மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.
நம்பிக்கை தந்த 1950கள்
1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.
நீர் தேக்கங்களும் அணைகட்டுகளும் தான் நவீன இந்தியாவின் கோவில் என்று அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் முழங்கினார்.அதனால் பல லட்சம் விவசாய நிலங்களின் தாகம் தணிந்ததோடு அல்லாமல் வீடுகளுக்கும் மின்சார உற்பத்தியும் செய்யபட்டது.
நிலையற்ற 1960கள்
1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டது. மிகபெரிய பொருள் இழப்பு ஏற்பட்டது.இதனால் நம் நாட்டில் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1965 - 66ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு மிக கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. இந்த கால கட்டத்திலேயே அரசாங்கமே மக்களை ஒரு நாளுக்கு ஒரு வேளை உண்ணாமல் இருக்க சொன்னது. அப்போதயை பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதற்கு முன்னுதாரனமாக கூட இருந்தார். ஆனால் நிஜத்தில் மக்கள் நல்ல உணவு வாரத்திற்கு ஒரு முறை தான் உண்ட நிலை இருந்தது. பல்லாயிரம் பேர் உணவின்றி பசி கொடுமையால் மாண்டனர். பிறகு 1965 ல் பாக்கிஸ்தானுடன் யுத்தம் ஏற்பட்டு வட இந்தியாவில் பதற்றம் நிலவியது.இது போன்ற அடுக்கடுக்கான இன்னல்களினால் இந்தியா 1966 - 67 இல் 6.4 மில்லியன் டண் கோதுமையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இந்த நேரத்திலேயே அமெரிக்க பத்திரிக்கைகள் இந்தியாவை பிச்சைகார நாடாக கேலி சித்திரம் வரைந்து உலக அரங்கிலேயே இந்தியாவையும் அதன் இறையான்மையையும் அசிங்கபடுத்தியது.
பிறகு 1960களின் நடுவிலேயே மெக்சிகோ நாட்டை சார்ந்தவரும் உலகில் ஈடு இணையற்ற பயிர் பெருக்கவியல் விஞ்சானியுமான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரின் உதவியோடு இந்தியாவிற்கு குறைந்த வயதுடைய குட்டை ரக கோதுமை அறிமுகம் செய்யபட்டது. இது அதிக மகசூல் தரவல்லதாகவும் நோய்,பூச்சி மற்றும் வறட்சியை தாங்கி வளர கூடியதாகவும் இருந்ததால் உணவு தானிய உற்பத்தியில் மிக பெரிய புரட்சியே ஏற்பட்டது. இதுதான் பசுமை புரட்சியின் ஆரம்ப காலம் எனலாம்.
பசுமை புரட்சியின் பரிணாம வளர்ச்சி
இடைக்கால 1960 களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வீரிய ஒட்டு கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு அனைத்து கோதுமை வளரும் மகாணங்களிலும் செம்மையாக செயல்படுத்த பட்டது.
1971 ல் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 26 மில்லியன் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்திய மக்களுக்கு பசியின் மீதிருந்த பயம் மறைய தொடங்கி இருந்த காலம் அது. இந்த தருணத்தில் தான் வங்காள தேசம் உருவானது. அதனால் வேளாண் உற்பத்திக்கு அரசால் அதிக பணம் ஒதுக்கி செலவிடமுடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய மக்களுக்கு எல்லை புரத்தை பற்றிய கவலையோடு உணவுத்தேவை பற்றிய கவலையும் சேர்ந்தே இருந்தது என்று சொல்லலாம்.
அணைகட்டு பாசன வாய்க்கால் நீர் மேலாண்மை அறிமுகம்
பெரிய அணைகளில் நீரை தேக்கி வைத்து அதிலிருந்து பாசன வாய்க்கால்களை வெட்டி சுழற்சி முறையில் நீரை பிரித்து கொடுக்கும் முறையானது 1970 களில் அறிமுகபடுத்தபட்டு இந்திய விவசாய பாசன முறையிலேயே ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் முறையும் அறிமுகபடுத்தபட்டு பல லட்சம் புதிய பயிர் செய்யாத நிலங்களை விவசாயம் செய்ய வைத்த கால கட்டம் அது.
