Wednesday, May 13, 2009

குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்


பயிரின் உற்பத்தி பெருக்கத்திற்கு உழவின் பங்கு இன்றியமையாதது.பயிரின் வேரை மண்ணில் நிலைத்து நிற்க வைப்பது, மண்ணின் தன்மையை நன்கு உயர்த்தி, மண் துகள்களுக்கு இடையே உள்ள இடை வெளியை அதிகரித்து நீர் பிடிப்பு தன்மையை அதிகரிப்பது போன்ற செயல்கள் நன்கு நடைபெற உழவு உதவுகிறது.மேலும் தொழு உரம் மற்றும் உரத்தை மண்ணில் நன்கு கலக்கவும்,களை செடிகளை அழிக்கவும்(முக்கியமாக நீண்ட வேரை கொண்ட களை செடிகளை) உழவு உதவுகிறது.

வேர் வளர்ச்சியின் தன்மை பயிருக்கு பயிர் வேறுபடுகிறது. சில பயிரின் வேர் ஆழமாகவும், சில பயிரின் வேர் மேம்போக்காக வளரும் தன்மை உடையது.பயிரின் தன்மைக்கேற்ப உழவின் முறையை மாற்றி அமைப்பதன் மூலம் பயிரின் விளைச்சளை 30 - 40 சதம் வரை அதிகரிக்களாம். மேம்போக்காக வளரும் நெல் பயிர் போன்ற பயிருக்கு ஆழமான உழவு தேவை படுவது இல்லை.ஆனால் உளுந்து பயிரு போன்ற ஆழ ஊடுருவி வளரும் பயிர்கள் ஆழமான உழவை எதிர்பார்க்கிறது.
இது போல் மேம்போக்காக வேர் விட்டு வளரும் நெற் பயிருக்கு உழவின் தேவையை குறைப்பதன் மூலம் உழவிற்கு ஆகும் செலவில் 40 சதம் குறைக்கலாம்.

சமீப காலமாக விவசாயிகளிடையே மிகவும் வேகமாக பரவி வரும் நியதி குறைந்த உழவு (Conservative Tillage)அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவை குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய முந்தய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு(30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம்.சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே பயிரை வளர்க்க கூட முடியும்!

குறைந்த உழவு செய்யும் முறை:

முந்தய பயிரை அறுவடை செய்த பின் ஒன்று அல்லது இரண்டு முறை டிராக்டர் வைத்து உழ வேண்டும்.அதற்கு பின் ஐந்து நாள் இடைவெளியில் உடனடியாக இரு முறை வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இது களை செடிகளை முளைக்க தூண்டும். களை செடிகள் முளைத்தவுடன்(2 - 3 இலை விட்டபின்) கிளைபோசேட்டை 1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லிலிட்டர் என கரைத்து நாப்சாக் ஸ்பிரேயரில் பிளட் ஜெட்(flood jet) நாசில் கொண்டு களை செடிகளுக்கு மேல் நன்றாக விரவி தெளிக்க வேண்டும்.கிளைபோசாட் தெளித்த 48 மணி நேரத்திற்கு பிறகு வயலில் 5 நாட்களுக்கு நீர் தேக்கி வைக்க வேண்டும். இது மண்னை மென்மை படுத்தும். வயலை சம படுத்திய பின் நெல் நாற்றை வயலில் நடலாம். களையை முளைக்கும் முன் கட்டு படுத்தும் களை கொல்லியை நடவு நட்ட 3 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.களை கொல்லியை தெளிக்கும் போது மண் முழுவதும் மூடி இருக்கும் படி மெல்லிய இழை அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். பொதுவாக விவசாயிகள் 4 முதல் 5 முறை நடவு நடும் முன் வயலை நன்றாக உழுவார்கள்.ஒரு உழுதலுக்கு 750 முதல் 900 ரூபய் வரை ஆகும். குறைந்த அளவிலான உழவு மூலம் இதை குறைக்கலாம்.

இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்:

1.செடியின் வேருக்கு நன்கு பிடிப்பு கிடைக்கிறது.

2.நடவு நட்ட வயலில் உயிர் பிழைக்கும் நாற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

3.நிலத்தில் போடும் உரம் பயிருக்கு அதிக அளவு கிடைக்கிறது. ஆழ உழுதால் உரம் மண்ணில் மிக அதிக அளவு ஆழ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உரம் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை உழவால் பயிரின் வேர் பகுதியிலேயே உரம் தங்கி விடும்.

4.உழவிற்கு செலவிடும் பணம் கணிசமாக(1750 - 2750/ஏக்கர்) சேமிக்க படுகிறது.

5.மண்னின் அங்கக சத்து(Organic carbon) அதிக அளவு காக்க படுகிறது.

6.விளைச்சல் 350- 425 கிலோ/ஏக்கர் அதிகரிக்கிறது.

7.பூட்டாகுளோர் மற்றும் கிளைபோசாட்டு போன்ற களை கொல்லிகள் மண்ணில் தங்குவது இல்லை என்று ஆராய்ச்சி மூலம் நிருபிக்க பட்டுள்ளது.

இம்முறையை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்.

மோட்டார் வைத்து தண்ணிர் பாய்க்கும் விவசாயிகளுக்கு இது ஏற்ற முறை.ஏனென்றால் அவர்கள் தேவையான போது தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம். தமிழ் நாட்டில் ஆற்று நீர் பாய்ச்சி விவசாயம் செய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். PWD தண்ணீரை பயிரிடும் காலத்தில் ஒரே நேரத்தில் திறந்து விடுவதால் விவசாயிகள் அதை பொருத்தே உடனடியாக நிலத்தை உழ வேண்டி உள்ளது.

இது போல் உழும் நிலங்களில் பெண்கள் நாற்று நடும் போது சிறிது கடினமாக இருக்க வாய்ப்புண்டு.
--

Wednesday, May 6, 2009

கொரு கலப்பை விதைப்பு

ராமு: அண்ணே! உங்க கிட்ட ரொம்ப நாளாவே ஒரு விசயம் கேக்கனும்னு இருந்தேன்.

சோமு: என்ன விசயம்பா அது !

ராமு: அண்ணே! என்னோட வயல்ல இதுவரைக்கும் நான் கைவெதைப்பு தான் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனா என்னோட பங்காளி அதாண்ணே நம்ம சுப்பிரமணி, கலப்பை வச்சு விதைக்கிராறு, எனக்கும் அந்த கலப்பை விதைப்ப பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே !

சோமு: அதுவாப்பா ! உன்னோட பங்காளி கொரு கலப்பை வச்சு விதைக்கிராறு.

ராமு: அந்த கலப்பை எப்படின்னே இருக்கும் ?


சோமு: ஆந்திர மாநில உள்ளூர் விவசாயிகளால முதல்ல உபயோகபடுத்தப்பட்ட இந்த கொரு கலப்பையில உள்ள படுக்கை வச சட்டத்தில இரண்டு இல்லேன்னா மூன்று கொழுக்கள் இணைக்கபட்டுருக்குது. இந்த கொழுக்கள் நாட்டு கலப்பையை மாதரியே இருக்கும், ஆனா அதை விட சின்னதா இருக்கும். இந்த கலப்பைய நிலத்தில ஓட்டும் போது கொழுக்கள் சால் அமைச்சிக்கிட்டே வரும். படுக்கை வச சட்டத்த்தில உள்ள தண்டுகளை மாற்றி அமைச்சி சாலோட இடைவெளியை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதோட ஒன்று இல்லன்னா இரண்டு புனல்கள் , புனலையும் கொழு முனையையும் இணைக்க மூங்கிலாலோ இல்லைன்னா உலோகத்தாலோ செய்யப்பட்ட குழாய்கள் இருக்கு. இந்த புனல்கள் வழியே விதைகளை போடும் போது குழாய்கள் வழியே விதைகள் சாலுக்கு வந்துடும். இந்த அமைப்பு முழுவதும் ஒரு ஜோடி மாடுகள் இழுத்துட்டு போற மாதரி நுகத்தடியோட இணைச்சுக்கலாம்.


