ராமு: அண்ணே! உங்க கிட்ட ரொம்ப நாளாவே ஒரு விசயம் கேக்கனும்னு இருந்தேன்.
சோமு: என்ன விசயம்பா அது !
ராமு: அண்ணே! என்னோட வயல்ல இதுவரைக்கும் நான் கைவெதைப்பு தான் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனா என்னோட பங்காளி அதாண்ணே நம்ம சுப்பிரமணி, கலப்பை வச்சு விதைக்கிராறு, எனக்கும் அந்த கலப்பை விதைப்ப பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே !
சோமு: அதுவாப்பா ! உன்னோட பங்காளி கொரு கலப்பை வச்சு விதைக்கிராறு.
ராமு: அந்த கலப்பை எப்படின்னே இருக்கும் ?
சோமு: ஆந்திர மாநில உள்ளூர் விவசாயிகளால முதல்ல உபயோகபடுத்தப்பட்ட இந்த கொரு கலப்பையில உள்ள படுக்கை வச சட்டத்தில இரண்டு இல்லேன்னா மூன்று கொழுக்கள் இணைக்கபட்டுருக்குது. இந்த கொழுக்கள் நாட்டு கலப்பையை மாதரியே இருக்கும், ஆனா அதை விட சின்னதா இருக்கும். இந்த கலப்பைய நிலத்தில ஓட்டும் போது கொழுக்கள் சால் அமைச்சிக்கிட்டே வரும். படுக்கை வச சட்டத்த்தில உள்ள தண்டுகளை மாற்றி அமைச்சி சாலோட இடைவெளியை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதோட ஒன்று இல்லன்னா இரண்டு புனல்கள் , புனலையும் கொழு முனையையும் இணைக்க மூங்கிலாலோ இல்லைன்னா உலோகத்தாலோ செய்யப்பட்ட குழாய்கள் இருக்கு. இந்த புனல்கள் வழியே விதைகளை போடும் போது குழாய்கள் வழியே விதைகள் சாலுக்கு வந்துடும். இந்த அமைப்பு முழுவதும் ஒரு ஜோடி மாடுகள் இழுத்துட்டு போற மாதரி நுகத்தடியோட இணைச்சுக்கலாம்.
ராமு: புனல்கள்ள எப்படின்னே விதைகள விதைக்கும்போது கொட்டி வைக்க முடியும்?
சோமு: புனல்கள்ள விதைக்ரதுக்காக உள்ள விதைகள கொட்டி வைக்க முடியாது. ஆனா அதுக்கு பதிலா விதைகளை நமது மடியிலோ இல்லைன்னா முதுகிலையோ தான் கட்டி, விதைக்கும் போது கூட எடுத்துக்கிட்டு போய் விதைக்க முடியும்.
ராமு: கலப்பையோட அமைப்பை பத்தி சொன்ன நீங்க விதைக்கிறத பத்தி சொல்லுங்கண்ணே !
சோமு: கொரு கலப்பையை ஏர் ஓட்ற மாதரி வயல்ல ஓட்டும் போது புனலுக்கு ஒரு ஆள்ன்னு கலப்பைக்கு பின்னாடியே வந்து, புனலுக்குள்ள விதைகள போட்டுகிட்டே வரணும். விதைங்க கொழு ஏற்படுத்தற சால்கள்ள விழுந்துக்கிட்டே வரும் . கொருக்கலப்பையை அடுத்த வரிசையில ஓட்டும் போது சால்கள் தானாகவே மூடிடும். இல்லன்னா விதைச்ச பின்னாடி விதைகள் மண்ணுல நல்லா மூட குண்டகாங்கற கருவியை வச்சு உழவு ஓட்டற மாதரி ஓட்டலாம். இத நம்ம ஆளுங்க குண்டி ஒட்டறதுன்னு சொல்லுவாங்க. இப்படி செய்றதால விதைங்க சால்ல ஒரே சீரான ஆழத்துல விழுந்து மேல் மண் ஒரே சீரா அழுத்தப்படுது. இதனால மண்ணுல உள்ள ஈரத்தன்மை பாதுகாக்கபடுது .விதைச்ச இரண்டாம் நாளும் சாலுக்கு குறுக்க குண்டி ஓட்டனும். மூணாவது,நாலாவது நாள்லையும் தேவைப்பட்டா ஓட்டலாம்.
ராமு: எப்ப வரைலையும் இந்த குண்டி ஒட்டலாம்ணே ?