அகில இந்திய நெல் மகசூல்
1980 களில் நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்டேரின் சராசரி உற்பத்தி வெகுவாக பெருகியது. அதாவது 1950 களில் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ நேல் என்ற அளவிலிருந்து 1980 க்ளில் 1.25 டன்னாக உயர்ந்து தற்போது 2 டன்னுக்கும் மேல் மேம்படுத்த பட்டுள்ளது.
கரும்பு
1967 - 68ல் 95.50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2006 - 07 ல் 270 மில்லியன் டன்னாக ஆழ்துறை கிணற்று பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் உயர்ந்தது.
எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தி
1980 களில் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் புரட்சி ஏற்பட்டு உற்பத்தி திறன் வெகுவாக உயர்த்தபட்டது. 1990 களில் பருத்தி மகசூல் அதிகரிக்கபட்டது. பருத்தியில் 1967 - 68 ல் 5.78 மில்லியன் பேல்( 1 பேல் என்பது 170 கிலோ) என்ற அளவில் இருந்து 2005 - 2006 ல் 18.50 மில்லியன் பேல்களாக அதிகரிக்கபட்டது.
முட்டை உற்பத்தி
1968 - 69 களில் 5.3 மில்லியன் முட்டைகளாக இருந்தது 2006 - 07 ல் 47.3 மில்லியன் முட்டைகளாக உயர்ந்தது.
மீன் உற்பத்தி
1965 - 66ல் 1.33 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2006 - 07 ல் 6.30 மில்லியன் டன்களாக 5 மடங்கு உயர்ந்தது.
1980களில் ஏற்பட்ட மாற்று பயிர் திட்டம்
இந்த காலகட்டத்திலே நெல் வயல்கள் சில மீன் குட்டைகளாக மாறின. மக்காசோள உற்பத்தி அதிகரிப்பால் நிறைய கொழி பண்ணைகள் உருவாயின. தென் இந்திய கடற்கரை மாநிலங்களில் தென்னை அதிகம் சாகுபடி செய்யபட்டது.சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் ஒரம் கட்டபட்டன. ஏறத்தாழ 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த உணவு தானிய பயிர்கள் அடியோடு பணபயிர் சாகுபடிக்காக மாற்றபட்டன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும் சற்று மேம்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பெருகியது.
எழுச்சி மிகு 1990கள்
இந்த காலகட்டம் இந்திய விவசாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த 1990கள் உலக மயமாக்கல் காலம் எனலாம் . சோசலிஸ்ட் முறையில் நடைபெற்ற இந்திய விவசாயம் கோட்டா முறைக்கு மாற்ற பட்டது. காட் ஒப்பந்தம் காட்டிய வழியில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கள் கொள்கையை ஏற்று கொண்டது. நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த நெல், கோதுமை,மலர்,காய் கனிகள் போன்றவற்றை வெளி நாடுகளுக்கு அதிக அலவில் ஏற்றுமதி செய்தது. இதனால் உலக அரங்கிலே இந்தியாவின் மதிப்பு 1960 களில் இருந்த "கப்பலிலிருந்து இந்தியனின் வயிற்றுக்கு" என்ற அவல நிலை மாறி "உணவு ஏற்றுமதி செய்யும் நாடு" என்ற கௌரவத்தை அடைந்த கால கட்டம்.
21 ம் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தி
தற்போதைய உற்பத்தியை விட 2020 ல் இந்திய வேளாண் உற்பத்தி இரட்டிப்பு அடைய வேண்டும் என்று இந்திய திட்ட வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.உணவு தானியம்,பயிறுவகைகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை சார்ந்த பயிர்களான கரும்பு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் நாம் அதிகபடியான மகசூலை எடுத்து விட்டோம். மேலும் உணவு தானிய பயிர்களுக்கான பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் 2003க்கு பிறகு ஒரு ஹெக்டேர் சராசரி மகசூலில் உணவு தானியங்களை பொருத்த வரையில் நம்முடைய இலக்கை அடைய முடியாத இக்கட்டான சூழலில் தான் உள்ளோம். ஆனால் காய்கறிகள் மற்ரும் பழங்கள், மீன் உற்பத்தி பால் உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்து விட்டோம்.