ராமு: புனல்கள்ள எப்படின்னே விதைகள விதைக்கும்போது கொட்டி வைக்க முடியும்?

சோமு: புனல்கள்ள விதைக்ரதுக்காக உள்ள விதைகள கொட்டி வைக்க முடியாது. ஆனா அதுக்கு பதிலா விதைகளை நமது மடியிலோ இல்லைன்னா முதுகிலையோ தான் கட்டி, விதைக்கும் போது கூட எடுத்துக்கிட்டு போய் விதைக்க முடியும்.

ராமு: கலப்பையோட அமைப்பை பத்தி சொன்ன நீங்க விதைக்கிறத பத்தி சொல்லுங்கண்ணே !



சோமு: கொரு கலப்பையை ஏர் ஓட்ற மாதரி வயல்ல ஓட்டும் போது புனலுக்கு ஒரு ஆள்ன்னு கலப்பைக்கு பின்னாடியே வந்து, புனலுக்குள்ள விதைகள போட்டுகிட்டே வரணும். விதைங்க கொழு ஏற்படுத்தற சால்கள்ள விழுந்துக்கிட்டே வரும் . கொருக்கலப்பையை அடுத்த வரிசையில ஓட்டும் போது சால்கள் தானாகவே மூடிடும். இல்லன்னா விதைச்ச பின்னாடி விதைகள் மண்ணுல நல்லா மூட குண்டகாங்கற கருவியை வச்சு உழவு ஓட்டற மாதரி ஓட்டலாம். இத நம்ம ஆளுங்க குண்டி ஒட்டறதுன்னு சொல்லுவாங்க. இப்படி செய்றதால விதைங்க சால்ல ஒரே சீரான ஆழத்துல விழுந்து மேல் மண் ஒரே சீரா அழுத்தப்படுது. இதனால மண்ணுல உள்ள ஈரத்தன்மை பாதுகாக்கபடுது .விதைச்ச இரண்டாம் நாளும் சாலுக்கு குறுக்க குண்டி ஓட்டனும். மூணாவது,நாலாவது நாள்லையும் தேவைப்பட்டா ஓட்டலாம்.

ராமு: எப்ப வரைலையும் இந்த குண்டி ஒட்டலாம்ணே ?

சோமு: மொளப்பு வெளிய தெரிய ஆரம்பிக்கிற வரைலையும் குண்டி ஓட்டலாம் , அதுக்கப்புறம் ஒட்டவே கூடாது.

ராமு: கொருக்கலப்பையை வச்சு விதைக்கிறத பத்தி சொன்னீங்க! கைவிதைப்பை விட இது எந்த விதத்துல சிறந்ததுன்னே!

சோமு: கை விதைப்பு செஞ்சு,கலப்பைய இல்லைன்னா டிராக்டர வச்சு ஒட்டி விதைகளை மூடும் போது சில விதைங்க மண்ணுக்கு மேலயும், சில விதைங்க ஆழத்ளையும் விழுதுங்க. மண் மேலயே கிடக்கிற விதைங்க விதைச்ச பின்னாடி மழை பெஞ்சா மொளைச்சுரும் இல்லைன்னா மொளைக்காது. ஆனா அழத்துல விழுந்த விதைகலோட மொளைப்பு மண்ணுக்கு வெளியே வரமலேயே உள்ளுக்குள்ளேயே கருகிடும். இதனாலேயும், மண்ணுல ஈரப்பதம் குறைவா இருந்தாலும் கூடுதலான விதைகள விதைக்க வேண்டிஇருக்குது. இதோட விதைங்க வரிசையா விழாம அங்கொன்னும், இங்கொன்னுமாகவோ இல்லன்னா கொத்தாகவோ விழுந்துரும். இதனால தண்ணீர் , சத்து அப்புறம் சூரிய வெளிச்சத்துக்கு போட்டி ஏற்படுறதோட களை எடுக்கும் போது பயிரும் வேரோட பிடுங்கிக்கிட்டு வரும்.

