Friday, November 27, 2009

இந்திய விவசாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

சென்ற பதிவில் இந்திய விவசாயம் கடந்து வந்த பாதையை பற்றி பார்த்தோம் .இப்பதிவில் இந்திய விவசாயம் இனி வரும் காலங்களில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.


1.வேளாண் உற்பத்தியின் வளர்ச்சியில் மந்த நிலை


உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 1980 களில் 2.85 சதவீதத்திலிருந்து 1990 களில் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 2009 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் மேலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனால் இந்த ஆண்டு இந்தியா அதிக அளவில் (நிர்ணயிக்கபட்ட 20 மில்லியன் டன்னை விட) உணவு தானியங்கள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

2.வேளாண் தொழிலில் குறைந்து வரும் அரசின் முதலீடு


இந்திய அரசு வேளாண்மைக்கு செய்யும் முதலீடு சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் குறைந்து வர தொடங்கி உள்ளது.உதரணமாக முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நீர் பாசனத்துக்கு செலவு செய்ய பட்ட தொகை மொத்த பட்ஜெட்டில் 23% ல் இருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 5 சதவிதமாக குறைந்து உள்ளது.


3.குறைந்து வரும் தனி நபர் நில அளவு


உணவு தானிய உற்பத்தி செய்யபடும் 120 மில்லியன் ஹெக்டேர் என்ற நில அளவானது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரிக்க படாமல் அப்படியே உள்ளது. மேலும் இந்த நிலத்திலே நெல், கோதுமை பயிரிடபட்ட நிலங்கள் வெகுவாக மற்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்ய குறைந்து கொண்டு வருகிறது.
1960 களில் சராசரியாக தனி நபர் நில அளவானது 2.63 ஹெக்டேர் என்ற நிலையிலிருந்து மாறி 2006 - 2007 ல் 0.14 ஹெக்டேர் ஆக குறைந்துள்ளது. தற்சமயம் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சபடுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 7.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமானது பல்வேறு பட்ட தேவைகளுக்காக குறைந்து கொண்டு வருகிறது.


4. வளம் குன்றிய மண்


மண்ணின் பௌதீக தன்மையை அறியாமலும் அடிப்படை அறிவியல் முறை சாராமலும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இடபட்டு கொண்டிருக்கும் செயற்கை உரங்களால் மண் தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.


5.தொழில்நுட்பம் அறியாமை


உணவு தானிய பயிர்களுக்கு உற்பத்தியை பெருக்க போதிய தொழில் நுட்ப அறிவுடன் கூடிய அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளிடம் சென்றடைய வைப்பதிலேயே நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது. உதாரணமாக கோதுமையில் ஒரு ஹெக்டேர் மகசூலானது 4700 கிலோ என்ற அளவிலிருந்து தற்சமயம் 4000 கிலோவாக குறைந்து கொண்டு இருக்கிறது. நெல், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் இதே நிலை தான்.இதனால் தான் சமையல் எண்ணெயை மட்டும் கடந்த ஆண்டு சுமார் 30000 கோடி ரூபாய்க்கு அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.


6.தொலைநோக்கு பார்வை அற்ற திட்டங்கள்


தன்னிறைவு வேளாண்மைக்கு 2001ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தேக்க நிலையே இந்தியாவில் நிலவுகின்றது. 40% விவசாயிகள் தங்களுக்கு எதாவது மாற்று தொழில் கிடைத்தால் அடுத்த கணமே விவசாயத்தை விட்டு செல்ல தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு. எனவே இதற்கு தகுந்த நீண்ட கால திட்டங்கள் தான் நமக்கு தேவை. ஆகவே கவர்ச்சி திட்டங்களை ஒழித்து வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.


7.தரமான விதை


ஒரு ஆண்டிற்கு சராசரியாக எல்லா பயிர்களுக்கும் தேவையான தரமான விதை அளவு 48 மில்லியன் குவிண்டால் விதைகள். ஆனால் நமக்கு கிடைப்பதோ 10.84 மில்லியன் குவிண்டால் விதைகளே. பெரும்பாலான விவசாயிகள் தரமான விதை கிடைக்காமலே திண்டாடுகின்றனர் என்பது வேதனையான செய்தி.


