Friday, December 11, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -5 வேளாண் விரிவாக்கம்

வேளாண் துறையின் மெத்தனப்போக்கு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.இது ஒரு சாம்பிள் தான். இதனைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முறை நான் விவசாயிகள் பயிற்சிக்காகத் தேவையான கருத்துகளைத் திரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசு கட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தை அணுகினேன். அங்கிருந்த ஒரு வேளாண் அதிகாரி எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நிறைய கையேடுகள் கொடுத்தார். ஒரு அறை முழுதும் கையேடுகள் இருந்தன. அவற்றிலிருந்து தேவையானவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அறையையே எனக்கு திறந்து கொடுத்தார். நான் அப்போது அவரிடம் " உங்களிடம் இவ்வளவு இருக்கிறதே, இதை நீங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவது இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை இருந்தாலும் எனக்கு பயன் இல்லை. நான் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூட்டங்கள் நடத்த விரும்பினேன். எனக்கு என் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர் வந்தால் தான் ஜீப் அல்லது வண்டி கிடைக்கும். அவரிடம் கேட்டபோது என்னை அலைக்கழித்து தொந்தரவு செய்யதே என்று கூறி விட்டார். மேலும் எங்கள் பட்ஜெட் மிகவும் குறைவு. எனவே நான் வெறுத்து விட்டேன். நாங்கள் வீண் சம்பளம் வாங்குகிறோம். நீங்களாவது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் எண்னத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு உதவி செய்து நான் திருப்தி அடைகிறேன்" என்றார். இதற்கு என்ன சொல்லுவது?

மேலும் ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

தோட்டக்கலைத்த்றையில் ஒரு திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஒரு ஒன்றியம் நகர்ப்புறம் சார்ந்தது. அதற்கும் ஒரே அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பொறுப்பு அதிகாரி தன்னாலான முயற்சியை செய்து விட்டு, தகுந்த விவசாயிகள் கிடைக்காததால் தன் இலக்கை எட்ட மாவட்டத்தின் வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்ய தன் மேலதிகாரியின் அனுமதியும் பெற்றார். இதன் பின் வேறு ஒரு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளை எங்கள் மூலம் கண்டறிந்தார். ஆனால், புதிய ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியோ அதனைத் தடுத்துவிட்டார். தன் எல்லைக்குள் மற்றவர் எப்படி வரலாம் என்பதே அவரின் கேள்வி. அதனால் இந்த அதிகாரி ஒதுங்கிக் கொண்டார். உரிமை கொண்டாடிய அதிகாரியோ இவரை விரட்டியபின் ஆள் தென்படவே இல்லை. இவரது இந்த சேவைக்கு பாரத ரத்னா விருதே அளிக்கலாம்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நல்ல அதிகாரிகள் கூட வேலை செய்ய இயலாமல் கைகள் கட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையை நமது வேளாண் துறை உருவாக்குகிறது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்படுகிறதோ இல்லையோ, இவர்களின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு விவசாயிகள் துன்பம் அடைகின்றனர்.

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் காண்போம்

--

1 comment:

  1. வணக்கம்... விவசாய தகவல்களை ஒரிடத்தில் தொகுக்கும் பொருட்டு விவசாய கலைக்களஞ்சியம் எனும் அக்ரி பீடியா தளத்தினை உருவாக்கியுள்ளோன். இதில் உங்கள் பதிவுகளையும். உங்கள் வலைபக்க இணைப்புகளையும் அளித்து விவசாய சமூகம் பயன் அடைய உதவுங்கள். வருக. www.agripedia.in மேலும் விபரங்கள் பெற 9994396096 என்ற எண்ணிற்கு அழைக்கவும் .இந்த அக்ரிபீடியா சேவை எவ்வித லாப நோக்கமும் இன்றி ஆரம்பிக்கப் பட்டுள்ள தளம். இதில் வருகை புரியும் அனைவரும் கட்டுரைகளை பதிவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப் பட்ட தளம்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்