Saturday, November 28, 2009

இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 2

சென்ற பதிவில் ஓர் கரைசலைத் தயார் செய்வது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இன்னொரு எளிய வழியைப் பற்றிப் பார்ப்போம்:

பொறி வைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். பல்வேறு வகைப் பொறிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:

விளக்குப் பொறி
இனக்கவர்ச்சிப்பொறி
ஒட்டும் பொறி


இவற்றில் விளக்குப் பொறிகள் வயல்களின் நடுவே 60 வாட்ஸ் பல்பை நேரெதிர் நிலையில் அமைக்கப்பட்ட புனல்களின் இடையில் கட்டி அதன் கீழே ஒரு தட்டில் சிறிது பூச்சிகொல்லி மருந்தை வைத்தால் விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு பொறிகளில் மாட்டிக்கொள்ளும். இவை குறைந்த செலவுதான் பிடிக்கும் என்றாலும் கிராமப்புறங்களில் தொடர் மின்சாரம் என்பது கேள்விக்குறியாக இருப்பதால் இதன் பலன் முழுமையாகக் கிடைப்படு இல்லை.

இனக்கவர்ச்சிபொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச்சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவு கொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொனண்டு தான் இனக்கவர்ச்சிபொறிகள் செயல்படுகின்றன. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிற்து. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. .

இனக்கவர்ச்சிபொறிகள் மூலம் எல்லா விதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது. அவையாவன:

கத்தரி தண்டு துளைப்பான்
வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான்
தக்காளி காய் துளைப்பான்
நெல் தண்டு துளைப்பான்

மேலே கூறியுள்ள பயிர்களில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு 5 - 6 பொறிகள் வைத்தால் போதுமானது.

ஒட்டும் பொறி:

சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகர ஷீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப் பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண்டை, பருத்திப் பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. 1 ஏக்கருக்கு 4 - 5 பொறிகள் வைத்தால் போதுமானது.

இருப்பினும் பூச்சித்தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.

பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது பூச்சி வரும் அறிகுறிகளை நமக்கு தெரிவித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

தற்போதைய அவசர உலகத்தில் மேற்கூறிய பொறிகள் உடனடியாகக் கிடைக்கின்றன. பெஸ்ட் கண்ரோல் இந்தியா என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து விற்று வருகிறது. உபயோகித்துப்பார்த்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

--

1 comment:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்