8. வேளாண் கடன்


47% நடுத்தர விவசாயிகளும் 70% சிறு விவசாயிகளும் நம் நாட்டிலே வங்கிகள் மற்றும் ஏனைய வேளாண் கடன் தரும் நிறுவனக்களிடம் இருந்து கடன் பெற இயலாத நிலையிலேயே உள்ளனர். கடன் தரும் நிறுவனக்களிடையே உள்ள வேறுபாடுள்ள வட்டி விகிதமும் மக்களை குழப்புகிறது.இந்தியாவிலேயே அதிக கடன் தேவைபடும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 9403 ரூபாய் கடன் தேவை படுகிறது. ஆனால் மத்திய பிரதேசத்திற்கு 667 ரூபாய் தான் தேவை படுகிரது


9. ஆள் பற்றாக்குறை


புதிய தலைமுறையினர் விவசாயம் செய்வதை கௌரவ குறைச்சலாக கருதுகின்றனர். மேலும் மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களினாலும், இலவசங்களாலும் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.அதே சமயம் இதை ஈடு கட்ட இயந்திரமாக்களும் சிரமமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகளிடம் உள்ளது மிக குறைந்த தனி நபர் நில அளவு.
அது மட்டுமன்றி விவசாய படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முன்பு போல் மிகவும் அதிக திறமையான மாணவர்கள் வருவதும் குறைந்து கொண்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அதிக சம்பளத்துடன் எளிமையாக வேலை கிடைப்பதால் மாணவர்களிடையே விவசாய பட்ட படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.


10.மானாவரி நிலம்


நாம் பயிர் செய்யும் 143 மில்லியன் ஹெக்டேரில் 60% க்கும் மேல் மானாவரி நிலமாகும்.நிலையற்ற வான்மழையும் தொழில் நுட்ப அறிவு பற்றாக்குறையும் இயற்கையாகவே மானாவாரி நிலங்களின் குறைந்த உற்பத்தி திறனும் விவசாயிகளை மேலும் கடனாளிகளாகவே ஆக்குகின்றன. இந்த மானாவாரி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை ஏற்க தயாராக இருப்பினும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும், சூழ்நிலையும் பெரும் தடையாகவே இருக்கின்றன.


மக்கள் தொகையும் உணவு உற்பத்தியும்


ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி அமைப்பின் அறிக்கை படி எதிர்வரும் 2050 இல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். தற்போதைய மக்கள் தொகை பெருக்க நிலை நீடித்தால் 2050 ல் இந்திய மக்கள் தொகை 165 கோடியாகவும் சீன மக்கள் தொகை 141 கோடியாகவும் இருக்கும். எனவே மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.1950களை ஒப்பிடும் போது இடு பொருட்களின் விலை 50 - 100 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வேளாண் விலை பொருட்களின் விலையோ 10 மடங்கு தான் அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி திறனும் குறைந்து, விவசாயிகளும் வேறு வேலை பார்க்க போய் கொண்டு உள்ளனர்.இந்த நிலை நீடித்தால் நாம் மீண்டும் அமெரிக்கா மற்ரும் மேலை நாடுகளிடம் உணவிற்காக பிச்சை எடுக்கும் அவல நிலை ஏற்படும். தன் மக்களுக்கு தேவையான உணவை எந்த நாடு சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடிகின்றதோ அந்த நாடே வல்லரசாகும்.
--

4 comments:

  1. //விவசாய படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முன்பு போல் மிகவும் அதிக திறமையான மாணவர்கள் வருவதும் குறைந்து கொண்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அதிக சம்பளத்துடன் எளிமையாக வேலை கிடைப்பதால் மாணவர்களிடையே விவசாய பட்ட படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.
    //

    இதுதான் மிகப்பெரிய சாபக்கேடு

    பொறியியல், மேலாண்மை படிப்புற்கு கொடுத்த முக்கியத்துவம் சிறிதும் வேளாண்மை துறைக்கு கொடுக்கப்படவில்லை

    ReplyDelete
  2. உண்மை தான் நண்பரே!

    ReplyDelete
  3. உண்மை தான் நண்பரே! விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாய நாடான இந்தியாவில் மிகவும் குறைவு. ஆனால் வேளாண் ஆராய்ச்சிக்கு ஒதுக்கீடு தேவையில்லை. ஏனெனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளில் பெருமளவு விவசாயிகளைப் போய்சேரவில்லை. எனவே தற்போதைய முக்கியத்துவம் வேளாண் விரிவாக்கம் மட்டுமே. வேளாண் பட்டதாரிகள் களப்பணியை விட ஒயிட் காலர் வேலையையே விரும்புகிறார்கள். இதுவும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்