Monday, December 27, 2010

மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை

கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக்கிழங்கு (கண்வள்ளிக்கிழங்கு - சன் டி.வி.) என்றெல்லாம் அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா (ஆங்கிலத்தில் மலபார் குளோரி லில்லி), ஒரு காலத்தில் மர்ம தேசப் பயிராகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப கால விலையேற்றத்தால் (2009 - ஒரு கிலோ ரூ.1600) தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் ஒரு மூலிகைப் பயிராகிவிட்டது.

இதில் வெகுஜன ஊடகங்களான தினசரி, வார, மாத ஏடுகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவை செய்தியை முந்தித்தரும் நோக்கத்தில், இதை வாங்கும் நிறுவனங்களுக்கே தெரியாத மருத்துவப் பயன்களையெல்லாம் பட்டியலிடுவது அனைவரையும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது.(வயிற்றுவலி, பூச்சி மருந்து, ஆண்மை பெருக்கி - ஆர்வக் கோளாறில் கிழங்கை புடுங்கி சாப்பிட்டராதீங்க வாலிப வயோதிகர்களே, அப்புறம் உங்கள ஆண்டவனாலும் காப்பத்த முடியாது, ஆமாம் கிழங்கு மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தது)

மாற்றுப்பயிர் தேடும் ஆர்வம் மிகுந்த விவசாயிகளுக்கு ஒரு சலனத்தை (சபலத்தை) இந்தப்பயிர் நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாது. இது போன்ற புதுப்பயிர்களை முயற்சி செய்யும் முன் அது பற்றிய சாகுபடித்தகவல், சந்தை நிலவரம், முதலீடு, எதிர்காலம் போன்றவற்றை நன்கு தெரிந்துகொண்டு அதன் பின் முயற்சிக்கலாம். எனவே கண்வலிக்கிழங்கு சாகுபடி பற்றி முடிந்தவரை முழுமையான தகவல்களை தந்துள்ளேன்.

தாவர பெயர் : குளோரியோசா சூப்பர்பா
குடும்பம் :லில்லியேசியே

பிற மொழி பெயர்கள்
ஆங்கிலம் :மலபார் குளோரி லில்லி
தெலுங்கு :அடவிநாபி
மலையாளம் :காந்தள்
கன்னடம் :கொலிகுட்டுமா
ஹிந்தி :கலிஹரி


சாகுபடிக்கு வந்த விதம்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சாகுபடியாகும் இடங்கள்

மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக கரூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது, ஏறக்குறைய 700௮00 டண் விதை உற்பத்தியாகிறது.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

இந்த பயிர் பொதுவாக வரண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான்.

வடிகால் வசதி இல்லாத நிலத்தில் பயிர்வடிகால் வசதி உள்ள இடத்தில் பயிர்
சாகுபடிக்கு ஏற்ற மண்

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒடக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகியவை ஏற்றது. வடிகால் வசதியில்லாத தாழ்வான நிலங்கள், களிமண், சதுப்பு நிலம் போன்றவை ஆகாது. கடலை, குச்சிக்கிழங்கு, மஞ்சள், கோலியஸ் போன்றவை நன்கு விளையும் நிலமாக இருந்தால் போதும். அடியில் உள்ள இரண்டு இடங்களும் முந்தைய நாள் மழை பெய்த நிலம், வித்தியாசத்தை பாருங்கள்.

சாகுபடிக்கு ஏற்ற பருவம்

ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் விதைக்கிழங்கு நடவு செய்ய ஏற்ற காலம்,

விதைக்கிழங்கு சேகரம் செய்தல்

விதைக்கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தோ, காடுகளில் சேகரம் செய்தோ ஒலைக்குடிசை போன்ற வெப்பம் தாக்காத இடங்களில், தரையில் 5 - 10 செ.மீ. உயரத்திற்கு மணலைக் கொட்டி அதன் மீது சேகரம் செய்த கிழங்குகளை 15 - 20 செ.மீ. அகல வரப்புக்கள் போன்று 20 செ.மீ. உயரத்திற்கு மிகாமல் காற்றோட்டமாக வைக்கவும். பெவிஸ்டின் 5 கிராம் ஒரு கூடை மணலில் கலந்து தூவிவிடுவது நல்லது.