2020 ல் எதிர்பார்க்கும் நிர்ணயிக்க பட்ட உணவு தானிய உற்பத்தி
வாழிங்டனில் உள்ள பன்னாட்டு உணவு கோட்பாடு ஆராய்ச்சி கழகம் இந்தியாவை பொருத்த வரை அதன் உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இனிவரும் 20 ஆண்டுகள் உணவு உற்பத்திக்கு மிக போரட்டமான கால கட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
எதிர் வரும் 2020 ல் இந்திய மக்கள் தொகை உத்தேசமாக 145 கோடி. உணவு தானிய தேவை பாடு 307 மில்லியன் டன். எதிர் பார்க்கும் உற்பத்தி 240 - 250 மில்லியன் டன். நம்மிடம் உள்ள அவசர கால தேவைக்காக சேமிக்க பட்டுள்ள உணவு தானியங்களின் அளவு 60 மில்லியன் டன்.(இதில் பாதிக்கும் மேல் சரியான அறிவியல் முறைப்படி சேமிப்பு செய்யாததால் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளதாக முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களே வேதனையோடு சொன்ன விஷயம்). எதிர்பார்க்கும் உணவு தானிய இறக்குமதி அளவு 20 மில்லியன் டன்(மீண்டும் 1960 ல் ஏற்பட்ட நிலை).
அது மட்டுமின்றி புவி வெப்பமாதல் நிகழ்வால் பருவம் தப்பும் பருவ மழைகளும்,புயல் மற்றும் குறுகிய கால பேய் மழைகளும் இப்பிரச்சனையின் பரிமாணத்தை அதிகரிக்கின்றன. விரிவாகும் ஏழை பணக்கார விரிசலால் பற்றாக்குறை காலங்களில் உற்பத்தி செய்ய பட்ட உணவும் எந்த அளவுக்கு ஏழை மக்களால் வாங்கும் திறன் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திலே வேளாண் வளர்ச்சி விகிதம்
8 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 4.7%
9 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 2.1%
10 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 1.8%
முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் எட்டபட்ட இரட்டை இலக்க வளர்ச்சி படி படியாக குறைந்து இந்த மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ள பட்டுள்ளது.பன்னாட்டு உணவு கோட்பாட்டு ஆராய்ச்சி கழகம் 2006 ம் ஆண்டு தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் 30% க்கும் மேலானவர்கள் இன்றும் ஒரு வேளை உணவோடு தான் அன்றாடம் உறங்க செல்கின்றனர். ஆப்ரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத வேதனையான உண்மையாகும்.
இந்திய விவசாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் காண்போம்
--
நல்ல பதிவு. சீக்கிரம் விவசாயம் பக்கம் நமது கவனம் திரும்பும் என்பது எனது எண்ணம்.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteபசுமை புரட்சியை ஒரு அமெரிக்க சதி என்று இகழும் கம்யுனிஸ்டுகள் படிக்க வேண்டிய பதிவு.
ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்க்கை முறைகளை கையாள அன்று கால அவகாசமோ, இருப்போ இல்லாத emergency situtation.
நில உச்ச வரம்பு சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை பற்றியும் அலச வேண்டும். பண்ணைகளின் சராசரி அளவு, மிக மிக குறைந்து, uneconomic farm size ஆக மாறியதும் ஒரு முக்கிய பிரச்சனை. முன்னேறிய நாடுகள் போல மிகப் பெரிய அளவிலான பண்ணைகள் உருவாக முடியாமல் போயிற்று. அதனால் ஏற்பட்ட low investments and low productivity, etc பற்றி ??
ReplyDeletetest
ReplyDelete