ராமு: ஆமாண்ணே! நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் கைவிதைப்பு செய்ற என்னோட வயல்ல இருக்கு!

சோமு: நிச்சயமா இருக்கும் ! அதனால கொருக்கலப்பைய வச்சு விதைகளை விதைக்கும் போது விதைகள் போதிய ஆழத்ல விதைக்கபடுவதால பயிரோட வேருங்க விரைவா நல்லா வளர்ரதால அடி மண்ணுல உள்ள தண்ணிய கூட எளிதா உறிஞ்சி வறட்சிய தாக்கு புடிச்சி வளர முடியுது.அதோட விதைகள் வருசைக்கு வருசை சீரான இடைவெளயில விதைக்கபடுவதால களைகளை சுலபமா எடுத்துடலாம். இதனால களைகளுக்கும் பயிருக்கும், பயர்களுக்குள்ளேயே ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் செழிப்பா வளருது.

ராமு: ரொம்ப சந்தோசம்னே! நேரடி விதைப்பு செய்யிற விவசாயிகளுக்கு இது ரொம்ப உதவிகரமா இருக்கும்னே! எந்த எந்த பயிரோட விதைகள இந்த கலப்பைனால விதைக்கலாம் .

சோமு: நெல்,சோளம்,மக்கா சோளம் ,பயறு வகை பயிர்கள் மற்றும் கடலை போன்ற விதைகளை ஒரு நாளைக்கு 0.6ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை விதைக்கலாம். ஒரு புனல் உள்ள கொருக்கலப்பை 14.5 கிலோவும் , இரு புனல் உள்ள கொருகலப்பை 18.7 கிலோ எடையும் இருக்கிறமாதரி செஞ்சுருக்காங்க.

ராமு: இந்த முறை கொருகலப்பை வாங்கி என்னோட பங்காளி மாதரி நானும் விதைக்கனும்னே!

சோமு: அவசரப்படாத! இப்ப கொரு கலப்பையோட உரத்தையும் சேர்த்து வயல்ல போட்ற மாதரி கொருக்கலப்பை வந்துருச்சு. அதுபத்தி நாளைக்கு படத்தோட விளக்கமா சொல்றேன்.

ராமு: சரிண்ணே! படுத்தா தூக்கமே வராதுன்னே! எப்ப விடியும்னு இருக்குது! விடிஞ்சதும் மொத வேலையா இங்க வந்து நிப்பேன். நீங்க அவசியம் அந்த உரத்தோட விதைக்கிற கொரு கலப்பையை பத்தி சொல்லணும்.வர்றேன்னே!

சோமு: சரி வாப்பா!

