1. நில நிர்வாகம்
2. உழவு
“அகல உழுதலை விட ஆழ உழதல் சிறந்தது” – என்பது மூத்தோர் வாக்கு, ஆனால் நடைமுறையில் விவசாயிகள் ½ அடி ஆழத்திற்கு மேல் ஆழமாக உழுவதில்லை. ஆழ உழுவதற்கான உழவியல் கருவிகளைப் பற்றி அவாகள் அறியாததே இதற்கு காரணம்.
½ அடிக்கும் மேல் ஆழமாக உழுவதன் அவசியம் என்ன?
நாம் தொடர்ச்சியாக வயலை கலப்பை கொண்டு ½ அடி வரை உழுவதால் ½ அடிக்கும் கீழே உள்ள விளை நிலத்தின் பகுதி பாறை போன்ற கடினத் தன்மை அடைகிறது. இதனால் வேர் மற்றும் மழை நீர் ½ அடி ஆழழத்தைத் தாண்டி மண்ணில் ஊடுருவ இயலவில்லை.
அடி விளை மண் (sub surface layer) கடினத்தன்மை அடைவதால் ஏற்படும் விளைவுகள்:
அடி விளை மண் கடினத்தன்மை அடைவதால்…
• பயிர்களின் வேர்கள் ½ அடிக்கும் கீழே ஊடுருவ முடிவதில்லை
• மழை நீர் ½ அடி ஆழத்திற்கு மேல் விளை மண்ணால் உறிஞ்ச இயலாமல் போகிறது.
• அதிகப் படியான மழை நீர் வழிந்தோடி மண் அரிப்பை உருவாக்குகிறது
• வளமான மேல் தட்டு விளைமண் அடித்துச்செல்லப்படுகிறது
• கீழ்த்தட்டில் உள்ள உப்புகள் வடிக்கப் படுவதில்லை இதனால் மண்ணின் தன்மை கெட்டுப் போகிறது.
• வேர்களுக்குத் தேவையான நிலைத்த தன்மை கிடைப்பதில்லை
ஆடித்தட்டு விளைமண்ணின் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழுவதன் மூலம் கடினத்தன்மையைப் போக்கலாம்.
இதற்கு எந்த பண்ணைக் கருவியை உபயோகப் படுத்தலாம்?
உளிக்கலப்பை என்பது விளைமண்ணின் அடித்தட்டுப் கடினத் தன்மையைப் போக்க ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு நவீன பண்ணைக் கருவியாகும்.

படத்தை சுட்டி பெரிதாக பார்க்கவும்
உளிக்கலப்பை கொண்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
• விளைமண் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழப்பட்டு கடினத்தன்மை நீக்கப்படுகிறது.
• இதன் விளைவாக விளை நிலங்களிலேயே மழை நீர் சேகரிக்க படுகிறது
• வேர்கள் விளை மண்ணில் ஆழமாக ஊடருவதால் அடி நீரைப் பயன்படுத்த முடிகிறது
• மண் உப்பத் தன்மை அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
• நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.
• மண் அரிப்பு தடுக்கப்படுகிறது
பொதுவான சந்தேகங்களும் அதன் விளக்கங்களும்:
1. உளிக்கலப்பையை ஏர்மாடு கட்டி உழமுடியுமா?
இயலாது ஓர் உளிக்கலப்பை 1½ அடி ஆழம் உழுவதற்கு 30–35 குதிரைத் திறன் (HP) தேவை. எனவே 35 HP டிராக்டர் கொண்டே இதனை பயன்படுத்த இயலும்.
2. உளிக்கலப்பை பயன்படுத்துவதால் 1½ அடி ஆழ விளைமண் புரட்டப்படுமா?
இல்லவே இல்லை, இக்கலப்பை மண்ணை கீறிக் கொண்டு மட்டுமே உழுகிறது. கடினத்தன்மை தகர்க்கப்படுகிறது, மண் புரட்டப்படுவதில்லை
3. வருடத்தில் எத்தனை முறை இக்கலப்பை கொண்டு உழவேண்டும்?
வருடத்தில் குறைந்தது 1 முறையாவது உழுதல் நல்லது
4. எப்போது உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்?
கோடை மழைக்குப் பிறகு உழுதல் நல்லது. ஏனெனில் கோடை காலத்தைத் தொடர்ந்து வரும் மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை விளை நிலத்தில் சேமிக்க இயலும
--