சோமு: மொளப்பு வெளிய தெரிய ஆரம்பிக்கிற வரைலையும் குண்டி ஓட்டலாம் , அதுக்கப்புறம் ஒட்டவே கூடாது.
ராமு: கொருக்கலப்பையை வச்சு விதைக்கிறத பத்தி சொன்னீங்க! கைவிதைப்பை விட இது எந்த விதத்துல சிறந்ததுன்னே!
சோமு: கை விதைப்பு செஞ்சு,கலப்பைய இல்லைன்னா டிராக்டர வச்சு ஒட்டி விதைகளை மூடும் போது சில விதைங்க மண்ணுக்கு மேலயும், சில விதைங்க ஆழத்ளையும் விழுதுங்க. மண் மேலயே கிடக்கிற விதைங்க விதைச்ச பின்னாடி மழை பெஞ்சா மொளைச்சுரும் இல்லைன்னா மொளைக்காது. ஆனா அழத்துல விழுந்த விதைகலோட மொளைப்பு மண்ணுக்கு வெளியே வரமலேயே உள்ளுக்குள்ளேயே கருகிடும். இதனாலேயும், மண்ணுல ஈரப்பதம் குறைவா இருந்தாலும் கூடுதலான விதைகள விதைக்க வேண்டிஇருக்குது. இதோட விதைங்க வரிசையா விழாம அங்கொன்னும், இங்கொன்னுமாகவோ இல்லன்னா கொத்தாகவோ விழுந்துரும். இதனால தண்ணீர் , சத்து அப்புறம் சூரிய வெளிச்சத்துக்கு போட்டி ஏற்படுறதோட களை எடுக்கும் போது பயிரும் வேரோட பிடுங்கிக்கிட்டு வரும்.
ராமு: ஆமாண்ணே! நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் கைவிதைப்பு செய்ற என்னோட வயல்ல இருக்கு!
சோமு: நிச்சயமா இருக்கும் ! அதனால கொருக்கலப்பைய வச்சு விதைகளை விதைக்கும் போது விதைகள் போதிய ஆழத்ல விதைக்கபடுவதால பயிரோட வேருங்க விரைவா நல்லா வளர்ரதால அடி மண்ணுல உள்ள தண்ணிய கூட எளிதா உறிஞ்சி வறட்சிய தாக்கு புடிச்சி வளர முடியுது.அதோட விதைகள் வருசைக்கு வருசை சீரான இடைவெளயில விதைக்கபடுவதால களைகளை சுலபமா எடுத்துடலாம். இதனால களைகளுக்கும் பயிருக்கும், பயர்களுக்குள்ளேயே ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் செழிப்பா வளருது.
ராமு: ரொம்ப சந்தோசம்னே! நேரடி விதைப்பு செய்யிற விவசாயிகளுக்கு இது ரொம்ப உதவிகரமா இருக்கும்னே! எந்த எந்த பயிரோட விதைகள இந்த கலப்பைனால விதைக்கலாம் .
சோமு: நெல்,சோளம்,மக்கா சோளம் ,பயறு வகை பயிர்கள் மற்றும் கடலை போன்ற விதைகளை ஒரு நாளைக்கு 0.6ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை விதைக்கலாம். ஒரு புனல் உள்ள கொருக்கலப்பை 14.5 கிலோவும் , இரு புனல் உள்ள கொருகலப்பை 18.7 கிலோ எடையும் இருக்கிறமாதரி செஞ்சுருக்காங்க.
ராமு: இந்த முறை கொருகலப்பை வாங்கி என்னோட பங்காளி மாதரி நானும் விதைக்கனும்னே!
சோமு: அவசரப்படாத! இப்ப கொரு கலப்பையோட உரத்தையும் சேர்த்து வயல்ல போட்ற மாதரி கொருக்கலப்பை வந்துருச்சு. அதுபத்தி நாளைக்கு படத்தோட விளக்கமா சொல்றேன்.
ராமு: சரிண்ணே! படுத்தா தூக்கமே வராதுன்னே! எப்ப விடியும்னு இருக்குது! விடிஞ்சதும் மொத வேலையா இங்க வந்து நிப்பேன். நீங்க அவசியம் அந்த உரத்தோட விதைக்கிற கொரு கலப்பையை பத்தி சொல்லணும்.வர்றேன்னே!
சோமு: சரி வாப்பா!
--
கிராமத்து நடையில் பதிவு நன்றாக உள்ளது
ReplyDelete