Monday, November 30, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -4

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பார்வையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு மாநிலங்களில் விவசாயம் நடைபெறுவதே தெரியாது. அவர்களது ஆராய்ச்சிப்பணிகளும் இம்மாநிலங்களை ஒட்டியே இருக்கும். ஆனால் உண்மையில் அரிசி உற்பத்தியில் தமிழகமும் ஆந்திரமும் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றன. தோட்டக்கலைப்பயிர்களில் கர்னாடகம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பாராமுகம் பரந்த முகமாக மாற வேண்டும்.

நாம் எப்போதும் அரசாங்கத்தைக் குறை கூறி வருகிறோம். அதில் உண்மையும் உள்ளது. கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயிகளின் தேவையான கடன் நிதி அமைச்சகத்தின் கையில் உள்ளது. உரமோ, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. மதிப்பு கூட்டுதலோ தனி அமைச்சகத்தின் கையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ ஊரக வளர்ச்சித்துறையிடம் உள்ளது. நீர் நிலைகளோ, நீர்ப்பாசன அமைச்சரிடம் உள்ளது. காடு வளர்ப்போ தனி அமைச்சகத்திடம் உள்ளது. ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் இதற்கு விடிவு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

வேளாண் துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதில்லை. டெப்போக்களில் தேவையான விதை இருப்பு எப்போதும் இருப்பதில்லை. அது எப்படித்தான் தனியாரிடம் எப்பொதும் இருக்கும் ஒரு பொருள் இவர்களிடம் இருப்பதில்லை என்று புரியவில்லை. தெனாலிராமன் வளர்த்த பூனை பாலைக்கண்டு ஓடியதைப்போல் விவசாயிகள் டெப்போ விதைகளைக்கண்டு ஓடுகிறார்கள். துறையில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஒன்று ரிப்போர்ட் எழுதுகிறார்கள் (அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரிவதில்லை) அல்லது மீட்டிங் அட்டெண்ட் செய்கிறார்கள். யாருமில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றுகிறார்களோ தெரிய வில்லை. போகாத களப்பணிக்கு மீட்டிங்கும் ரிப்போர்ட்களும். அந்த அலுவலர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது தான் நம் சிஸ்டம். இதற்காக நான் மொத்த அலுவலர்களையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது அரசுகளின் கொள்கைக்குறைபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் களப்பணி ஆற்ற வேண்டிய அலுவலர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப் படுவதில்லை. ஒரு டூ வீலருக்குக் கூட வழியில்லாமல் விவசாயியிடம் லிஃப்ட் கேட்டுச் செல்லும் களப்பணியாளர்களையும் பார்க்க இயலும். இது போன்றவை களப்பணி ஆற்ற விரும்பும் அலுவலர்களையும் சோர்வடைய வைத்து விடுகிறது. இது மூலம் நாம் அறியும் உண்மை என்ன என்றால், அரசாங்கம் இவர்களுக்காக சம்பளம் என்பதை விரயம் செய்கிறது. எனவே களப்பனியாளர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தர வேண்டியது அரசின் கடமை மற்றுமன்றி அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகார அமைப்புகளும் தான். நிதிப்பற்றாக்குறையைத்தான் எப்போதும் இதற்கு காரணமாகக் கூறுவார்கள். இதனை ஈடு கட்டத்தான் ஆராய்ச்சிகான முதலீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூறுகிறேன். இதனால் ஆராய்ச்சி தேவையில்லை என்று கூற வரவில்லை. உபயோகமான ஆராய்ச்சி தேவை என்பது என் கருத்து. களத்தில் விவசாயிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே தேவைக்கேற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள இயலும்.

இதன் அடுத்த பதிவை பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்

--

3 comments:

  1. நல்ல பதிவு. இந்த தொடரில் இந்திய விவசாயத்தை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் பற்றி நன்கு அலசுகிறீர்கள். பாராட்டுக்கள். இப்பகுதியை தொடர்ந்து எழுதி அனைத்து பிரச்சனைகள் பற்றியும், தீர்வு பற்றியும் அலசுங்கள். நன்றி

    ReplyDelete
  2. //இதனை ஈடு கட்டத்தான் ஆராய்ச்சிகான முதலீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூறுகிறேன். இதனால் ஆராய்ச்சி தேவையில்லை என்று கூற வரவில்லை. உபயோகமான ஆராய்ச்சி தேவை என்பது என் கருத்து//

    இனி வரும் காலங்களில் இந்தியா உண்மையிலேயே விவசாய ஆராய்ச்சியை தொடங்கினாலொழிய இந்திய விவசாயத்தை யாரும் காப்பாற்ற முடியாது.
    முக்கியமாக மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் அதிக முக்கியத்துவம் செலுத்தி அரசு ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியமானது. இல்லை என்றால் வரும் காலத்தில் விவசாயிகள் தங்கள் லாபத்தில் பாதி பணத்தை விதை வாங்கவே செலவழிப்பார்கள்
    உண்மையிலே ஆச்சிரிய பட வைக்கும் செய்தி என்ன வென்றால் இந்திய விவசாய ஆராய்ச்சியின் இன்றைய மோசமான நிலை வெளி உலகத்திற்கு சிறிதும் தெரியவில்லை. அது ஒரு குறைந்த பட்ச விவாத பொருளாக கூட இல்லை.

    ReplyDelete
  3. // துறையில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஒன்று ரிப்போர்ட் எழுதுகிறார்கள் (அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரிவதில்லை) அல்லது மீட்டிங் அட்டெண்ட் செய்கிறார்கள். யாருமில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றுகிறார்களோ தெரிய வில்லை.//
    உதாரணம் நன்றாக உள்ளது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்