத்துக்கள் எல்லாம் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும்.

முந்தய பதிவுகள்

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?



--

Thursday, June 18, 2009

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?

சென்ற பதிவில் பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றியும் அவை பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினையும் பார்த்தோம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் நம் மண்ணில் உள்ளதா என்று அறிவது எப்படி? அதற்கு மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்கள் அளவினை கண்டு பிடித்து அது பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முதலில் மண் மாதிரியை நம் வயலில் இருந்து எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் . மண் மாதிரி எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.கீழே இருக்கும் படத்தை அழுத்தி பெரிதாக்கி தெளிவாக படிக்களாம்.

முந்தய பதிவில் திரு யூர்கன் க்ருகியர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே உள்ள படத்தில் விளக்க பட்டுள்ளது.




நன்றி - NAF


மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

முதல் பகுதி - பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

--

Sunday, June 14, 2009

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

மண் வள மேம்பாடு என்பது விவசாயத்தில் மிக முக்கிய முதலீடு என்பது மறுக்க முடியாது.ஏனென்றால் விவசாயத்திற்கு ஆகும் செலவில் 40 சதவிதம், வேளாண் இடுபொருட்களுக்கு ஆகும் செலவாக உள்ளது.

பொதுவாக நாம் உரங்களை இடுவதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை உண்மையிலேயே தேவையான அளவு மட்டும் அளிப்பதில்லை. இதன் விளைவாக இடு பொருட்களின் செலவு அதிகரிப்பதுடன், அந்த செலவுக்கு ஏற்றால் போல் லாபம் கிடைப்பதில்லை. நாம் மேற் சொன்ன மூன்று சத்துக்களை பற்றி மட்டும் நினைக்கிறோம். ஆனால் பயிருக்கு தேவையான முக்கிய சத்துக்கள் 12 உள்ளன.

இப்பதிவில் அவை என்னென்ன சத்துக்கள் என்றும் அவை பயிருக்கு ஆற்றும் உதவி பற்றியும் காண்போம்.

முதன்மை சத்துக்கள்

தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிது முக்கியமான சத்துக்கள்

கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Micro Nutrient)

இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),போரான்(B), காப்பர்(Cu).

தற்போது இந்த சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் முக்கிய பங்கினை பார்ப்போம்

சத்துக்கள்ஆற்றும் பணி
முதன்மை சத்துக்கள்
தழை சத்து
இலை,தழைகளின் வளர்ச்சிக்கு
மணி சத்து வேரின் வளர்ச்சி
சாம்பல் சத்து விளை பொருட்களின் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் இலையில் உற்பத்தி செய்யபடும் சத்தை பயிர்ன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது
சிறிது முக்கியமான சத்துக்கள்
கால்சியம்பயிரின் செற்சுவர் மற்றும் செல்லை வலுவாக்குவது
மெக்னீசியம்பச்சயத்தில் உள்ள முக்கிய சத்து
சல்பர்பயிர் மற்றும் விளை பொருளின் நிறம் மற்றும் வாசனையை நிர்ணயிப்பது(உதாரணம்- பூண்டு)
குறைவான அளவு தேவைபடுபவை
போரான் பூவிலிருந்து காய் உருவாக்கத்திற்கு உதவுகிறது
துத்தநாகம்,
மாங்கனீசு,
இரும்பு,காப்பர்,
மாலிப்டீனம்
பல்வேறு என்சைம் மற்றும் வினை வேக மாற்றியாக செயல் பட்டு உயிர் வேதியல் வினைகளில் ஈடுபடுதல்


ஒவ்வொரு தனிபட்ட சத்துக்களும் ஒரு சில முக்கிய சேவைகளில் ஈடுபட்டாலும், அனைத்து சத்துக்களின் ஒன்றினைந்த சேவை தான் பயிரின் ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நிர்ணயிக்கிறது. அனைத்து சத்துக்களும் தேவையான அளவு இருந்தாலும் ஒரு சத்தின் அளவு மண்ணில் குறைந்து இருந்தாலும் அது பயிரின் உற்பத்தியை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே தான் அனைத்து வகை சத்துக்களை பற்றியும், அவை பயிருக்கு ஆற்றும் சேவை பற்றியும், மண்ணிலிருந்து சத்துக்கள் எவ்வாறு பயிருக்கு கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் அறிவது மிகவும் அவசியம்.