தவறான முறைசரியான முறை
விதைக்கிழங்கைக் கையாளுதல்

கிழங்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக அட்டைப் பெட்டியில்தான் கொண்டு செல்லவேண்டும். அதிக பட்சமாக ஒரு பெட்டி 30௪0 கிலோவிற்கு மிகாமல் இருக்கவும். நடவிற்கு எடுத்து செல்லும் போது கூடை போன்றவற்றில் காகிதம் அல்லது வைக்கோல் வைத்து எடுத்து செல்லவும்.

தேவையான விதைக் கிழங்கு

சிறிய கிழங்காக இருந்தால் (40- 50 கிராம்) 500 கிலோ ஒரு ஏக்கருக்கும், பெரிய கிழங்காக இருந்தால் (100 - 120 கிராம்) 600 கிலோ ஒரு ஏக்கருக்கும் தேவைப்படும். கிழங்கு 40 கிராமுக்கு குறைவாக இருந்தால் முதல் வருடம் 100 கிலோவுக்கு குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும்.

உபயோகமற்ற கிழங்குகள்


பெரிய, சிறிய, நடுத்தர கிழங்குகள்உழவு

குறைந்தது 2 - 3 உழவு அவசியம், அதில் ஒன்று 5 கலப்பை உழவு போடுவது நல்லது. மண் அமைப்பிற்கு ஏற்றவாறு உழவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். கடைசி உழவில் 2 - 3 டண் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

வரப்பு அமைத்தல்

6 அடி இடைவெளி விட்டு வரப்பு அமைக்கவும், வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கு நடவிற்கு குழி வரப்பும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பும் அமைக்கவும்.நடவு செய்யும் பக்குவம்

முடிந்த வரை கிழங்கு முளைப்பு வந்த பின் நடவு செய்தால் 100 சதவீத முளைப்புத்திறன் இருக்கும், ஆனால் முளைப்பு வந்த கிழங்கைக் கவனாமாக கையாள வேண்டும், இல்லையென்றால் மிருதுவான முளைப்பு உடைந்து விடக்கூடும்.

நடவு செய்யும் முறை

வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கை வாய்க்காலிலும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பிலும் 5 - 10 செ.மீ. (மண் தன்மைக்கேற்ப) ஆழத்தில் கிழங்குகளை படுக்கை வசமாக 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக வைக்கவும். படத்தில் சற்று நெருக்கமாக இருக்கும், இந்த அளவிற்கு அடர்த்தி தேவையில்லை.

சொட்டு நீர் பாசனம்வாய்க்கால் பாசனம்

நீர் பாசனம்

நடவு முடிந்ததும் உயிர் நீர் உடனடி அவசியம் இல்லை எனினும் இரண்டொரு நாட்களில் தண்ணீர் விடவேண்டும்.
முளைப்பு

சரியான பருவம் வந்தாலோ அல்லது பருவ மழை நன்கு பெய்தாலோ உடனடியாக முளைப்பு வந்துவிடும். மூங்கில் குருத்து போல் வேகமாக வளர ஆரம்பிக்கும், பருவ மழை சரியாக தொடர்ந்து பெய்தால் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.


தொடர்ந்து அடுத்த பதிவில் காண்போம்

---

5 comments:

 1. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்னதால மனசொடிஞ்சு எழுதவே வர மாட்டேங்கிராரோ -டவுட் கோவாலு

  ReplyDelete
 3. iam jayabalansingh frm pondicherry where i may get this plants and its seeds my contact nos is 9789484949 please response

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_17.html

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்