--

Sunday, May 3, 2009

விவசாய மறுமலர்ச்சிக்கு NAF- நவீன மண் பரிசோதனை கூடம்

இந்திய மக்களை பசி பட்டியினியிலிருந்து காப்பாற்றி இன்றைய இந்தியாவின் தற்போதய வளர்ச்சிக்கு காரணமான தலைவர் ஒருவர் என்றால் அது திரு சி.சுப்ரமணியம் அவர்களாக தான் இருக்கும்.மக்களுக்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதும், நாட்டின் கட்டமைப்பை மேற்படுத்துவதும் தான் தனது தலையாய கடமை என்று பாடுபட்டவர் அவர். இந்த வருடம் அவரது நூற்றாண்டு தினம் வருகிறது. 1970 வரை இந்தியாவில் பஞ்சத்தால் ஏற்பபட்ட பட்டினி சாவு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. இந்தியா தன் உணவு தேவையை தன்னால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வெளி நாடுகளிடமிருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலிருந்தது. அந்த உணவையும் இறக்குமதி செய்ய பணம் இன்றி தவித்தது. ஒரு புறம் உணவு பற்றாக்குறை மறு புறம் வெகு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை என மிகவும் அபாயகரமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தது. உணவிற்கு வெளி நாட்டை கையேந்தி இருந்ததால் எந்த அரசியல் ரீதியான முடிவும் சுயமாக எடுக்க முடியாமல் வெளி நாட்டின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் உணவு துறை அமைச்சராக யாருமே பொறுபேர்க்க விரும்பவில்லை. அப்படி பட்ட இக்கட்டான நேரத்தில் உணவு துறை அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்கள் பொறுபேற்றார். மிக குறைந்த வருடங்களில் புதிய வேளாண் தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகபடுத்தி பசுமை புரட்சி ஏற்படுத்தி உணவு பற்றாகுறையை போக்கினார்.(பசுமை புரட்சியின் தேவை, நன்மை, தீமைகள் பற்றி பல எதிர்மறை கருத்து நிலவுகிறது.அது பற்றிய விரிவான அலசலை பிரிதொறு பதிவில் காண்போம்).

பசுமை புரட்சி தொடங்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசுமை புரட்சியினால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும், விவசாயிகளின் இன்றைய நிலை மோசமாக இருப்பதாலும், உணவு பொருளின் தேவை அதிகமாக இருப்பதாலும், விளை நிலங்களின் அளவு குறைவதலும் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவ்சாய உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த கிராம புற மக்களின் வாழ்க்கை திறனை அதிகரிக்க இரண்டாம் பசுமை புரட்சியினை ஆரம்பிக்க தேவை இருப்பதை அறிந்து தன்னுடைய 90 ஆவது வயதில் தேசிய வேளாண் நிறுவனம் என்னும் அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் விவசாய உற்பத்தி திறன் பெருக்கத்துக்காகவும், கிராம மக்கள் முன்னேற்றத்துக்காகவும் ஆற்றும் பணிகள் அளவிட முடியாது. அதன் பணிகளும் அதனால் மக்கள் அடையும் பயன்களை பற்றியும் பார்ப்போம்


நவீன மண் பரிசோதனை கூடம்



பயிரின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சளுக்கும் அடிப்படை தேவை மண்ணின் சத்துக்கள். இந்திய விவசாயிகள் தங்களுடைய மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளாமல் தேவையான் உரங்களை தேவையான அளவு இடாமல் அதிகமான உரங்களை தேவையற்று இடுகின்றனர். மேலும் உரம் இடும் போது தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றி மட்டும் கவலை கொண்டு பிற சத்துக்களை பற்றி கவலை படுவதில்லை.அரசு மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்தாலும் அது அந்த அளவு தரமானதாக இல்லை.


இந்த பிரச்ச்னையை போக்க தேசிய வேளாண் நிறுவனம் உலக தரம் வாய்ந்த மண் பரிசோதனை கூடத்தை தொடங்கி உள்ளது. பயிரை விதைக்கும் முன் மண்ணை இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் சரியாக அளவிடபட்டு தேவையான் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தருகின்றனர். அது மட்டுமன்றி அந்த மண்ணின் தரத்தை உயர்த்த செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றனர். இதன் மூலம் பயிருக்கு தேவையான உரத்தின் அளவு சரியாக நிர்ணயிக்க பட்டு, தேவையான உரங்களை சரியான காலத்தில், தகுந்த முறைபடி பயிருக்கு இடும் முறை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் பயிரின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.

இதை படிக்கும் விவசாயிகளும் தங்கள் மண்ணை நவீன முறையில் பரிசோதனை செய்ய தேசிய வேளாண் நிறுவனத்தை தொடர்பு கொள்ள்ளாம்.
தொலை பேசி: 22542598/22542803
மின்னஞ்சல்: nationalagro@gmail.com
இந்நிறுவனத்தின் மற்ற பணிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்

--