இந்த சத்துக்கள் எந்த அளவு நம்முடைய வயலில் உள்ளது. எவ்வாறு அறிந்து கொள்வது. அதற்கு தான் நாம் மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

--

Sunday, June 7, 2009

Pick Your Own Fruits



அமெரிக்காவின் விவசாயம் மிக பெரிய கார்பொரேட்டுகளின் கைக்கு சென்று பல காலமாகிறது. ஆனாலும் இன்னும் சில சிறு விவசாயிகளும் அங்கங்கு இருக்கிறார்கள். அமெரிக்காவில் பொது மக்கள் காய்கறி மற்றும் பழம் வாங்க செலவிடும் பணத்தில் மிகவும் சிறிய அளவே விவசாயிகள் கைக்கு போகிறது. மிக பெரிய கடை குழுமங்கள் மற்றும் மிக பெரிய விவசாய பண்ணைகளுடனான உறவும் வலுவானது.பெரிய பண்ணைகளிடம் குறைந்த விளையில் கிடைக்காத காய்கறி மற்றும் பழவகைகளை முடிந்த அளவு வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வர்.இப்படி பட்ட சூழ்நிலையில் பழம் மற்றும் காய்கறி பயிரிடும் சிறு விவசாயிகள் சந்தையில் நிலைத்து இருப்பதே கடினமான செயல். அவர்கள் Farmers Market என்ற பெயரில் நகரங்களில் விடுமுறை நாட்களில்(அதாங்க நம்ம ஊர் உழவர் சந்தை போல்) நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் விற்பனை செய்வர்.




அது தவிர ”Pick Your own fruits ” என்ற பெயரில் பழங்கள் நன்கு கனிந்திருக்கும் காலங்களில் பொது மக்களை தங்கள் பழ தோட்டத்திற்குள் அனுமதிப்பர். உள்ளே வரும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வேண்டிய அளவு தாங்களே இலவசமாக பறித்து உண்ணலாம். ஆனால் வீட்டுக்கு வாங்கி செல்ல வேண்டியவற்றை எடை போட்டு வாங்கி செல்ல வேண்டும். அந்த பழங்களின் விலை மார்க்கெட்டில் இருக்கும் விலைக்கோ அல்லது அதைவிட சிறிது அதிகமாகவோஇருக்கும். ஆனால் பழங்களின் சுவையோ மிகவும் நன்றாக இருக்கும்.


இதன் மூலம் பொது மக்களுக்கு ஒரு நாள் பொழுது மிகவும் இனிமையாக செல்கிறது. நகரத்தில் இருக்கும் மக்களுக்கு நல்ல மாறுபாடாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலான பழ மரங்களை மக்கள் பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களும் இலவசமாக தங்களுக்கு தேவையான் பழங்களை இலவசமாக உண்ணலாம்..



விவசாயிகளுக்கோ பழ வகைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதே நேரம் பழங்களை பறிப்பது மற்றும் போகுவரத்து செலவு போன்றவை குறைகிறது.

இந்தியாவில் கூட பழபண்ணைகளில் இது போன்ற செயல்முறைகளை அறிமுகபடுத்தி , சாப்ட்வேர் கம்பெனிகளில் அவுட்டிங் செல்லும் குழுக்களை அங்கு இழுக்களாம். Fruit Picking மட்டுமின்றி அதனுடன் கிராமிய விளையாட்டு,மோட்டார் குளியல் மற்றும் கிராமிய இசை போன்றவற்றையும் சேர்த்து அறிமுக படுத்தாலாம். ஒவ்வொரு குழுவுக்கும் மொத்தமாக பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும்.நகரத்தில் வளரும் இளைஞர்களுக்கும் கிரமிய கலாசாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

--